வட்டவடிவ மரவளையத்துக்குள்
பழக்கூடை, கிளி,பூங்கொத்து என்று
எதையாவது பின்னிக்கொண்டே இருப்பாள்
விஜிஅக்கா
பழம் எந்த ஓரம் சிவந்திருக்கும்
கிளியின் மூக்கு எப்படி வளைந்திருக்கும்
இலை ஓரங்களின் வளைவும் நுனியும்
எப்படி வேறுபட்டிருக்கும்
எல்லாம் அத்துபடி
திரைச்சீலைகளாக
மேசை விரிப்புகளாக
அவள் வளர்த்துவிட்டுப்போன கிளிக்கூட்டத்தை
அடுக்கிவிட்டுப்போன கனிவர்க்கத்தை
ஆசையாய்க் குசலம் விசாரிக்கிறாள்
அம்மாவிடம்
இதே படங்கள்தானா
எனச்சலிப்பு காட்டிய தங்கையிடம்
முன்னொருநாள்
சொல்லியிருந்தாள்
புதிய இடம் புதிய ஊர்
தன் கற்பனையை வளர்த்தெடுக்கும் என்று
தங்கைக்கு செய்தி உண்டா
அன்னை கேட்கிறாள்
இங்கு அந்த மரவளையங்களே
கிடைப்பதில்லை அம்மா...
திரைச்சீலை,விரிப்பு இடும் வழக்கமும் இல்லை
என்பதைச்சொல் அவளிடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக