திங்கள், அக்டோபர் 31, 2016

யுகங்கள் கடந்து

நைந்த மனதோடும் அதைவிட 
நைந்த தேய்பஞ்சோடும் 
ஒட்டிக்கொண்டிருக்கும் சோப்பை
முடிந்தவரை துடைத்து துடைத்து
தேய்ப்பது அன்றாட நிகழ்வு
கனகத்துக்கு
ஆனாலும் பொழுது மாறி விடிந்தது
மூடிய கதவுச்சமூகத்தின் 
மூன்று வீடுகளுக்கான பணியாளாக வந்த
நாளிலிருந்து வாழ்க்கை 
சிலபல சில்லறை சௌகரிய 
கணங்களைக்கொண்டு வந்திருந்தது.
குழாய் திறந்தால் கொட்டும் தண்ணீர்
மிஞ்சியதென்றாலும் வண்ணமான உண்டி
மண்ணெண்ணெய்க்கு அலையா
மகிமை மிகு வாழ்வு
மற்றபடி ஏங்குவதெற்கெல்லாம் நேரமுமில்லை
எதைப்பார்த்து ஏங்குவதென்று
தெரியவுமில்லை
அதே தேய்பஞ்சும் சோப்பும்தானென்றாலும் 
சலிப்பில்லை
அவர்கள் மொழி அவர்கள் வழி
அவர்கள் கருவி அவர்கள் தரை
பழகத்தான் நாள்பிடித்தது
தப்பிப்பிழைத்து தடுமாறி 
வந்துவிட்ட சமையலறைக்குழாயடி ஒற்றைக்கரப்புக்கு
ஊளையிட்ட மக்களைப்பார்த்து
சிரிக்கிறாள்
எத்தனை உரையாடல்களை
இடுக்குகள்தோறும் நுழைந்து 
வெளியேறும் கரப்புகளோடு 
நிகழ்த்தியிருக்கிறோம்
தலை துண்டானாலும் ஒன்பது நாள் வாழும் கரப்பு
பசியில் உயிர்விடும் என்றறிந்து
இனமென்று அடிக்காது துரத்தியிருக்கிறோம்
பாற்சோறு போட்டும் பதமான உணவிட்டும் 
நாய்பூனை வளர்ப்போருக்கு
தானே ஒளியும் தனிக்கரப்பிடம்
என்ன அச்சம் என முனகிக்கொண்டாள்
கூட்டிப்போகலாம் தன்னோடு மாலை 
எனப்பரிவோடு யோசித்தபோது
"படம் நிச்சயம் ஹிட் ஹிட்" என ஓடிவந்தான் ஒருவன்
தொடர்பில்லாத செய்தியென
ஒருகணம் திரும்பித்திரும்புவதற்குள்
கரப்பைக்காணோம்
காலந்தோறும் வாழ்வதைக் கற்பதென்னாளோ 
கனகம் முனகியது கரப்புக்குக் கேட்டது


இருபத்தோராம் நூற்றாண்டின் திருவிளையாடல்

கருவிகளை எவ்வளவு 
கருணையோடு வடிவமைத்திருக்கிறோம்
அழித்துவிடு என ஆணையிட்டாலும்
தெரிந்துதான் சொல்கிறாயா
என்கிறது
நிச்சயமாக,சத்தியமாக
ஈசன்மீது ஆணையாக என
ஏ பி நாகராஜனாகும் வரை
விடாதிரு நீயாவது



இதுவும் பண்டிகைதான்

யாருடைய கருணைவழி 
பண்டிகை கொண்டாட்டத்தையோ நம்பி 
வேகின்றன பலகாரங்கள்
யாருடைய கனிவையோ நம்பி
காத்திருக்கின்றன 
மலிவுவிலைப் புத்தாடைகள்
சேரந்து கொண்டாட வந்திருக்கும் 
பண்டிகை பற்றி உணர்விலா
உறவுகளின் வீம்பில்
சில கண்ணீரத்துளிகளை
அடுப்பின் தீயில் சொரிந்து
கருணை காக்கும் தெய்வங்களின்
அருளாசியில்
நிரம்புகிறது குவளைகளின் இலக்கு
கோடிகளை விருப்ப நாயகன்
இழக்காதிருக்க ஓடிக்கொண்டிருக்கிறான் 

வந்த மகன் வெந்த பலகாரச்சுவையறிய
நேரமின்றி
யாருக்காக..இது யாருக்காக
எந்த நாளில் பாடியிருக்கிறாள்
அவள்
ஆயிற்று தீபாவளி



சுற்றிய மத்தாப்பூ

எத்தனை தீபாவளிகளைக் கடந்துவிட்டோம்
தூங்கிவிழுந்தபடி மருதாணி வைத்துக்கொள்வதும்
தைக்க கொடுத்த பாவாடை 
கைக்கு வருமா என்பதுமே 
கவலையாக இருந்த தீபாவளிகள்
வளையலோ,பொட்டோ வாங்கிக்கொள்ள 
நமஸ்காரங்கள் கைகொடுத்த தீபாவளிகள்
மழை கெடுத்த பண்டிகையை
உள்வீட்டு சங்குசக்கரங்களோடும்
பொட்டுவெடிகளோடும் கடந்த
தீபாவளிகள்
கண்ணில் விழுந்த அரப்புத்தூளை
மறந்து அதிரசம் ஏந்திய 

கைகளில் நிரம்பிய தீபாவளிகள்
அவ்வருட உறவின் இழப்பு 

செலவைக்குறைத்த நிம்மதியில்
பெரியோர் இருக்க 

அர்த்தம் ஏற்காது
அழுகையினால் முகம் வீங்கிய
தீபாவளிகள்
பாதி வெந்த நேரம் முதல்
பள்ளியிலிருந்து திரும்பும் நேரம்வரை 

முறுக்கு கிறுக்குகளாய்ச் சுற்றிய தீபாவளிகள்
ஒற்றைப்புத்தாடையை காட்டிமகிழவே 

பள்ளிவேலைநாளுக்கு காத்திருந்த தீபாவளிகள்
கண்டதும் அதிகமில்லை
தின்றதும் அதிகமில்லை
உடுத்தியதும் ,படுத்தியதும்
அதிகமில்லை
மிட்டாய்ப்பெட்டி சுமந்து
அன்றாட உடுப்போடு ஊர்சுற்றவும்
உலகுசுற்றவும் கற்ற மக்களே
நினைவுகளே அதிகம்
எங்களுக்கு


படம்இணையத்திலிருந்து 
எஸ்.இளையராஜாவின் தூரிகை  



புதன், அக்டோபர் 26, 2016

பெயரில் என்ன இருக்கிறது

குடை என்பது நிழல்
நிழல் என்பது குளிர்ச்சி
குடை என்பது காப்பு
வீழ்ந்த வெண்கொற்றக்குடைகளையும்
காக்க மறந்த குடைகளையும்
காற்றோடு பறந்த குடைகளையும்
நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடைமிளகாய்
எனப்பெயர்
அது...அது...ஆங்
அது குடைமிளகாயில்லை
குடமிளகாய் குடமிளகாய்
பதிலில் தொடங்கியது கேள்வி
குடம் நீர் நிரப்பிவைப்பது
நீர் தண்மை மிக்கது
தன்மையெலாம் சரிய
நீரிலாது ஆடும் குடங்களையும்
அடித்துக்கொள்ளும் குடங்களையும் 
நினைவூட்டுகிறதே
இதற்கு ஏனம்மா குடமிளகாய் எனப்பெயர்
போடா
குடையுமில்லை குடமுமில்லை
இது கேப்சிகம்
Capsicum

கையெழுத்து கலைக்கும் நினைவுகள்

எப்போதோ உதிர்ந்த பன்னீர்ப்பூ
சரசரவென சகடையில் 
ஏறி இறங்கிச்சரிந்த வாளிநீர்
ஓரம் பெயர்ந்த துளசிமாடம்
மஞ்சளாய்ப்பழுத்து மட்டை தொங்கும் 
கமுகமரம்
சுருள் சுருளாய்ப்பலவண்ண
குரோட்டன்
செண்டுமல்லிப்புதரின் அருகே
போகும்போதும் வரும்போதும்
குத்தும் எலுமிச்சை
கறுப்பு வெள்ளையில் நிலைத்த
சித்திரம் தருவது 
அலுத்துக்கொள்ளும் பெருமையாக இருந்தது
எப்போதாவது போய்ப்பார்க்க
உரிமையிருந்தவரை
கையெழுத்தும் காசும்
எதையும் மாற்றும் அழிக்கும்
இதையும்

எண்ணால் கட்டியது

ஒவ்வொரு வீட்டுக்கும்
ஒரு அடையாளம் இருந்தது
தொழிலாலோ,தோற்றத்தாலோ,
பூர்வீகத்தாலோ
அடைமொழி சூட்டி
அழைத்துக் கொண்டிருந்தோம்
கட்டிட மாற்றங்கள் கூட காரணிகளாகும்
புதுவீடு,மாடிவீடு என
ஒன்றுபோல இரண்டிருந்தால்
பிள்ளைகளால் பேர் சொன்னோம்
எங்கள் ஊர் அஞ்சல்காரரும் 
எண்களை எழுத்தில் மட்டுமே பார்ப்பார்
அடுக்கிவைத்த தீப்பெட்டிகளில்
குடியேறியபின் எண்ணே கண்ணானது
ஒன்று கூடினாலும் குறைந்தாலும்
போகுமிடம் சேரமாட்டீர்
கறாராய்க் குறியுங்கள்
இப்படியாரும் இங்கில்லையென
அடுத்த கதவின் இடுக்கும் முறைக்கும்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...