வெள்ளி, நவம்பர் 11, 2011

இருப்பதும் இல்லாததும்...


சிறகுகூட சுமைதான்

இறகு இறகாய்
உதிர்த்துவிடலாம் ...

உதிரும் இறகை
தொலைதூரக்
கிராமத்துக் குழந்தையொன்று
சொத்தாக சேமிக்கக் கூடும்..
மெத்தனமாக
வயசாளி ஒருவர்
காது குடைய வைத்துக்கொள்ளலாம்

கனமின்றி
காற்றில் மிதக்கையில்
யாராவது படம் பிடிக்கலாம் ...
வீண்குப்பை
என
பெருக்கித் தள்ளி
கொளுத்தியும் விடலாம்...

எப்படியாவது
இருந்துவிட்டுப் போகட்டும்
பறக்காத சிறகு.... 

செவ்வாய், நவம்பர் 08, 2011

சுற்றம் சூழ...

சின்னவன்
தோழர்களுக்கு
உணவு அடுக்கில்...

பெரியவனும்
அவன் தோழனும்
சாப்பிட இன்னொரு பாத்திரம்...

எப்படிப் பார்த்தாலும்

.............
குறைகிறதே ...?
இன்னும் நாலு...?


சுண்டெலிகள்
ஆளுக்கொரு மோதகம்
இழுத்து ஓடியதாகத 
தகவல் கிடைத்தது...

என்னைத் தவிர 
உனக்கு 
யார் என நினைத்தது 
தப்புக் கணக்கோ பிள்ளையாரே? 
உதிர்ந்தது....


நந்தியாவட்டை
கழுத்துவழி  நீண்டு
குறுகுறுக்க
திண்டாக மழுமழுத்த
திண்ணைக்கு
அப்புறம் நின்ற
பவழமல்லி
இந்தப்பக்கம் மட்டுமே
பூக்கவும் உதிரவும் வேண்டுமென
வேண்டுதல் ...

புது உரிமையே பழசாய்ப்
போன அடுத்தவீட்டு
அத்தையின்
அரைகுறை மனசிலான
அபூர்வ அனுமதி
"விளையாடினது போதும்
பூ பொறுக்குனது போதும் 
அப்புறம் வரலாம் 
போங்க ..போங்க..,


வெளியேறும் கணத்தில் 
ஒரு கேள்வி மட்டும் 
அங்கேயே கிடக்கும்...

தாததா ஏன்தான் 
இந்த வீட்டை விற்றாரோ?  

சனி, நவம்பர் 05, 2011

வாசமிலா மலராம்...


யாரோ சூடி வாடிக்கிடந்த
டிசம்பர் பூச்சரம்
மலரும் நினைவுகளை
ராமர் கலரில் விரித்தது...

கனகாம்பரம் டிசம்பர்பூ
நூறு(எண்ணி)
பத்துகாசுக்குத் தரும்
சுந்தராம்பா மாமியை
துரத்தித் தேடிய நாட்கள் ...
நடுத்தெருவுக்கு ஓடி
எண்ணிவாங்கி
கட்டிவைத்து 
பள்ளிக்கு ஓடி...

தேடிய நிறம் கிட்டாத 
சமரசத்தின் மீதான 
வெறுப்பில் 
ஒடித்துவந்து நட்ட 
டிசம்பர் குச்சியில்  
ரோஸும் ,ராமர் கலரும்
வெள்ளை-நீலக் கலபபுமாக
நூறு நூறாக 
கைவலிக்காமல் எண்ணி  
கனவில் குலுங்கிய பூக்கள்
வெள்ளை மொட்டு
வெளிப்பட்ட நாளில்
வாடி
வெளியேறின...
எதிர்பாரா சந்திப்பு...

காற்றில் உலரும்
காலை மலரும்
காலத்தில் வெளுக்கும்
காகித மலரும்
நலம் விசாரித்துக்கொள்ள
மேடை கிடைத்தது ...
பூ ஜாடிககுப் பக்கத்தில் 
கழுத்து மாலையை 
கழற்றி வைத்தவரை 
ஓரக்கண்ணால்  பார்த்தவாறே 
காலைமலர் கண்ணீர்  வடித்தது...

பறித்து அடைத்த
பைக்குள் அடங்கி
இறுக்கித் தொடுத்த
விரலில்  நசுங்கி
கண்டவன் கழுத்தேறி
வீழபபோகிறேன் சாலையோரம்...
ஒய்யாரம்தான் உன் வாழ்வு...!

உன் தொல்லை ஒருநாளில் முடியும்!
நாளொருமேடையும்
தெறிக்கும் எச்சிலும்...
வியர்வை வீச்சமும்..
சாயம் வெளுக்கும்வரை அல்லவா 
என் சங்கடம்.. 
காகிதமலர் 
கண்ணைக் கசக்கியது..

விழா இனிதே முடிந்தது!   

வெள்ளி, நவம்பர் 04, 2011

மெய் பிரியும் தருணம்..

சொற்கள் சாதுவாக
சுற்றியபோது
எழுத்துக்கள்
அச்சடித்ததுபோல்
அழுத்தமாக இருந்தன...
ஆக்ரோஷத்தின்
அழுத்தம் ஏறியபோது
மெய்யைக் கீழே தள்ளிவிட்டு
உயிரின் நீட்சிகள்
கொம்பாக காலாக
வளைந்து கிடந்ததிலிருந்து
நிமிர்ந்து 
பிணைந்து 
இறுகி இறுகிக் 
கயிறாக இறுக்கின

எதிர்ப்பட்ட 
அன்பு ஆசை காதல் 
காமத்தின் கழுத்தும் 
தப்பவில்லை...  

புதன், நவம்பர் 02, 2011

டார்வின் படிக்காத குருவி...


ஒருகாலத்தில்
களத்துமேடு இருந்த ஞாபகத்தில்....
ஒருகாலத்தில் 
கூட்டமாய் வந்த ஞாபகத்தில் ...
ஒருகாலத்தில் 
தானியம் கொத்திய ஞாபகத்தில் ...
புதிய நகரின் 
குப்பைமேட்டு 
டெட்ராபேக்குகளில்  
அலகால் தடவித்தேடும் 
குருவியைப் பார்த்து 
சிரித்தது 
சுவரொட்டி அசைபோடும் 
பசு. 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...