திங்கள், ஏப்ரல் 16, 2012

கடன் வாங்கிக் கழித்தல்

 
நேற்றைய நடுக்கத்திடம் 
இன்றைய தினத்தைக் 
கடன் வாங்கியிருந்தேன் !
முந்தாநாளைய வெறுப்பிடம்
இரவல் வாங்கியதுதான் 
நேற்றாக இருந்தது!
இன்றைய எரிச்சலிடம்
நாளையைத் தரச் 
சொல்லியிருக்கிறேன்....

அச்சத்திடமும்,அவமானத்திடமும்,
இரங்கலிடமும் 
ஏதுமிலாவிடினும் 
புழுக்கத்திடமாவது 
கேட்டுப் பெற்றவைதான் 
போன வாரத்தின் 
போன மாதத்தின் 
போன வருடத்தின் 
நாட்கள் கூட....

நிறைவு நாளாவது
நிறைவிடம் 
பகிர்ந்து கொள்ள 
வாய்க்குமோ ....
தெரியவில்லை.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

மேக உலா



உன்னில் குடியேறி 
உலகெலாம் நோக்கவேண்டும்...
பஞ்சுப்பொதியாய் 
அலையவேண்டும்...
தினம் 
பார்ப்பது நீதானா,
வேறு வேறு 
நீயா -என 
வடகோடி நட்சத்திரத்திடம் 
வினவ வேண்டும்....
நிலாமலரின் 
மணம் சற்று நுகரவேண்டும்.......
பிரபஞ்சக் குளிர்  குறைக்க 
சூரியச் சுள்ளி 
கொளுத்திக் காய்ந்தபடி 
புவியை 
அச்சுப்பிழை திருத்தவேண்டும்.....
நில் மேகமே.....
.
யாரங்கே 
நூலேணி கொண்டுவா .........

சனி, ஏப்ரல் 07, 2012

யுகாந்திரமாய்த் தவறும் உறக்கம்

  ஏப்ரல் மாத செம்மலரில் வெளியானது
 
குழாயடிப் பாத்திரங்கள் 
விட்டுப்போன பால்கணக்கு 
ஊறும் அரிசி உளுந்து ........
தீர்ந்துபோன வெங்காயம் ,
காலையில் வீசிப்போன 
ஒரு வசைச்சொல் ........
ஒவ்வொன்றாக 
நுழைந்து 
குழுப்படத்திற்கு 
இடம்பிடிப்பதுபோல் 
நெருக்கியடிக்கின்றன 
என்
மேல் இமைக்கும்
கீழ் இமைக்கும் -நடுவே 
கருவிழிக்கு சற்று மேலே...
                                              

வியாழன், ஏப்ரல் 05, 2012

பதின்பருவம் உறைந்த இடம்



2 4 12 திண்ணையில் வெளியான கவிதை

இயலுமானால்                                                                             
சுவர் அலமாரியின் 
இரண்டாம் தட்டை 
இடிக்காமல் விடுங்கள் ...
 
உடைந்த மரப்பாச்சி,
கறுத்த தாயக்கட்டைகள்,
தொலைந்த சோழிக்கு மாற்றான 
புளியங்கொட்டைகள்,
ஆத்தாவின் சுருக்குப்பை,
ஜோடியோ திருகோ
தொலைந்த காதணிகள்,
அறுந்த  பிளாஸ்டிக் மாலை 
கோர்க்கும் நரம்பு ,
கல்யாணமாகிப்போய்விட்ட 
நிர்மலா தந்துசென்ற 
கமல் படம் ....
எதுவுமே காணாவிடினும் 
காண்பதுபோல் 
கண்டுகொள்ளமுடியும் 
இரண்டாம் தட்டு இருக்குமானால்...
                                                        

போக்கிடம்

8 4 12 கல்கியில் வெளியான கவிதை                                             
 
 
 
 
 மணல்
செங்கல்...மனைவிலை,
ஆட்கூலி...வேலைநிறுத்தம் 
எந்தக் கவலையுமின்றி ,
மொட்டைமாடி 
நீர்த்தொட்டியின் 
பின்புறக்கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது 
பெயர்தெரியாக்குருவி. 
**********************************
கைப்பை,கடன் அட்டை,
கள்ள நோட்டு,சில்லறை 
எந்தக்கவலையுமின்றி
தனியாளாய்ப் புறப்பட்டு 
தந்திவடத்தில் அமர்ந்து 
சிறகு தூக்கி 
அலகை நுழைக்கிறது காகம்
இருப்பை எடுக்கிறதோ,
அழுக்கு கோதுகிறதோ... 
***********************************
மச்சுப்படி,மாங்கிளை ,
கட்டைச்சுவர் 
ஏறி,தாவி.குதிக்கும்
அணிலுக்குத் தொண்டனாகி 
ஓடிப்போய்விட்டது மனசு-
நாற்காலியில் புதைந்திருக்கும் 
என்னைக்கைவிட்டு !
கவலைகளைக் கைமாற்ற 
இடமறியாது திகைப்பதைப் 
பார்த்து -சிரிக்கிறது 
ஒற்றைச் செம்பருத்தி.
                            

புதன், ஏப்ரல் 04, 2012

நிராகரிக்கப்பட்ட வானவில்




9 4 12 உயிரோசையில் வெளியானது

 


என் கையில்
ஒரு 
காலிப் பையோடுதான்
வந்திறங்கினேன்...
எனக்கென்று 
வழங்கப்படக் கூடிய 
வானவில்லை 
மடித்து வைக்குமளவு 
வசதியான பைதான் அது....
எனக்கான 
வானவில் கிட்டாததால்
 இட்டு வைத்திருக்கிறேன்
 பழைய காகிதம்,பால்கவர்,
உடைந்த பிளாஸ்டிக்,பாட்டில் மூடி,
இத்யாதிகளை...!
இவை 
எடைக்கு எடுக்கப்படும் 
வாய்ப்பாவது உண்டு !
எனவே நான்
வானவில் வழங்கப்படும் 
திசைவிலகியும் 
நடந்திருக்கக் கூடும் ...!

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

அபி உலகம் -9


நீண்ட கால் முயல்,

சிலிர்க்கும்

பிடறியோடு மான்,
யானை இளைத்து
முழு மஞ்சளில்...
"இப்படியா வரைவாங்க.."
அம்மாவுக்கு அபியின்
பதில் ,
"வரைவாங்ங்களே".....!
கடவுள் ஆதியில்
வரைந்தபோது
யார் சரிபார்த்தது...?
*****************************
தேவதை வேடமாம்
அபிக்கு நாடகத்தில் !
அட்டை சிறகுகளை
அகற்றிவிட்டாலே
போதுமே...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...