திங்கள், அக்டோபர் 25, 2021

சற்றே மலர்

 நேற்றைய கொடியரும்புகளை

நீ
மறந்துபோனதை
நினைவில் வைக்காது
இன்றும் அரும்பு கட்டியபடி ஆடுகிறது கொடி
பச்சை இருக்கும்வரை அது அப்படித்தான்
****************************************
குறுகுறுவென்ற
யோசனையோடே
உன்னைப் பார்ப்பது
உன்னாலல்ல
முந்தைய தூசிக்கணங்கள் வாழ்வில் அதிகம்
கடுக்கென்று பல்லிடுக்கில் மாட்டிய நாள் வலியில்
விதையற்ற கனிகளையே நாடும் பிழைப்பானதே

*******************************************
அப்படியும் இப்படியுமாக ஓடிக்கொண்டிருக்கும்
என்னை உறுத்துப் பார்த்தபடி
சமர்த்தாய் என்றும்போலிருக்கிறது
குட்டிமேசை
உருண்டு
குடுகுடுவென்று குறுக்கே விழுந்து
வழிமறிக்கிறது
கல்யாணப்பை சாத்துக்குடி
மிதிக்காமல் அப்படியும் இப்படியும்
ஓடவும் பழகிக்கொண்டாச்சு
******************************************
எனக்குப் பிடிக்கிறதென்றுதான் செய்தேன்
அதற்காக
உன் மெய்ப்பாடு
கருத மாட்டேனா என்ன
சற்றே மலர்
**************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...