வெள்ளி, மே 15, 2015

எண்ணும் எழுத்தும்

குறிப்பெழுதி வைக்காமலே 
எங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனத் 
தெரியுமளவு 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 


பார்க்கும் பெண்களெல்லாம் 
சியர்கேர்ள்ஸ் ஆகவே 
தென்படாதிருக்க 
ஐ பி எல் ஸ்கோர் போர்டுகள் தவிர 
மற்றவையும் கண்ணில் படுமளவு 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 

யார் யாரைக் 
கட்டிக் கொள்ள வேண்டும் 
அல்லது 
யார் எதைக் கட்டிக் கொள்ள வேண்டும் 
என்ற சர்ச்சைகளிடையே 
முகவரி மறந்த 
திருவிழாக் குழந்தையாக நிற்காமல் 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 

எவரோ உழும் நிலமும் போகுது 
நாம்  ஆடும் இணையக் களமும் போகுது
என்று அறியாமல் 
யாரோ ஒரு பெண்ணின் படம் இணைத்து 
புரளி பரப்பி கிளராதிருக்க 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 
20 5 15 ஆனந்த விகடன் -சொல்வனம் 

புதன், மே 13, 2015

சாமியின் ஆட்டம்

ஒன்றுமறியாப் பருவத்தின்
விளையாட்டு அது
பாசி மிதக்கப் படிக்கட்டு மூழ்கி
குளம் தளும்புகையில்
எட்டுபடி எங்க போச்சு
சாமி வந்து தின்னு போச்சு ...
வற்றி வற்றி ஒருநாள்
வரிசை பெருகும்போது
எட்டுபடி எங்க வந்துச்சு
சாமி வந்து துப்பி போச்சு ....
தின்னுவதும் துப்புவதுமாய் இருந்த
சாமியின் ஆட்டத்தில்
கரையும் முழுங்கி
தரையும் முழுங்கித்
தண்ணீரும் முழுங்க
வந்தவனுக்கு
சாமி என்றே பெயர் வைத்திருந்தார்கள்
அவன் துப்பியதெல்லாம்
பான் பொட்டல எச்சில் மட்டுமே

ஞாயிறு, மே 10, 2015

பருந்தாவதன் அசாத்தியம்

sparrow 300தூசி.....
துடைத்துவிட்டேன்
இதுவாவது
முடிகிறதே
*******************
தெரியாமல் இருந்திருக்கலாம்
சிரித்தபடி
கடந்திருப்பேன்
*******************
நிறையப் பேசினோம்
நேற்றைக்கும் இன்றைக்கும்
ஆடைதான் மாற்றம்
பேசுவோம்
*******************
பருந்தாவதன் அசாத்தியம்
மட்டுமல்ல
உயர் அழுத்த மின்வடம்
பற்றியும் சொல்லிவிடவேண்டும்
ஊர்க்குருவிக்கு

சரியாய் இருப்பதன் அடையாளம்

சிலநேரம் வார்த்தைகள் சரிசெய்கின்றன
சிலநேரம் மௌனம்
உற்றுப்பார்த்துக் கொண்டேயிருப்பதும்
ஒன்றையும் பார்க்காமலிருப்பதும் கூட
சரிசெய்யத்தான் வேண்டுமா
என்ற கேள்வியும்
சரியாகிவிடாதா என்ற தாபமும்
சரியாகத்தான் எல்லாம் இருக்கிறதா
என்ற சலிப்பும்
நமக்கு மட்டுமேன்
சரியாவதே இல்லை என்ற இரங்கலும்
இதற்கெல்லாம் நடுவில்
சரியாகியிருந்தால்
அது
அடையாளம் தெரியாமலிருக்கவும்
வாய்ப்பிருக்கிறது

திங்கள், ஏப்ரல் 13, 2015

பயணங்கள் முடிவதில்லை

மனிதர்களுக்கென்ன

ரயிலேறிப் போய்விடுகிறார்கள்  


கசிந்த கண்ணீருக்கும்

குலுக்கிய கைகளுக்கும் 

மென்தழுவலுக்கும் 

மௌன சாட்சியாய்க் கிடக்கும் 

நடைமேடையையும் 

உயரத் தூண்களையும் 

கழிப்பறை வாடை கருதாமல் 

பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி 

நிற்கும் 

பெயர் தெரியா இம்மரத்தையும் 

என்ன செய்வது…..


சனி, ஏப்ரல் 04, 2015

4 4 15-முகநூலில்

அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...தளைகளைத் தளர்த்திக் கொள்வது...
******************************************************
ஒரு புன்னகையால் 
உயிர்ப்பிக்கலாம் 
ஒரு புன்னகையால் 
கொல்லலாம்
புன்னகையால் மட்டுமல்ல....

*****************************************************
சொல் 
எல்லாம் 
சொல்லிவிடுமா

*****************************************************
நம்பிக் கொண்டே 
நடக்கிறோம் ...ப்போம்
எங்களுக்குத் தெரிய வேண்டாம் 
வேறெதுவும்

***************************************************
துயரங்களின் 
பின்வாசல் மட்டும் 
தெரிந்தால் போதும்

**************************************************
தேடிக் கொண்டிருந்தது
உண்மைதான்
இந்தப் பல்லி ஒலிக்காமல்
போய்த் தொலைந்திருக்கலாம்
***************************************************
நீளும் வரிசை 
முடிவதை நினைத்தால்தான் 
அச்சம் 
தொடக்கத்திற்குப் போய்விடவா...
******************************************************
யாராவது சொல்லுங்கள் 
எல்லாம் பொய் என்று 
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் முடிந்தது என்று 
யாராவது சொல்லுங்கள்
எதுவும் நடக்கவில்லை என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் சொல்ல வேண்டாமென்று
***********************************************************
திறப்பாய் 
என்று காத்திருக்கையில்
இன்னொரு பூட்டு
*********************************************************
விட்டுவிடலாம்தான் 
விட்டால்
*****************************************************
இருப்பு 
இருப்பது மட்டுமன்று
********************************************************
ரத்தத்தைவிட
அடர்த்தியான கண்ணீரையும்
வழித்தெறிகிறது
அதே விரல்
துடைத்தெறிகிறது 
அதே கைக்குட்டை
காய்ந்துவிடும் எப்போதும்போல்
********************************************************
4 4 15-முகநூலில் 

செவ்வாய், மார்ச் 31, 2015

அங்கே ஒரு கண்

திரையிடுக்கில் நின்றபடி 
ஆடிக்காட்டும் மிஸ்சும்
அங்கே ஒரு கண் 
அவையில் ஒரு கண்ணாய் 
ஆடும் குழந்தையும் 
ஆண்டுதோறும் கிடைத்துவிடுகிறார்கள் 
சம்பளம் எப்படியிருப்பினும் 

25 3 15விகடன் சொல்வனத்தில் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...