சனி, செப்டம்பர் 29, 2018

நதியில் தேயும் கூழாங்கல்

ஒருகை ஓசையைத்தான்
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
என்னிரு செவிகளும்
வேறு வேறு தளங்களில் கவனிப்பவை

கண்களோ முழுவட்டச்சுழல்

தலைசுற்றிய ஒளிவட்டத்தின்
ஒவ்வோர் சுடரின் அலைநீளமும்
ஆதியந்தம் அறியாது

என்ன ஒன்று
என் அழுக்குத் தளராடையும்
அள்ளிமுடிந்த கொண்டையும்தான்
எனக்கே என்னை நினைக்கையில்
தோன்றுகிறது

அளவுத்திட்டத்தில் சமைத்த கரண்டிக்கு
ஒருநாளும் கை குவித்தறியா சுவை
மனப்பாடம்
என்
கணிணியோ எனக்கு முன்
பைக்குள் நுழைத்துக்கொண்டு
படியிறங்கும்

என்னுடையதெல்லாம்
என்னுடையதல்ல என்பதறியும்
என்கடனட்டையின் காப்பு எண்

இருந்தாலும் கடையிதழில் அலட்சியம்
வழியவிட இன்னும் வரவில்லை உன்னைப்போல்

போகட்டும்
இப்படியே நதியில் தேயும் கூழாங்கல்

ஏப்ரல்2018 மங்கையர் மலர்

உதட்டோர ரத்தம்

திறந்த காயத்துக்கு
கத்தியால் மருந்திடவே
படித்த பரம்பரை
அரிவாளால் பூப்பறிக்கும்
பனித்துளியையும் விசும்பின்
கண்ணீரெனக் கசிந்த கதை
பூ மறக்கும்
கையோ கத்தியோ இங்கேதானே வரப்போகிறாய்
என சத்தமின்றிச் சிரித்தபடி காத்திருக்கும் மயானம்
அங்காளி உதட்டோர ரத்தத்தை
கைக்குட்டையால் சரிசெய்துவிட்டு

 நாவைச் சரியாக 
தொங்கப்போட்டுக் கொள்கிறாள்




மழை மழை....

நீங்கள் புறக்கணிப்பீர்கள் எனத்தெரிந்தாலும் 
காற்றோடு போராடிக்கிழிந்து 
உங்கள் கொல்லை வாழையிலேயே 
தங்கிவிடுகிறது இலை
ஆறுதலாக இரண்டு துளிதெளித்து 
நகர்கிறது மழை

****************************************
மழையின் குளுமை மனங்கொள்ள
வா
என்னை ஓரமாக எடுத்து வை 
யாரைக் கூப்பிடுவதெனத் 
தவிக்கிறது தொட்டிச்செடி

****************************************************
பார்ப்பதற்கு நீங்கள் தேடுவது போலவே
விழுவதற்கு மழையும் தேடுகிறது 
ஒரு கண்ணாடி சன்னலை
அப்போது வழிந்த அழகின்
நினைவு
அதற்கும்
(nandri TK Kalapriya)
****************************************************

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

வழிவிடாக் கிணறு



வழிவிடாக் கிணற்றடிகளிலிருந்து
தெருமுனை அடிபம்புகளில் 
குடத்தோடு நின்றே நசுங்கினாள்
ருக்கு பெரியம்மா
உரிமை 
முன்னுரிமை
சலுகை 
யாவும் 
குழாயடிச் சொற்களாகவே 
அறிந்திருந்தாள் ராசாத்தி அத்தை
அவரவர் வீடு அவரவர் குழாய் 
என்றொரு நாள் பிறந்தபோது 
விடுதலை தரிசித்தாள் பூமா சித்தி 
அதிலும் காற்று வந்து 
உறக்கம் கலைத்தது
இன்னும் இருக்கிறார்கள் 
எம் அக்காளும் தங்கையும் மகள்களும் 
இறங்கிய கர்ப்பப் பையையும் 
பொருட்படுத்தாது சிக்குநடை போடுவதும் 
வேலைக்குமுன் வீடுமுழுக்க 
கழுவவும் துப்பவும் நிரப்பி நிரப்பி 
பிளாஸ்டிக் குடம் கண்டவனை 
வாழ்த்தியபடியுமாக

இருபது லிட்டர் கேனில் கணக்கிடப்படும் 
நாளான வாழ்வில் 
வந்தவர்க்கெல்லாம் நீர்ச்சொம்பு தந்த 
மரபு மாற்றியாயிற்று 
நீங்கள் தண்ணீர் என்ற சொல்லுக்குப் 
பொருள் மாற்றியதுபோல

கூவிச் சலித்து 
ஓட்டமே நடையென 
இடந்தேடி தடந்தேடிக் 
குடங்கள் சுமப்பதே பொழுதாகிப் 
போனவளுக்கு 
ஒருகை நீரைச் சேர்ப்பிக்கவும் 
வக்கிலா வாழ்வில் 
பரந்த 
கடல் நீரின் உப்பு காட்சி குமட்டுகிறது
என்கை இறுகப் பற்றுகிறது 
தண்ணீர்ப் போத்தலை
உயிரோவியத்துக்கு நன்றி தோழர் Ravi Palette

ரோஸ் கவுன்

ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல ரோஸ் கவுனில் சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன் 
குழம்பு சுடவைத்து 
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும் 
கனவில் நினைவு வரும் 
ஒரு காலத்தில்
அதே ரோஸ் இல்லையென்றாலும் 
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத்துணி 
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே 
நினைவு வந்தது 

இப்போது சுற்றினால் தலை சுற்றும் என
சிரித்துக்கொண்டாள்

அச்சம் என்பது....

பொய்யுரைகளுக்கு
பொய்ச்சிரிப்புகளுக்கு
பொய்ம்முகங்களுக்கு
ஒரு மச்சம்கூட இல்லையே சகாவே


***************************************************************


அது முதலில் சன்னலுக்கப்பால் நின்று
 வெளிச்சமிலாப்பொழுதுகளில்
 எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது
ஏதோ நிழலாடுகிறதே என
தலை நீட்டியபோது
அரளிக்குத்துக்கும் சுருள்
குரோட்டனுக்கும்
நடுவே பதுங்கிக்கொள்ளும்
பார்த்தும் பாராதது போல்
உள்திரும்புகையில்
துணிந்து கதவருகே ஒண்டி நிற்கத் தொடங்கியது
இரவலனாக நின்ற பரிதாபம்
காணச்சகியாது
ஒரு பிடி அன்னமிட்ட நொடி முதல்
கர்ணகுண்டலமானது
செஞ்சோற்றுக்கடனாம்
ஆடிக்கொண்டிருக்கும் அவலமே
ஆட்டுவிக்கிறாய் ஆடுகிறோம்





திங்கள், ஜூலை 16, 2018

நெட்டை மரம்

பின்முதுகின் கண்கள் உங்களைத்தான் பார்க்கின்றன
குறிப்பாக உங்கள் இதழ் அரும்புகிறதா என
கற்பிதம் செய்து கொள்ளுங்கள்
அது நெட்டை மரமென

*******************************************************************************

வீசி எறிந்துவிட விரும்பினேன்
நீளாக்கைகளில் நிறைந்திருந்தது தேன்கூடு
விலகிச்செல்ல எழுந்தபோது
நில்லாக்கால்கள் பதிந்திருந்தது நெடுவானில்
கரையேற எத்தனித்தேன்
முங்கியெழுந்த தலையின்
நாற்புறமும் நீர்வெளி
நெருப்புக்குவியலின் நடனத்தில்
நேர்நிற்கும் ஒற்றைப்புள்ளி
தேடும் செம்போத்து
வருமோ
பற்ற விரல் தருமோ
அதற்கும் சுடுமோ....

**************************************************************

ஒரே அளவிலான சன்னல்கள்
ஒரே மாதிரியான வெளிச்சம்
ஏறியிறங்கும் அலைவழி உடைந்த படகு

**********************************************************
காயப்படுத்துவதை விருப்புடன் செய்யும்
உன் கைகளில் சிறு துரும்பையும் யாரும் கண்டதில்லை
உன்னால் முடிகிறது
யார் மனதையும்
ஒரு கோவை இலையைக் கிள்ளி கசக்கி
சிலேட்டின் எழுத்தாக்கிட

****************************************************************

தீப்பொட்டுகள் சுடர்ந்து கொண்டிருக்கின்றன
உயர வேறுபாடிலாது எல்லாக்கிளைகளிலும்
நல்ல பெயர்தான்
கல்யாண முருங்கை

****************************************************
மயில் வரக் காத்திருக்கையில் 
பூனைக்குட்டிதான் வருகிறது
செத்த எலி வாடை உணர்த்தும் கவிச்சிப்பார்வையோடு
குமட்டுகிறது
இதுவரை உணராக் குற்றவுணர்ச்சி

**********
**************************************

பதற்றமாயிருக்கிறது
பழுத்துவரும்
இலைக்காம்பில் 
புதுக்கூடு

*********************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...