வெள்ளி, அக்டோபர் 14, 2016

உன்னைப்போல் நான்

நான் பேசுவதேயில்லை
நீயேன் பேசுகிறாய்
என்றபோது வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீ பேசிதான் இதைச் சொல்லுகிறாய் என்பதை
எடுத்துச்சொல்லாது பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னைப்போல் நில்
நட
பாடு..தூங்கு ...கட்டளைகளைக்
கார்ட்டூன் குரலில் சொல்லியபடியே சுழல்கிறாய்
உன்மேலன்றி
என்மேல் எனக்குக் கோபமாக வருகிறது
உன்னைப்பற்றியே நீ
நினைக்கவிடாது
என்னைப்பற்றியே நினைக்க வைத்திருக்கிறேனே என்று.


நிற்க.
இது காதல் கவிதை இல்லை



வெளிப்படை

கொய்யாவை சிவப்புதானென்று நிரூபிக்க 
பிளந்து வைத்து
கடை நடத்துபவள்
கற்றுத்தருகிறாள் வெளிப்படைத்தன்மையை
அப்படியொரு சொல்லே அறியாமல்

நமக்கோ 
அவள் மட்டும் அப்படியிருந்தால் போதும்

அவளுக்கென்ன ஒரு தள்ளுவண்டி எடைக்கல் தட்டு
நமக்கு அப்படியா

வரையப்படும் அன்பு

கிளையில் அமரமுடியாவிட்டால் என்ன
பக்கத்து கிணற்றடி வெயிலில்
நின்றுவிட்டுப்போகிறது நாய்
மெனக்கெட்டு சிறகுகளைத்தேடி
சுற்றிச்சுற்றி வருகிறீர்கள்
வரைந்து விடவாவது வேண்டுமென
கிரேயான்களோடு துரத்துவதெல்லாம்

 அன்பில் சேர்த்தியா

தோழா சார்

சார் சார் எனக்கூப்பிடாதே
சார் என்பது அடிமைசாசனம்
சார் என்பது நிறங்களின் பேதத்தால் எழுதப்பட்டது
சார் என்பது அடியோடு குனிந்த சார்பு
என்றெல்லாம் சொல்லும் தோழா
எல்லா சாரையும் சார் எனக்கூப்பிட்டே வளர்ந்துவிட்டேன்

பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே
சார் என அறியப்பட்ட ஊர் எங்களது
பின்னர் டீச்சர் வீட்டு சார்களை
பஞ்சாயத்து ஊழியர் சார்களை
பார்த்துக்கொண்டிருந்தபோதே
அண்ணன் தம்பி மாமன் மச்சான்
என்றழைக்கப்பட்ட
அண்டை அயலார்களும்
சார் பட்டத்துக்குத் தேர்வானார்கள்
சிற்றப்பன் பெரியப்பன் முறைகளும்
சார் என்பது சௌகரியமானது

மாமனை மருமகனும் 
சார் என விளித்து சாந்தி பெற்றார்
அதிகாரத்தின் படிகளை
நல்ல சார் கற்களால்தான் கட்டினோம்

பலசரக்கிலிருந்து பாஷாணம் வரை விற்குமிடமெலாம்
சார் என்று விளிப்பவரே
சந்தையைப் பிடித்தார்.

கணவனும் சார்தான்
எங்க சார்"
இவ்வளவுக்குப்பிறகு
திடீரென்று தோழமை மரியாதை
ஏதுமில்லை அதில்
துடைத்தெறி என்கிறாய்
சாதியொட்டு் துறந்த தெருப்பெயர்கள் கூட பழகிவிட்டன
சார் ஒட்டு துறந்தால்
தலையைக் காணாதது போல் தோன்றிடுதே
என்ன செய்வேன் தோழா சார்

இலக்கு நோக்கி

திடீரென்று அந்த வசவு
உங்கள் காதில் விழுகிறது
யாரோ யாரையோ
என்று நினைத்திருக்கிறீர்கள்
தேயும் பருவத்தில்தான்
அந்தப்பேரொலியின் இலக்கு
நீங்கள் என்பதே புரிகிறது.
உங்கள் குழப்பம் லேசானதாகத்
தொடங்கி வலுத்து
தலையில் இடித்துக்கொண்டிருக்கையில்
யாரோ அந்த யாரிடமோ
ஏன் எதற்கு எனக்கேட்ட சப்தம் வருகிறது
தலைக்குள் இடித்த
உரலையெல்லாம் இழுத்து நிறுத்திவிட்டு
விடைவரும்
அந்த மைக்ரோ நொடிக்காக
கவனத்துடன் நிற்கிறீர்கள்
ஆவேசத்தையெல்லாம்
கழுவிவிட்டு
மதகிலிருந்து குதிக்கும் சிறுவனின் வேகத்தில் 
ஒரு சிரிப்பு 
வசவொலியே மேலானதாக..

செவ்வாய், அக்டோபர் 04, 2016

கிரீடங்களோடு பிச்சைப்பாத்திரம்

எளியவளாக இருக்காதே என எச்சரிக்கிறார்கள்
ஒரு கிரீடத்தை மறைவிடத்திலிருந்து
உங்களுக்கு மட்டும் தெரியும்படி 
காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
நாடகத்தின் வசனம் மறந்த
குழந்தையின் திகைப்புடன் நீங்கள் 

என்ன என வினவுவதை
தலையிலடித்தவாறு
நகர்ந்துநின்று பல்லைக்கடிக்கிறார்கள்
உடைவாளுக்கு
பழம்புளி போட்டுத் தேய்த்தாயிற்றா
என்பதைக் களத்தில் உங்கள்
கரம் உயரும்போது
பிடித்தவாறு கண்கசியக் கேட்கிறார்கள்
நீங்களும்
இதைவிட அக்கறை எவர் காட்டமுடியுமென
பிச்சைப்பாத்திரத்தைக் கழுவித்
தயாராகிறீர்கள்

பழைய நம்பிக்கை

நிறையப் பேசவேண்டியிருப்பதில்லை
எதையும் கேட்கவேண்டியிருப்பதில்லை
இன்னும் நம்பிக்கையோடு
நடக்க முடிகிறது
ஏதோ ஒரு சந்து முனையில்
வீட்டின் பழைய நாற்காலியை எடுத்து வைத்து
காந்திக்கும் காமராஜருக்கும்
படத்தின் அளவில்

 பாதி உயரமேயான சாமந்தி மாலை
சார்த்திவிட்டு 

வேலையைப் பார்க்கப் 
போய்விடுபவர்கள் இருக்கும் தெருவில்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...