புதன், ஆகஸ்ட் 05, 2015

நாப்கின் பருவம்



கருப்பு நெகிழிக்குள் 
பொதியும் பொதியை 
ஒவ்வொருமுறையும் 
மாற்றித்தான் வாங்குகிறேன் 
ஒரு பிராண்டுக்கும் 
ஓய்வு தரும் ராசியுமில்லை 
ஓயும் ராசியுமில்லை.

உறிஞ்சுபவருடையது விடாய்.
நாப்கின்களே ,
மாதவிடாய் மட்டும் 
ஏன் என்னுடையது 

MRP,தள்ளுபடி 
இலவசம் எதையும் 
சரிபார்த்ததேயில்லை 
நாப்கின் உறையை 
வெளிச்சத்தில் தூக்கி 

மறந்தும் மறந்துவிடாமலும் 
மறந்தும் இருந்துவிடாமலும் 
எச்சரிக்கை கற்பிக்கும் நிறம் 
சிவப்பு 
மறந்தும் எறிந்துவிடாதிருக்கவும் கூட 

மலக்குழி அடைக்கும் 
பஞ்சுப் பொதிகள் 
காட்டிக் கொடுக்கின்றன 
அலட்சியத்தையும் அறியாமையையும் 

திங்கள், ஜூன் 29, 2015

முகநூல் கவிதைகள் சில

வனமாக விரும்பிய விதைக்கு 
பழைய போத்தல் நிலமானது 
யார் வகுத்த விதி

********************************************
அந்த மேகம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது
காக்கை,கழுகு,என் அபிமான நேசன்
என
யார்யாரையோ கண்டுகொண்டிருக்கிறேன் 
மேகத்தையும்
உணர்கிறேனா என உணராமலே
அந்த மேகம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது
அதை மேகம் என்று சொல்வதும் கூட
அறியாது
அந்த மேகம் ....
***************************************************
முகமூடிக்குப் பின்னால் இருப்பதும் 
முகம் இல்லையா
*******************************************
அதிகாலை நான்கு மணிக்குத்தான் 
குயில் கூவும் 
இது என்ன கடிகாரம் 
நான்கு மணியே இல்லாமல் 
*************************************************
தூரத்து ஒற்றை இருக்கை
தந்த நம்பிக்கை 
இரைத்தமூச்சையும் பொருட்படுத்தவில்லை 
நொடித்த கால்கள் 
தெரிந்துவிடாமல் 
தூரத்திலேயே இருக்கட்டும்
************************************************
கனவு என்று சொல்
கற்பிதம் என்று சொல்
அறியாமை என்று சொல்
பேராசை என்று சொல்
பிச்சி என்று சொல் 
பிழை என்று சொல்
பொய் என்று...
************************************************
வண்ணங்களைக் குழைத்தபோது 
தோன்றியதெல்லாம் ஓவியம்தான் 
கை அழுக்காகும் 
என 
முடிந்தபோதுதான் தெரிகிறது
*****************************************
நன்றாகத்தான் பேசுகிறீர்கள் 
நம்பிக்கையைப் பற்றி 
கைப்பையை 
இறுகப்பிடித்தபடி
******************************************
தொடுத்ததும் விடுத்ததும் 
சூடியதும் 
சூட்டியதும் 
உதிர்ந்ததும் பறித்ததும் 
அதே பூதான்
**********************************
நாய் நினைத்தது
மறந்தது
நாயையும் மறக்காமல்
நாய் நினைத்ததையும் மறக்காமல் 
ஒரு பிழைப்பு

படம்-ராஜி சுவாமிநாதன்

வாழ்க்கைச் சத்தம்


என்ன செய்துவிட்டோமென
பேசிக் கொண்டிருப்பது
என்ன நடக்கவில்லையென 
மௌனமாயிருப்பது
ஆனாலும்
மௌனமாயிருந்தபடி
பேசிக்கொண்டும்
பேசியபடியே
மௌனமாகவும்
இரைகிறது வாழ்க்கை

வெள்ளி, மே 15, 2015

எண்ணும் எழுத்தும்

குறிப்பெழுதி வைக்காமலே 
எங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனத் 
தெரியுமளவு 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 


பார்க்கும் பெண்களெல்லாம் 
சியர்கேர்ள்ஸ் ஆகவே 
தென்படாதிருக்க 
ஐ பி எல் ஸ்கோர் போர்டுகள் தவிர 
மற்றவையும் கண்ணில் படுமளவு 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 

யார் யாரைக் 
கட்டிக் கொள்ள வேண்டும் 
அல்லது 
யார் எதைக் கட்டிக் கொள்ள வேண்டும் 
என்ற சர்ச்சைகளிடையே 
முகவரி மறந்த 
திருவிழாக் குழந்தையாக நிற்காமல் 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 

எவரோ உழும் நிலமும் போகுது 
நாம்  ஆடும் இணையக் களமும் போகுது
என்று அறியாமல் 
யாரோ ஒரு பெண்ணின் படம் இணைத்து 
புரளி பரப்பி கிளராதிருக்க 
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் 
20 5 15 ஆனந்த விகடன் -சொல்வனம் 

புதன், மே 13, 2015

சாமியின் ஆட்டம்

ஒன்றுமறியாப் பருவத்தின்
விளையாட்டு அது
பாசி மிதக்கப் படிக்கட்டு மூழ்கி
குளம் தளும்புகையில்
எட்டுபடி எங்க போச்சு
சாமி வந்து தின்னு போச்சு ...
வற்றி வற்றி ஒருநாள்
வரிசை பெருகும்போது
எட்டுபடி எங்க வந்துச்சு
சாமி வந்து துப்பி போச்சு ....
தின்னுவதும் துப்புவதுமாய் இருந்த
சாமியின் ஆட்டத்தில்
கரையும் முழுங்கி
தரையும் முழுங்கித்
தண்ணீரும் முழுங்க
வந்தவனுக்கு
சாமி என்றே பெயர் வைத்திருந்தார்கள்
அவன் துப்பியதெல்லாம்
பான் பொட்டல எச்சில் மட்டுமே

ஞாயிறு, மே 10, 2015

பருந்தாவதன் அசாத்தியம்

sparrow 300தூசி.....
துடைத்துவிட்டேன்
இதுவாவது
முடிகிறதே
*******************
தெரியாமல் இருந்திருக்கலாம்
சிரித்தபடி
கடந்திருப்பேன்
*******************
நிறையப் பேசினோம்
நேற்றைக்கும் இன்றைக்கும்
ஆடைதான் மாற்றம்
பேசுவோம்
*******************
பருந்தாவதன் அசாத்தியம்
மட்டுமல்ல
உயர் அழுத்த மின்வடம்
பற்றியும் சொல்லிவிடவேண்டும்
ஊர்க்குருவிக்கு

சரியாய் இருப்பதன் அடையாளம்

சிலநேரம் வார்த்தைகள் சரிசெய்கின்றன
சிலநேரம் மௌனம்
உற்றுப்பார்த்துக் கொண்டேயிருப்பதும்
ஒன்றையும் பார்க்காமலிருப்பதும் கூட
சரிசெய்யத்தான் வேண்டுமா
என்ற கேள்வியும்
சரியாகிவிடாதா என்ற தாபமும்
சரியாகத்தான் எல்லாம் இருக்கிறதா
என்ற சலிப்பும்
நமக்கு மட்டுமேன்
சரியாவதே இல்லை என்ற இரங்கலும்
இதற்கெல்லாம் நடுவில்
சரியாகியிருந்தால்
அது
அடையாளம் தெரியாமலிருக்கவும்
வாய்ப்பிருக்கிறது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...