செவ்வாய், அக்டோபர் 23, 2018

இருவண்ணக்கிளி

அந்தக்கிளி
வெளியில் நின்று புரளும் 
உண்மைக்கண்ணீரில் இருக்கிறது
அந்தக்கிளி
எங்கோ ஒலிபரப்பாகும் வசனத்தில் இருக்கிறது
அந்தக்கிளி
இன்னும் வாசிக்காது சேர்ந்திருக்கும் 
நூல்களின்மேல் உட்கார்ந்திருக்கிறது
அந்தக்கிளி
எழுதி முடிக்காத 
உடன்பிறப்பு மடல்களுக்குள் 
உறங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு கறுப்புக்கண்ணாடியும் மஞ்சள்துண்டும் 
வைக்கப்பட்ட அலமாரியிலும்
இப்போதைக்கு ஒதுங்கியிருக்கும் 
சக்கர நாற்காலி இருக்கையிலும்
ஏதோ ஓர் இழுப்பறையில்
இருக்கக்கூடிய 
கல்லக்குடி கண்ட கருணாநிதி வாழ்கவே 
என்ற ஹனீபா குறுந்தகட்டிலும்
இருவண்ணக்கொடியிலும்
சமூகநீதிச்சட்டவரிகளிலும் 
இருக்கலாம் அந்த உயிர்க்கிளி
என்றும் இருக்கும் அப்படியே

கலைஞரின் உடல்நலம் குன்றியிருந்த இறுதிநாட்களில் ஜூலை 30ல் எழுதியது 

என்னில் நான்

கல்லாயிருப்பதும் கருணையோடிருப்பதும்
வெந்து தணிவதும் 
வேறாய்ப் போவதும் 
உடைவதும் 
இறுகுவதும் ஓர் மனமெனில் 
ஒற்றைச்சொல்லில் நிறுப்பதெப்படி


**********************************************************
எண்-ணிடத் தெரியாதவரை
முதல் தரு அறிய மாட்டேன்
சுற்றி சுற்றித்தான் வரவேண்டும் வனத்தை

*************************************************************
என்மேல் என்னைப்பூசிவைத்து
அந்த என்மேல் என்னைச்சுற்றிவைத்து
அந்த என்னையும் உறையிலிட்டு
அதே என்னை எடுத்துவந்தேன்
எந்த என்னோ 
நீ விரும்பிக் கொண்டது
என நான் நினைத்துக் கொண்டது


****************************************************************
படம்: ராமலக்ஷ்மி ராஜன் 

ரத்தம் வற்றிப்போகும் நிலம்


இரவின் நித்ய அமைதியைக் கிழித்தபடி
நீங்கள் விரைவீர்கள் அந்தப்பாதையில்
உங்கள் தாகத்திற்காக ,பசிக்காக
பத்தடிக்கு ஒரு கடைக்கொத்து வளர்ந்திருக்கும்
கும்பகோணம் டிகிரி காப்பி பலகைகள்
வழிமறித்துக் கொண்டேயிருக்கும்
பரோட்டாக்களுக்கு ஊற்றும் எண்ணெய் தெறித்த
தரையடியில் சீறும் பெருமூச்சு 
கேட்காதபடி காக்கும்
வாகனங்களின் ஹாரன் ஒலி

உங்கள் வாகன நலனுக்காக
பள்ளியைக் கைவிட்ட சிறுவர்கள்
திருப்புளிகளோடும் 
எண்ணைப் பிசுக்கேறிய ஆடைகளோடும்
குத்துக்காலிட்டிருக்கும் குருவிடம்
உதைபட்டுக் கொண்டிருப்பார்கள்
துண்டுமண்ணை நம்பிப் பிழைத்த
அவர்களது அப்பன்மார் அதோ
ஆரியபவன் வாசலில்
உங்கள் வாகனத்தை நிறுத்த வண்ணக்கொடி நீட்டி
அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்
பால்யத்தின் திருவிழாவில் விசில் ஊதிய
அனுபவம் ஐந்தோ பத்தோ பெற்றுத் தருவது
அமோகம்

அலுமினியக் குண்டான்களோடு 
குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு 
நகரத்தின் சாக்கடையோரங்களைத்
தேடிக் கிளம்பிவிட்ட உறவுகளை
நினைத்தபடி மல்லி மல்லி என்றோ
கொய்யாப்பழம் சப்போட்டா மாங்காய் என்றோ
உங்கள் பயணங்களில்
எல்லாம் கிடைக்கச் செய்யவென்றே
தங்கிவிட்ட பெண்டிர் வாய் ஜாலம் பற்றி
பெரிய அலுப்பு உங்களுக்கு

ரத்தம்வற்றிப்போன அந்த நிலம் 
தன் பழமை நினைத்து
நெல் கரும்பு வாழை மா புளி இஞ்சி மஞ்சள்
என்றெல்லாம் கனவு கண்டபடி 
சமாதிநிலையில் கிடக்கும்
சாலையோர வணிகத்துக்குத் துணை செய்ய
நம்ப முடியாத விலையில் என்றொரு ஆச்சர்யக்குறியோடு
உள்நிலத்துக்கு உலைவைத்த பலகைகள்
பார்த்தபடி

