திங்கள், அக்டோபர் 05, 2020

வாழ்வின் நெஞ்சில் ஒரு மிதி

 

புதிய சுவற்றின் வண்ணத்தில் தார்கொண்டு
ஒரு கட்டம் வரைந்து போகிறவனை

நிறுத்திவைத்த
புதிய வாகனத்தில்
கோடுகிழித்துப் போகிறவனை

சொல்லும் சொல்லைத் திருப்பிப்போட்டு
துப்புகிறவனை

தன்கழுத்துக்கும்
கத்தி என்றாலும்
கைப்பிடி அழகைப்
பாடுகிறவனை

சகித்துக் கொண்டு
நடக்க வைக்கும்
வாழ்வின் நெஞ்சில் ஒரு மிதி
மிதிக்க வேண்டும் 

*********************************************

 என்றாவது ஒருநாள் பூத்துவிடும் என்ற நம்பிக்கையில்
நீர் வார்த்துக்கொண்டே இருக்கிறேன்
தாவரவியலின் எல்லா விதிமுறைகளின்படியும் 
வளரும் செடிக்கு
நான் ஒரு பொருட்டில்லை
உலகம் முழுக்க அதை வளர்க்கிறார்கள்
இங்கு மட்டும்
கூர் முள்ளோடு நின்றுவிட யார்கட்டளையோ

****************************************************************

ஆற்றில் நீர் ஓடுகிறதா

மண்டைக்குள்ளா
மனசுக்குள்ளா
எனப்புரியாத
குடைச்சல்
குவளை நீரில் கரைய வாய்ப்பில்லை
பாய்ந்து நீராடுவதில் பதட்டம் உண்டு
பழக்கமும் போய் விட்டது
படிக்கட்டில் நின்றபடி
பக்கச் சுவரைப் பிடித்தபடி
நெளியும் மீன்கள் கடிக்காதபடி
கணுக்கால் வரை நனைத்துக்கொண்டு
திரும்பிவிடுவேன்

இதற்கு ஆறு எதற்கு
குவளை நீரே போதாதோ
முகம் சுழிக்காதீர்கள்

அவ்வளவுதான்

ஆனாலும் வேண்டும்

ஆற்றில் நீர் ஓடுகிறதா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...