எங்களிடம் நீர் இருந்தது

எங்கள் கிணறுகளில் நீர் இருந்தது
பத்து வீட்டுக்காரர்கள் வந்து இறைத்தபோதும்
பகிர்வதில் கவலையின்றி இருந்தோம்
எங்கள் குளங்களில் நீர் தளும்பியது
உயர்த்திக்கட்டிய உள்பாவாடையுடன் 
கதையளந்தபடி துணி சவக்காரத்தையே 
இரண்டு இழுப்பு தேய்த்து 
உடைந்த கரையின் சில்லில் 
மஞ்சள் உரசிக்குளியல் முடிப்பதில் 
கூச்சமின்றி நடந்தோம்
பிழிந்த துணி தோளிலும் 
தெருமுனைக்குழாயின் குடம் இடுப்பிலுமாக
நடந்தபோதும்
நனைந்த உடலின் வளைவுகள் 
விரசமாகத் தெரியாத சகமாந்தர்
உடன் நடமாடினோம்
எங்கள் ஆறுகளில் நீரோடியது
கரையோர மரங்களின் பூக்களும்
வறண்டகாலத்தில் விழுந்திருந்த இலைதழையுமாக
புனல் வந்தபோது ஒரு துறையில்
பெருக்கு கொண்டாடினோம்
பிள்ளைகள் மதகிலிருந்து சொருகு நீச்சல்பழக
அப்பன்கள் ஆடுமாடுகளை
வைக்கோல் பிரியோடு தேய்த்துக்கொண்டிருந்தார்கள்
கிணறுகளில் நீரிறைக்க வலுவில்லாது 
பொருத்திய
மோட்டார்கள் பரிதாபமாக முனகும்போது 
விழுந்த நீரிலும் வண்டல்
பிடித்த மனதிலும் அதுவே
மீன்வளர்க்க ஏற்றதாக
குளமும் குட்டையும் மாறியபோது
வீடெங்கும் குளியலறை கட்டுமளவு
முன்னேறிவிட்டோம்
யார் வீட்டு குளியலறையை யாரோ 
எட்டிப்பார்க்கும் நாகரிகத்திலும்
எங்கள் 
ஆறுகளா....
மணல் கிடங்குகளாகி வெகு காலம்
தண்ணீரை அனுப்புவாயா இல்லையா எனத்
தண்டவாளங்களில் விழுந்து கிடக்கிறோம்
விழுந்துதான் கிடக்கிறோம்

படம் .நன்றி sunderarajan 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்