வெள்ளி, அக்டோபர் 14, 2016

தோழா சார்

சார் சார் எனக்கூப்பிடாதே
சார் என்பது அடிமைசாசனம்
சார் என்பது நிறங்களின் பேதத்தால் எழுதப்பட்டது
சார் என்பது அடியோடு குனிந்த சார்பு
என்றெல்லாம் சொல்லும் தோழா
எல்லா சாரையும் சார் எனக்கூப்பிட்டே வளர்ந்துவிட்டேன்

பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே
சார் என அறியப்பட்ட ஊர் எங்களது
பின்னர் டீச்சர் வீட்டு சார்களை
பஞ்சாயத்து ஊழியர் சார்களை
பார்த்துக்கொண்டிருந்தபோதே
அண்ணன் தம்பி மாமன் மச்சான்
என்றழைக்கப்பட்ட
அண்டை அயலார்களும்
சார் பட்டத்துக்குத் தேர்வானார்கள்
சிற்றப்பன் பெரியப்பன் முறைகளும்
சார் என்பது சௌகரியமானது

மாமனை மருமகனும் 
சார் என விளித்து சாந்தி பெற்றார்
அதிகாரத்தின் படிகளை
நல்ல சார் கற்களால்தான் கட்டினோம்

பலசரக்கிலிருந்து பாஷாணம் வரை விற்குமிடமெலாம்
சார் என்று விளிப்பவரே
சந்தையைப் பிடித்தார்.

கணவனும் சார்தான்
எங்க சார்"
இவ்வளவுக்குப்பிறகு
திடீரென்று தோழமை மரியாதை
ஏதுமில்லை அதில்
துடைத்தெறி என்கிறாய்
சாதியொட்டு் துறந்த தெருப்பெயர்கள் கூட பழகிவிட்டன
சார் ஒட்டு துறந்தால்
தலையைக் காணாதது போல் தோன்றிடுதே
என்ன செய்வேன் தோழா சார்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...