திங்கள், அக்டோபர் 25, 2021

எதுக்களிக்கும் நினைவுகள்

       உச்சிக்கேசத்தை இழுத்துப்பிடித்து ரப்பர்பாண்டுக்குள் சிறைப்படுத்தி

குட்டிப் பூச்சரத்தையும் செருகி
நெட்டிமுறிக்கும் அம்மைக்கு
அபிக்குட்டி
வைக்கிறாள் திருஷ்டிப்பொட்டு
அவள் அபிக்குட்டியாயிருந்த காலம்வரை
இழுத்துப்போகிறது அந்த மைத்தடம்

வேப்பங்குச்சி செருகிய காதுகளோடு
கயிறுகட்டிய சீசாவில் எண்ணெயும்
கடனில் பெற்ற அங்காடி அரிசியுமாக
ஓடிவந்த அம்மைக்காக
ஈரச் சுள்ளிகளோடு சுருண்டிருந்த தருணத்தின் பசி
நினைவில் எதுக்களிக்கிறது
பிரியாணி இறங்காமல்
கை கழுவி எழுபவனுக்கு
யார் வீட்டிலோ கிண்டியதைக்கூட
பொலவுசோறு என்று சொல்லத்தான் தெரியும் அம்மைக்கு
தனித்தனியாய் வாங்க ஏனமின்றி
பழங்குழம்பு ரசத்தோடு
ஒருக்களித்துக்கிடந்த பொலவுசோறும்
இவன் முகச்சுளிப்பும்தான்
அங்காடி அரிசிக் கஞ்சி
என்ற அத்தியாயத் துவக்கமென்பதை
நா
மறக்கவில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...