துடியான தெய்வங்களைப் பின்மாலை இருளிலோ
நள்ளிரவு கடந்துமோ
வழிபட்டுக் கிடக்குமொரு மரபில்
படிகள்தோறும் ஏறி இறங்குகின்றன கால்கள்
யாருக்கும் இல்லாத வெட்கம் எனக்கென்ன
கிறீச்சிடுகின்றன கதவுகள்
கறை நல்லதாம்
பத்து ரூபாய் போதுமாமே
மிச்சமெல்லாம் வரவுதான்
***********************************
சற்றே பெரிய சட்டையாய் வாங்கிவைக்கும்
நினைவிலேயே
சன்னல் திரை தைத்தாயா அம்மா
போதாமையை எதிர்கொள்ள கைநிறைய யோசனைகளை வைத்திருந்திருக்கிறாய்
நூல் இற்றுப்போன மணிமாலையாக
உன் வாழ்வு
நெடுக சிதறிக்கிடந்தன
சொத்து என சொல்லிக் கொள்வாரின்றி
******************************************************
ஒரு குரல்வழிச் செய்தி வந்ததாக
அலைபேசி சொல்கிறது
சற்றே தாமதமாக
திறக்குமுன் யாவர்க்குமாக நீக்கப்பட்டதென
அதே அலைபேசி சொல்கிறது
அதைப்போலவே
எல்லாம்
தகவலெனக் கடந்துவிட முடியாத மனம்
நள்ளிரவிலும் தட்டியெழுப்புகிறது
என்னவா இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக