செவ்வாய், அக்டோபர் 18, 2016

காலத்தில் உறைந்தவள்

காதுவளர்த்த காலத்தின் நிறைவில் வந்து சேர்ந்த 
வளையங்கள் காதை இழுப்பதில் 
தண்டட்டிகளின் தங்கைமுறை என்ற 
அவதூறு உலவியது
வலுவில்லா எல்லா வதந்திகளையும்போல
அது மறைய
காதுகள்தோறும் வளையங்கள் கச்சேரி தொடங்கின
ஒட்ட வளைந்தவை மட்டுமல்ல
வாத்துகளை,தாமரைப்பூக்களை
,மணிகளை,முத்துகளை 

இணக்கமாக சேர்த்துக்கொண்டு
ஆடிக்கிடந்தன
இளமையின் அடையாளமான மெல்லிய
வளையங்களைப் பட்டையாக்கி 

வளமைக்காக ஒரு குண்டும் நட்சத்திரமும் 
சேர்த்துக்கொண்ட பெண்களால்
அவற்றைத்துறக்கவே முடியவில்லை
லதா மங்கேஷ்கர் பாடும்போது 

அவை ஆடுமா இல்லையா
சுசீலா மாற்றிவிடுவாரா
ஷோபனா ரவிக்கு செண்டிமெண்டா 

என்றெல்லாம்
சமூகமே கவலைப்பட்ட ரிங் எத்தனை
தங்கவளையங்களன்றி
பிளாஸ்டிக்,சில்வரில் சின்னதாய்த்தொடங்கியவை 

விரிந்து விரிந்து 
தோளைத்தொட்ட விட்டங்களான போதுதான்
புத்தகங்களை 

நெஞ்சோடு அணைத்தபடி 
வீதிகளில் இறங்கிய வரலாறு தொடங்கியது
ரிங் மாஸ்டர்களாக ஆண்களே நிலைத்த மண்ணில் 

ஆடும் வளையங்கள் 
ஆயிரக்கணக்கான பெண்களின் 
அடையாளமானது
லட்சம் மாதிரிகளைக் குவித்து
காதணி திருவிழா நடத்தும்
கடைகளேதுமில்லா காலத்தின் பிரதிநிதியாக 

வளையம் கேட்டு
வந்து நிற்கும்அபூர்வ பெண்களின்முன்

 திகைத்துதான் போகிறார் விற்பனையாளர்
காலத்தில் உறைந்தவள் எப்படி வந்தாளென..


இந்தக்கவிதை  எழுத்தாளர் ச.சுப்பாராவ் அவர்களின் நேயர்விருப்பம் 
எனவே  புகைப்படமும் இட்டு  காலத்தில் உறைந்த  காயத்ரியோடு (திருமதி சுப்பாராவ் ) இந்தக் கவிதையைப்  பகிர்வது மகிழ்ச்சி .



1 கருத்து:

rao சொன்னது…

ஆஹா.. நன்றி.. நன்றி...ஒரு நல்ல கவிதை பிறக்க நான் காரணமாக இருந்ததை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...