வந்துவிட்டது வளர்ச்சி என்றபடி எட்டு பத்து பதினாறு
வழிப்பாதைகளால் கல்லா நிரப்பியவர்கள்
கட்டிய கல்லறைகளின்
கதையறியாது
ஒன் வே, ரிடர்ன் என்று சுங்கம் கட்டிக்கொண்டு
அதன் மேல் ஓடும் உங்கள் வாகனங்கள்


இறந்தகாலம்

பூத்த முதல் ரோசாவை உனக்கு சூட்டிவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்தாயிற்று
சந்தனப்பொட்டை சரியான வட்டமாக்கியாயிற்று
புலவு செய்கையில் ஞாபகமாக ஒரு கிண்ணம் உன்முன் வைக்க
எந்தப்படத்துக்கு என்ன சொன்னாய்
எந்தப்பாட்டுக்கு அபிநயித்தாய்
எந்த நகைச்சுவைக்கு குலுங்கினாய்
எல்லாம் நினைவிலாட சிரித்து சொல்லிக்கொள்ள முடிகிறது
முடிந்தது தானா என்ற சஞ்சலம் நமது படங்களைப் பார்க்கும்போது வருகையில் நாசூக்காக கண்ணைத் துடைக்கப் பழகிடவேண்டும்
அது கைவந்தால் இறந்தகாலம்
என்பது பொருந்திவிடும்

அதுவே இது

அன்றொருநாள் சோடியிடம் 
மூக்குரசி
கீச்கீச்செனக் கூவித்தாவி
கொண்டை கோதிய குருவிதானா இது 
தெரியவில்லை
அதனாலென்ன 
இதுவும் வேறெங்கோ 
வேறெப்போதோ 
வேறொன்றிடம் கொஞ்சியிருக்குந்தானே
அதுவே இது


****************************************************

பூச்சாடியென்று
நீங்கள் செருகிவைத்த மலர்க்கொத்தை
எடுத்து வீசிவிட்டு
அந்த பித்தளைசசருவம் 

தானே
அடுப்பிலேறிவிடும் என்று எதிர்பார்க்கவில்லைதானே
ஆனாலும் சமாளிக்கிறீர்கள் பாருங்கள்
ஒத்துகொள்ள வேண்டியதுதான் சாமி 

நீங்கள் நீங்கள்தானென

****************************************************************
குட்டைக்கரையோர நீரே போதுமாயிருக்கிறது
காய்ந்தபுல்லைக் கடித்து 

வாய் எரியும் ஆட்டுக்கு
ஆழமும் ஓட்டமும் உங்கள் கவலை


************************************************************


படம் ராமலக்ஷ்மி ராஜன் 

அம்மாவின் பழஞ்சீலை

வாழ்வை வாழ்வாக்கிடும் பூங்குயிலை
 பார்க்கவே நேரவில்லை
ஆயினும் அதற்கோர் வருத்தமுமில்லை
எனக்கொரு தரிசனமுண்டோ

****************************************************************
காரைபெயர்ந்த சுவரெங்கும் படிந்த 
மழை ஈரத்துக்குள் 
ஆனை துதிக்கை உயர்த்த
அம்பாரியில் விரிக்கப்போதுமாய் இருந்தது
அம்மாவின் பழஞ்சீலை

*****************************************************************
கதவைத் திறந்திருக்கையில்
வெளியேறுவதைப் பற்றிய கவலையில்லை
மூடிய சன்னல்களின் இடையே 
எம்பிக்குதிக்கத் தோன்றுமளவு

*****************************************************************
முழங்காலில் முகம்புதைத்து 
விழியுயர்த்திப் பார்த்திருந்த சன்னலுமில்லை 
வாயிலுமில்லை 
அங்கிருந்து நீண்ட வெளியுமில்லை
நீயுமில்லை

****************************************************************
நீள் தொரட்டிக்கும் வளைகிளைக்கும் நடுவே 
இறுக்கிக்கொள்ளமுடியாத 
பற்றைத்துறந்த ஒற்றை முருங்கை 
வரமறுத்த வீம்பின் திருப்தியோடு 
கொதிக்கிறது
அவள் கிளறிக்கொண்டிருக்கிறாள்

**************************************************************
படம் ராமலக்ஷ்மி ராஜன் 


புதன், அக்டோபர் 17, 2018

சாயமிழந்த சிற்றாடைப்பூ

குடைஜிமிக்கியின் ஓரச்சலங்கைமுத்து 
அளவே உள்ள அன்பைப்
பேரன்பு
என்கிறாய்
கோயிலின் கண்டாமணியையே
ஒத்துக்கொள்ளாத உலகத்திடம்
தருவதின் அளவும் 
பெறுவதின் அளவும் உணர்வதன் நாழி நிறை
தன்னைத்தானே 
சுற்றிச்சுழன்றாடும் சிறுமியின் சிற்றாடைப்பூ
சாயமிழந்த மலர்ச்சிக்கு முன்
ரங்கராட்டினத்தின் சக்கரம் சிக்கிக்கிடக்கிறது


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...