வியாழன், மே 13, 2021

சித்தம் தெளிய

 

தூர மலைமுகட்டுக்குப் பின்னொளிரும்
வெளிர்சிவப்பு 
காய்ந்தும் தேய்ந்தும் அதை நோக்கிச் செல்லும்
வளை பாதையின் புங்கைப் பச்சை,
காற்று தாளாது படபடக்கும் இளமஞ்சள் 
நெல்வயல்கள் 
பனையோடு ஏறும்  கோவைக் குலகொடிகள் 
மல்லிகை வெள்ளரி தூக்கி ஓடிவருபவளின் 
வெற்றிலைச் சாறு  
அழுத்தமான வண்ணங்கள்
அவ்வப்போதைய மழையில் 
கரையக் கரைய 
அதே ஆவேசத்தில் அரிவாள் ஓங்கும்
அய்யனாரின் கண்கள் 
பக்கத்தில் 
அரைக்கல் 
மண்டபத்தில்
எடுத்தவள் மனம்போல் 
கத்தரிப்பூ புடவையில்  காட்சி தரும் 
அங்காளியின்  முகத்தில் எந்தப் புகாருமில்லை 
ஏழெட்டு மாதங்கழித்து 
அரைப்படி மாவிளக்கும்  
வண்டி வண்டியாய் வேண்டுதல்களுமாக 
வந்திருக்கும் 
உங்களுக்கு மட்டுமல்ல 
அவளுக்கும் தெரியும் 
வேறு வழியில்லை என்று.
சூலத்தின் ஒற்றை எலுமிச்சையில் 
காலத்தின் விடாய் தீரப் 
பருகிக் கொண்டிருக்கிறாள் 
துரு பொருட்டில்லை அவளுக்கு 
ஊருக்குப் போக வேண்டும் 
ஊருக்குப் போக வேண்டும் என்று
நீங்கள் புலம்பும் போதெல்லாம் 
புரைக்கேறுவதை 
பக்கத்தில் ஓடும்
நட்டுவாக்கலி,சாரையிடமெல்லாம் 
சலிப்பும் பெருமையுமாய்ச் சொல்லியபடி 
காத்திருப்பவள்தானே 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...