தூண்கள் இல்லாத வீடு

சிலநேரம் வானவில்லுக்காகக் 
காத்துக்கொண்டிருக்கிறோம் 
எப்போதோ பார்த்தது 
பிள்ளைக்குக் காட்டலாமே என்று
மேகமே திரளாவிடில் என் செய்ய

****************************************************************
எவ்வளவோ இலைகள் உதிர்ந்துவிட்டன
இந்த உலகம் தோன்றிய அல்லது 
இலைகள் தோன்றிய நாளிலிருந்து
ஆனாலும்
இதோ இக்கணத்திலும் 
துளிர்த்துக்கொண்டிருப்பதை
நீங்கள் நம்பிக்கை என்கிறீர்கள்
அவர்கள் அறியாமை என்கிறார்கள்
நான் இயற்கை என்கிறேன்
அந்த துளிர் எதுவுமே சொல்வதில்லை


******************************************************************
திரும்பத்திரும்ப சொல்லப்படும் 
விளக்கம் அலுப்பூட்டுகிறது
திரும்பத்திரும்ப கேட்கப்படும்
கேள்வி பதிலை இழக்கிறது
திரும்பத்திரும்ப நடக்கும்
நிகழ்வில் கவர்ச்சி தேய்கிறது
திரும்பத்திரும்ப பகிரும்
செய்தியின் நிறம் மாறுகிறது
அதனாலென்ன
திரும்பத்திரும்ப எல்லாம்
நடக்கத்தான் செய்கிறது


*************************************************************************
சொன்னால் போதும்என்ற 
அழுத்தம் நெருக்கும்போதெல்லாம் 
யாரிடமாவது சொல்லித்தீர்க்கிறீர்கள்
அந்த சொற்களுக்குப் புரிவதேயில்லை
அவற்றை நீங்கள் 

மாத்திரைகளின் அந்தஸ்தில் வைத்திருப்பது
சொல்லிக்கொள்ளவே 

வைக்கப்பட்ட தூண்களும் இல்லாத வீட்டில்
வசிக்கும் காலத்தில் என்னதான் செய்வீர்கள்.


**************************************************************************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்