வீட்டிற்கு ஒரு நாற்காலி
கூட இருக்காது
வீட்டுத்தலைவர்களுக்கும்
திண்ணையே போதுமாயிருந்தது
மறைந்து நின்றே பேசிப்பழகிவிட்ட ஆத்தாக்களுக்கும்
நாற்காலி கிடைக்கும்
இறுதி நாளில்
பல்லக்கில் ஏற்றியவுடன்
கழுவிக் கையளிக்கப்படும்
நாற்காலிகள்
ஊருக்குள் ஒன்றிரண்டு வீட்டிலுண்டு
மழுமழுவெனத் தேய்த்த
பிடிகளும்
வேலைப்பாடுள்ள கால்களுமாக
ஒற்றை நாற்காலி
அந்தஸ்தின் அடையாளம்
பிரம்பில் பின்னிய நாற்காலிகள் நான்கு வாங்கியபோது
அத்தை
பார்க்க வருவோர்க்கு தண்ணி கொடுத்து மாளலை
எனப் பெருமையோடு அலுத்துக்கொண்டாள்
ஆளரவமற்ற பொழுதுகளில்
அமர்ந்தும் பார்த்தாளாம்
ஒயர்பின்னலைக்கற்று
நாற்காலிகளால்
அமர முடிந்தது
பார்வையிழந்த நண்பருக்கு
பள்ளிகளில் கிடைத்த
பெஞ்சுகள் வீட்டில் கிடைக்க
வெகுகாலமானது
பெண்களுக்கு
தனக்கென்று ஒரு நாற்காலி கிடைத்த மகிழ்ச்சியில்
தனம் டீச்சர் சிந்திய கண்ணீரைப் பிள்ளைகள்
சாக்பீஸ் தூள் விழுந்துருச்சு
புது டீச்சர் கண்ணுல என மொழிபெயர்த்தார்கள்
மனைவியை அனுமதிக்கத் தோன்றாத நாற்காலியில்
மகளை அழகு பார்த்தவர்களின்
மருமகள்கள்
இன்னும் சில பத்தாண்டுகள்
கால் கடுக்க நின்றே பரிமாறினர்
நாற்காலி பழக்கியதே
திரையரங்குகள்தான்
மணற்குவியலையும்
பேக்பெஞ்சும் விட்டு
ஒரு ரூபாய் செலவில்
சமத்துவத்துக்கு முன்னேறிய தலம்
மடக்கு நாற்காலிகளின்
வருகையில்
மாதத்தவணையின் கருணையில்
வீடுகள்தோறும் நடந்தது
கிரீச்சென்ற மங்கல இசை முழங்கிய
இருக்கைப்புரட்சி
இதோ
வண்ணம் வெளிற வெளிற
கடையில் காத்திருக்கும்
பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு
உண்டு
வாசல்தோறும் கிடக்கும்
வாத்சல்யம்
குட்டி ராஜாராணிகளையும்
குனிந்து
ஏற்றுக்கொள்ளும்
அளவான இதயம் அவற்றுக்குத்தானே இருந்தது
மற்றபடி
நாற்காலிகளுக்காவே
நாணங்கெடுவோர்
பற்றிச் சொல்வதை
நாற்காலிகளே விரும்புவதில்லை
தான் மட்டுமே நிரந்தரம்
அமர்வோர் அல்ல
என்பதை நினைவூட்ட
சட்டென நொடித்துக்காட்டி
நகைக்கும் ஒலி கேட்கிறதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக