ஞாயிறு, அக்டோபர் 14, 2018

மிதியடிகள் கைவிட்ட எசமானர்

அது நின்றுகொண்டிருக்கிறது
தான் நாய்க்குட்டி
அல்லது
பூனைக்குட்டிதான் என்ற நம்பிக்கையோடு
வாலைக்குழைத்துப்பார்த்தபடி
அல்லது
வரிகளின் நிறத்தில்
மீசைமுடி இருக்கிறதா என்று 
கண்ணை ஒருக்களித்துப் பார்த்துவிட முயற்சி செய்தபடி
ஒருக்களித்து என்ற சொல்லைக்கேட்டதும் 
உங்களுக்குப்பூர்வம் நினைவிலாடுகிறது
ஒருக்களித்துத் துயில முற்பட்ட குற்றத்துக்காக
எசமானர் பட்டம் சூட்டிக்கொண்ட
 வளர்ப்புப்பிராணிகளால் 
ஆசனம் மறுத்து வாசலுக்குத் துரத்தப்பட்ட 
எசமானர் நீரென நினைவுபடுத்த ஆனமட்டும் பார்க்கிறீர்கள்
அதுவோ
நேற்றையே மறந்துவிட்டு
துண்டுமிதியடியே சதமென அலைகிறது
அப்பிறவி அந்தயுகம்
ஒழுகும் எச்சிலில் கரைகிறதே எனக் 
கண்ணீர் விட்டு கலைந்து போகவும் கூடுமோ


பார்வை

எவ்வளவு பிடிக்கும்
எனக்கேட்டு கைவிரித்துக்காட்டிய
வயதிலிருந்து சிலர் வளர்வதேயில்லை
கை எப்போதும் விரிக்கப்பட்டே
....
பாவம்
நீங்களாகப் புரிந்து கொள்கிறீர்கள் 

இரண்டையும் இணைத்து

***************************************************************
மேசை இடுக்குகளில் ஒளிந்துகொண்டு 
மின்விசிறியின் ஒண்டுக்காற்றில் 
சிலிர்க்கும் 
அதைத் தூசி என்று
காலால் எத்தும் உங்களைப்பற்றி
என்ன நினைப்போ


*************************************************************
கண்ணாடிப்பரப்பெலாம்
அழுக்கு
பார்க்க வழியில்லை
மங்கலாவது

 பிம்பமா
பார்வையா
சொல்ல ஒரு குரலுக்காக
காத்திருக்கிறது ஆடி

******************************************    


உடைந்தது

உங்கள் தெருவிலும்
கேட்டிருக்குமே
உங்கள் மூதாதைக்
காலத்தின் நீலத்தில்
வானத்தை மாற்றுபவன் குரல்
அதற்கு முன்னர் வந்தானா
பின்னரா
கடலை மாற்றுகிறவன்
உடைந்தது எதுவாயினும் பற்றவைப்பேனென்று
நேற்று ஒருவன் கூவியது கேட்டீரோ

என் அம்மை 
மனசைக் கையிலெடுத்துக்கொண்டு 
வாயிலுக்கும் உள்ளுக்குமாக
நடந்துகொண்டிருக்கிறாள்
வந்தால் சொல்லுங்கள்

எதை எடுத்தாலும் பத்து

வானம் அத்தனை கறுப்பாகி விலக்கினாலும்
வெட்கங்கெட்ட விண்மீன்கள் 
பெயரையும் மாற்றுவதில்லை 
ஊரையும் மாற்றுவதில்லை

**********************************************************************
வண்ண வண்ணமாக
நிறைந்திருக்கிறது
சந்து முழுக்க
"எதையெடுத்தாலும் பத்து"
அங்காளியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு
இந்தக் கூட்டத்தில்தான் கலந்திருக்கிறான் 
குடல்பலியாகப் போகிறவன்
வீட்டுக்குக் கொடுத்தனுப்பிவிட்டு
படுகளம் வந்து சேர்வானென
சூலத்தைக் கிடப்பிலிட்டு
விரித்த தலையை 
சற்றே ஆற்றிக்கொண்டிருக்கிறாள் அங்காளி

**********************************************************************
கடைசிப்பேருந்தையும்
தவறவிட்டுக் காத்திருக்கிறான் ஈசன்
காலந்தோறும் இப்படித்தான் 
எங்கோ நின்றுவிடுகிறேன்
எனப் புலம்பிவிட்டு
அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டான்
"பெருமைக்கொண்ணும் கொறச்சலில்ல.... காலபைரவனுக்கு "
அசரீரியாய்க்கேட்கிறது சங்கரி குரல்
அப்படியொன்றும் இல்லாதபோதும்



சனி, செப்டம்பர் 29, 2018

நதியில் தேயும் கூழாங்கல்

ஒருகை ஓசையைத்தான்
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
என்னிரு செவிகளும்
வேறு வேறு தளங்களில் கவனிப்பவை

கண்களோ முழுவட்டச்சுழல்

தலைசுற்றிய ஒளிவட்டத்தின்
ஒவ்வோர் சுடரின் அலைநீளமும்
ஆதியந்தம் அறியாது

என்ன ஒன்று
என் அழுக்குத் தளராடையும்
அள்ளிமுடிந்த கொண்டையும்தான்
எனக்கே என்னை நினைக்கையில்
தோன்றுகிறது

அளவுத்திட்டத்தில் சமைத்த கரண்டிக்கு
ஒருநாளும் கை குவித்தறியா சுவை
மனப்பாடம்
என்
கணிணியோ எனக்கு முன்
பைக்குள் நுழைத்துக்கொண்டு
படியிறங்கும்

என்னுடையதெல்லாம்
என்னுடையதல்ல என்பதறியும்
என்கடனட்டையின் காப்பு எண்

இருந்தாலும் கடையிதழில் அலட்சியம்
வழியவிட இன்னும் வரவில்லை உன்னைப்போல்

போகட்டும்
இப்படியே நதியில் தேயும் கூழாங்கல்

ஏப்ரல்2018 மங்கையர் மலர்

உதட்டோர ரத்தம்

திறந்த காயத்துக்கு
கத்தியால் மருந்திடவே
படித்த பரம்பரை
அரிவாளால் பூப்பறிக்கும்
பனித்துளியையும் விசும்பின்
கண்ணீரெனக் கசிந்த கதை
பூ மறக்கும்
கையோ கத்தியோ இங்கேதானே வரப்போகிறாய்
என சத்தமின்றிச் சிரித்தபடி காத்திருக்கும் மயானம்
அங்காளி உதட்டோர ரத்தத்தை
கைக்குட்டையால் சரிசெய்துவிட்டு

 நாவைச் சரியாக 
தொங்கப்போட்டுக் கொள்கிறாள்




மழை மழை....

நீங்கள் புறக்கணிப்பீர்கள் எனத்தெரிந்தாலும் 
காற்றோடு போராடிக்கிழிந்து 
உங்கள் கொல்லை வாழையிலேயே 
தங்கிவிடுகிறது இலை
ஆறுதலாக இரண்டு துளிதெளித்து 
நகர்கிறது மழை

****************************************
மழையின் குளுமை மனங்கொள்ள
வா
என்னை ஓரமாக எடுத்து வை 
யாரைக் கூப்பிடுவதெனத் 
தவிக்கிறது தொட்டிச்செடி

****************************************************
பார்ப்பதற்கு நீங்கள் தேடுவது போலவே
விழுவதற்கு மழையும் தேடுகிறது 
ஒரு கண்ணாடி சன்னலை
அப்போது வழிந்த அழகின்
நினைவு
அதற்கும்
(nandri TK Kalapriya)
****************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...