நேற்றுதான் கவனித்தேன் புதிய தும்பைச்செடிகள் பூக்கத்தொடங்கியிருந்தன
பழைய செடிகள் இருந்த இடத்தில்
சாக்கடை வெட்டியிருந்தார்கள்
இன்றோ
புதிய செடிகளை மூழ்கடித்து
குப்பை மிதக்கும் மழைவெள்ளம்
எனக்குத்தெரியும்
நாளையோ மறுநாளோ
இது வடிந்தபின்
ஒன்றுமே நடவாதது போல தும்பை பூத்திருக்கும்
*******************************************************
மிதிபாகல்,பீர்க்கு
பிரண்டை
நாட்டுக்கொய்யா
ஆவாரம்பூ ,குப்பைக்கீரை,கருந்துளசி
இரண்டு கூடையும் ஒரு விரிப்புமாக
அரிதானவற்றைச் சேர்ப்பிக்கிறவள்
சில வாரங்களாகத்தான்
மீண்டும் விரித்துக் கொண்டிருந்தாள் அந்தச்சிரிப்பை
அவள் சேலையைப் போலவே அதுவும் வெளிறிப் போயிருந்தது
எல்லா இலை தழைக்கும் பெயர் தெரியும்
காற்றுக்குப் பெயர் உண்டு என்பதுதான் வினோதம் அவளுக்கு
சிறுகீரைக்கட்டை
"பிள்ளைத்தாச்சி சூப்பு வெச்சிக்குடி"
என்று சும்மா
சேர்த்துக் கொடுத்தவள்
இந்த மழை ஈரத்தில்
எங்கு காய்வாளோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக