அலுப்பு தரும் பேச்சுகள் முகங்கள்....
சுணங்கியபடி நகரும் கடிகாரம்
நொடிமுள்ளால் அவ்வப்போது
நேரத்தின் முன்கையை வேறு சொறிந்து கொள்கிறது
பழையதைப் பிழிந்து காக்கைக்கு எறிந்துவிட்டு
நீராகாரம் மட்டும் பருகுவதுபோல்
செய்ய முடிந்தால்...
மனசைப் படிக்கவும் கற்றதுபோல்
நொடிமுள்
மிஸ்டர் நிமிடத்தின் இடுப்பில்
முழங்கையால் இடித்துவிட்டு
சிரித்தபடி நகர்கிறது...
*******************************************
நிற்பது மாதிரிதான் இருக்கிறது
நகர்ந்து விட்டிருக்கிறாய்
சொல்லிக்கொண்டிருந்த சொற்களெல்லாம்
உதிர்த்து உதறிய உப்புக்கடலைத் தோல் மாதிரி கிடக்கின்றன
சமாதானமாகிறேன்
அப்படியென்றால்
உள்ளிருப்பை
நீ மென்றிருக்கலாம்
கரிப்பு
அதிகமோ
***********************************************
உறக்கமின்மையைச் சொல்லி
ஏதாவது மாத்திரை வேண்டி நிற்கிறான் இளைஞன்
கையளவு இடைவெளியில்
குனிந்து பார்த்து
மறுதலிக்கிறாள்
சீட்டு வேண்டுமென்று
தளர்ந்தும்
அடி அடியாக நகர்ந்தும் உழல்கிற
அவனைப் பின்தொடர்கிறது மனசு
மாத்திரைப்பெட்டியை
அண்ணாந்து நோக்கிவிட்டு
தனக்குள்ளும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறாள்
சீட்டு வேண்டுமென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக