திங்கள், அக்டோபர் 25, 2021

குளப்பாசியின் வீச்சம்

    குணமென்னும் குன்றேறி நின்றால்

தெரியாததெல்லாம்
சினமென்னும் குன்றேறியவனுக்குத்
துலங்குகிறது
பார்வை
தூரம்
குளப்பாசியின் வீச்சம்
புகைப்படத்தில் அழகென்று பதிகிறது
*******************************************

நீலக்கித்தான்களில்
அடுக்கிவைத்திருந்த
முப்பது ரூபாய் இருபது ரூபாய் பாத்திரங்களை உற்று உற்றுத் தேடுகிறாள்
மயானக்கொள்ளையில்
மல்லாட்டை இறைத்து முடித்தவள்
"எங்க ஆயாவோட லோட்டா மாறி இருக்கு"
உடன்வந்தவளிடம் எடுத்துக்காட்டியவளின்
கண் மினுங்குகிறதா
கலங்குகிறதா
அறியவிடாத அளவு இருள் சூழ்ந்துவிட்டது.
கட்டைப்பையில் ஆயாவைத்தான் மடித்துக்கொண்டு போகிறாளோ
கனத்தில் சற்றே
சாய்ந்த நடை *********************************************
மூசுமூசென்று இரைக்கிறது
பிடித்த நிறம் பிடிக்காத நிறமென்றில்லாமல்
வாழ்க்கையைப் போலவே கலந்துகட்டி
வந்தவரெல்லாம் அடுக்கிய வளையல் கையோடு
தெருவில் போகிறவளுக்கு
தோள்பை
சாப்பாட்டுப்பை
இரண்டுக்கும் இரக்கமாய்த்தானிருக்கிறது
அவளைப்பார்த்து
ஆனாலும்
தானாய்க் குறைக்கவியலா பாரம்
நாமும் அவளும்
...
முணுமுணுத்துக் கொள்கின்றன

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...