ஞாயிறு, அக்டோபர் 16, 2016

இரட்டை வாத்து டாலர் சங்கிலி

இரட்டை வாத்து டாலர் சங்கிலிகள்
பெண்பிள்ளை
பள்ளி தாண்டுமுன் செய்துவைப்பது 
எழுபதுகளின் 
பொறுப்பான குடும்பத்தின் அடையாளமாம்
அத்தை சொன்னாள்
வெள்ளைக்கல் பதித்து ஓரிரு சிவப்புக்கல் 
அலங்காரம் கொண்ட வாத்துகள் 
வசதியுள்ளவர் வீட்டுப்பெண்களின் 
தாம்புக்கயிறு
சங்கிலிகளின் நுனியில் நீந்திக்கிடந்தன
கல்வைத்து நட்டப்பட கணக்கு பார்க்கும்
 நகைச்சீட்டு அம்மாக்கள்
 தங்கத்தில் தகடு போல 
வாத்துக்களை உருவாக்கி 
கண்ணுக்கு ஒரு சிவப்புக்கல் வைத்து 
மகள்களை திருப்திசெய்தனர்
வாத்துகள் நீந்துவது தண்ணீரிலல்ல 
கண்ணீரில் என்பதைக் 
கண்டுகொண்ட சிலபெண்கள் 
கண்டுபிடித்தனர் தாமரைப்பூ டாலர்களை
தவறாமல் இலை சேர்த்துச்செய்யுங்கள் என்று 
அத்தை சொன்னாள் 
தண்ணீரோ கண்ணீரோ ஒட்டாத 
மலர்ச்சிக்கான கனவில்.

எப்போதம்மா டாலர் சங்கிலிகள்
வழக்கொழிந்தன என்றபோது
அத்தைக்குக் கேட்காதபடி
அம்மா சொன்னாள்
பத்து பவுன் போட்டாலும்
புலிநக டாலரோடு மாப்பிள்ளைக்கு 
சங்கிலியென பங்கு கேட்ட 
உன் மாமன் காலத்துக்குப்பின்தான்
வாத்துகளையும் தாமரைப்பூக்களையும் 
கைவிட்டோம் என்று.

வாத்துகளாவது கரையேறினவே
எனப்பெருமூச்சு விட்டபடி
மாப்பிள்ளையின் கைச்சங்கிலிக்கு 
பணம்கட்டி முடித்தாள் அக்கா


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...