யாரும் வராத வீடுகளில்
சோபாக்களின் மேல்
நாற்காலிகள் கால் நீட்டிக்கொள்கின்றன
அடுத்தடுத்து தொங்கும்
புகைப்படங்கள்
திரும்பி
எதிர் எதிராக உட்கார்ந்து
கதைக்கத் தொடங்குகின்றன
காட்சிப் பேழையின் பொம்மைகள்
கைகளை உதறிச் சொடுக்கு எடுத்துக் கொள்கின்றன
அதிலொன்று
துறுதுறுவென்று
கேட்கிறது...
மறைமுகமா என்ன சொல்றாங்க
இந்தக் கதவு திறக்க முடியுமா இல்லையா
முன்னாளில் அவ்வீட்டுக் குழந்தை விளையாடி
இப்போது காட்சித்தட்டுக்குக்
குடிவந்துவிட்ட கரடி பொம்மை
இரு இரு...
நானே அவனுக்கு விசா கிடைக்குமோ
இல்லையோன்னு இருக்கேன்...
வீட்டுத்தலைவி மெல்ல வந்து
சின்னத்திரைக்கு உயிரூட்டுகிறாள்...
போச்சு..
ஒண்ணும் புரியப்போறதில்லை
ஊரடங்கா..
ஊரடங்கு மாதிரியா
கிசுகிசுத்துக் கொள்கின்றன பொம்மைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக