ஞாயிறு, ஜூன் 18, 2017

செய்



அந்தந்த நிமிடத்தில் வாழ்வதன் சுமை 
தாங்க இயலாதிருக்கிறது
இதற்கு முந்தைய நிமிடத்திலும் 
இப்படித்தான் தோன்றியது என்பதை 
நினைவில் கொண்டுவந்து 
ஆறுதல் கொள்ள முயற்சிக்கிறீர்கள்
அது எவ்வளவோ இலேசாக இருந்ததே 
எனச்சொல்லியபடி
இந்த நிமிடத்தை இறக்க முற்படுகிறீர்கள்
சங்கிலி எங்கு பிணைத்திருக்கிறது 
என்பதைக் கண்டடைவதற்குள்
இதுவும் முந்தைய நிமிடமாகிவிடுகிறது


*************************************************************************
விருப்பம் என்பது விருப்பமற்றிருப்பதற்கு 
அருகில்தான் இருக்கிறது
ஒற்றைப்படை இலக்கத்திற்கு எதிர்ப்புறமாக
இரட்டைப்படை இலக்கத்தினை
அமைத்திருக்கும் குறைந்தபட்ச
இடைவெளி கூட இல்லாமல்
அடுத்தடுத்தே இருக்கிறது
அடுக்கு செம்பருத்தியின்
இதழ்களைப்போன்ற அமைப்பில்
எது விருப்பம்
எது விருப்பமின்மை என்று
அடையாளம் காண்பதை 
வாழ்நாள் வேலையாகச் 
செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாய்
செய்

***********************************************************************************



திங்கள், ஏப்ரல் 17, 2017

இலையுதிர்கால புத்தன்

நியாயமான அன்பு
நியாயமான மரியாதை
நியாயமான அனுகூலம்
நியாயமான அங்கீகாரம்
நியாயமான சேவை
நியாயமான கவனம்
நியாயமான புன்னகை
எதுவுமே நெருங்கவில்லை
அநியாயமான ஒவ்வொன்றையும்
நியாயமான ஒன்றாக்கிடும்
திறமையில்லை தானே
அநியாயமான வெம்பலோடு
செத்துப்போங்கள்
அதுவே இவ்வுலக நியாயம்

****************************************************

புத்தன் உறங்கிக்கிடக்கிறான்
இலையுதிர்கால மரத்தடியில்
கனவில் தளிராடியதே
போதுமாயிருக்கிறது


*****************************************************
நீதான் என்ற உறுதிப்படுத்தலுக்கு முன்பே முடித்துவிட்டது
நீயோ என்ற ஐயம்

*****************************
விழுவதற்கென்றே காத்திருப்பவர்களிடம்
கையசைத்தவாறே எழுவதான ஞானம் 
சித்திக்கட்டும்\

*************************************
பாதையை மறிப்பதாக
இழுத்துக் கொத்தாக்கி
கட்டிவைத்த இடுக்கிலிருந்து
முண்டி வெளிவந்து
சிரிக்கிறது ஒற்றை அரளி


***********************************************************
ஊஞ்சல் பார்க்கும்போது
மனசு கூட ஆடவில்லை
மட்டப்பாறையாகி விட்ட
அதோடு இனி என்ன செய்ய




ஞாயிறு, நவம்பர் 13, 2016

செல்வதும் செல்லாததும்

என்ன செய்ய
எந்தக்கணமும் நீ நீயல்ல
என்ற உத்தரவு வரலாம்
செல்லத்தக்க அன்பு பற்றி
செல்லத்தக்க புன்னகை பற்றி
செல்லத்தக்க விரோதம் பற்றி
செல்லத்தக்க நோய் பற்றி
செல்லத்தக்க கும்பிடு பற்றி
முன்கூட்டியே சொல்லமுடியுமா
உத்தரவுகளின் பின்பக்கத்தில்
பழைய பாக்கிகள் போல
பழைய பற்றுகளை
பழைய எதிர்ப்புகளை
பழைய உறவுகளை
பழைய நினைவுகளைக் குறித்துத்
தருவாருண்டா
படர்கிளைகளைக் கழித்துவிட்ட 

முருங்கை போல நிற்கத் தயாராக
இருக்கட்டும் மனது
வரிசைகளில் நிற்கும்போது
கைபேசியில்
ஜல்லிக்கட்டு விளையாட முடியுமென்றால் 

ஏது கவலை


எறிந்த முதுகெலும்பு

விட்டுவிடு விலகிவிடு என்று 
யாருக்கும் உத்தரவிட 
இயலா அடிமைகள் நாங்கள் 
பிறந்தபோது முதுகெலும்பு இருந்திருக்கலாம் 
சதைப்பிண்டத்தையே ஆதாரமாக 
தகவமைத்துக் கொண்டுவிட்டோம்
எப்போதும் குனிய
குட்டிக்கரணம் போட
இலைபோர்த்திக் கதையெழுத
கற்பனையிலேயே புளகாங்கிதம்பெற
எல்லோருக்கும் தோதாக
சாம்பல்சத்து தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில்
எடுத்துக்கொள்ள ஏற்றபடி
எரித்து வைத்திருக்கிறோம்
மற்றபடி
பால் வேறுபாடில்லா குலவழக்கம் இது
என்பதையும் பதியுங்கள்

உருளைக்கிழங்கு துண்டுகளின் பிம்பம்


தும்பைச்செடிகளும் கீழாநெல்லியும்
ஓரமாய்ப்பெருகிக் கிடக்கும் ஒரு பாதையில்
நடந்து சென்றிருந்தோம்.
வராமல் கூட இருந்திருக்கலாம்
ஆனால்
படுபாடு பட்டு வந்தாயிற்று
திடீரென போய்ச் சேர்ந்து
புதிய சமையலொன்றைச் செய்யும்
அசௌகர்யம் தந்த குற்ற உணர்வோடு
கால்களைக் கழுவிய
அதே கிணற்றடி
உள்ளே கசகசத்த நெருக்கத்திலிருந்து
தப்பிக்க ஏற்ற பதுங்குகுழிதான்
சகடையில் இப்போது
டயர்களால் ஆன கயிறு
குறைந்தது நான்கு பண்டமில்லாமல்
இலைவிரிக்க மாட்டேன் எனத்
தூக்கிச் செருகிய சேலையும்
உடைந்த பற்களிடையே
வழிந்த புன்னகையுமாக
ஓடிக்கொண்டிருந்த அத்தைதான்
முன்வாசலில் நாற்காலியில்
சார்த்தப்பட்டிருக்கிறாள்
இந்த வீட்டின் நகரக்கிளையில்
உருளைக்கிழங்கைத் தோல்சீவி
சமைப்பதா ,அவித்து உரிப்பதா
எது சிக்கனம்
என்ற நீள் விவாதத்தின் பின்
சமைத்து பரிமாறப்பட்ட இரண்டே துண்டு
போல கிணற்றின் நீரலைவில் தெரிந்தது
திடுக்கிட்டுத் திரும்பியபோது
நீரிறைக்க வந்திருந்தாள் மருமகள்
அவள் கைகளின் நீட்சி போல


நீர்மையற்ற வாழ்வு

உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள் 
அல்லது
அவர்களோடுதான் நீங்களும் 
சரி 
உங்களைப்பற்றி சொன்னால்தான்
உங்களுக்குப்பிடிக்கும்
முதலிலிருந்தே வருகிறேன்
உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள்
பொருள் வந்த பொழுதிலோ
பொருளின் பொருளறிந்த பொழுதிலோ 

நிகழ்ந்த நகர்வு அது
நகர்ந்தது நீங்களென்பதால்
அறியாது
எப்போதும்போல் சிரிக்கும்
அந்த முகம் எரிச்சலூட்டுகிறது
அவமானம் தருகிறது
கொஞ்சம் கை கொடுத்தாலென்ன
கேட்கும் குரலும் விரோதமாகிவிடுகிறது
சுற்றிப்பாருங்கள் பாளம் பாளமாய்
வெடிப்பு
நீர்மை காய்ந்த சேறு



காலம் கேள்விகளால் தொடுக்கப்பட்டிருக்கிறது


கடலாகவோ மலையாகவோ
விரிவானாகவோ சொல்லிவிடமுடியவில்லை
காலத்தை
கோபமாகவோ மகிழ்ச்சியாகவோ
குமைவாகவோ அணுகமுடியவில்லை
காலத்தை
அறிந்ததாகவோ அறியாததாகவோ
நுனிப்புல்லாகவோ உணரமுடியவில்லை
காலத்தை
கொண்டதாகவோ இழந்ததாகவோ
ஏங்கியதாகவோ விடமுடியவில்லை
காலத்தை
உன்னுடையதாகவோ என்னுடையதாகவோ
நம்முடையதாகவோ பொதியமுடியவில்லை
காலத்தை
இறுகினால் இற்றுவிடுவிடுமோ
இளகினால் கொட்டிவிடுமோ
என்ற பாவனைக் கேள்விகளால்
தொடுக்கப்பட்டிருக்கிறது காலம்
மாலை வாடிவிடாது என்ற நம்பிக்கையுடன்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...