செவ்வாய், அக்டோபர் 18, 2016

தூண்கள் இல்லாத வீடு

சிலநேரம் வானவில்லுக்காகக் 
காத்துக்கொண்டிருக்கிறோம் 
எப்போதோ பார்த்தது 
பிள்ளைக்குக் காட்டலாமே என்று
மேகமே திரளாவிடில் என் செய்ய

****************************************************************
எவ்வளவோ இலைகள் உதிர்ந்துவிட்டன
இந்த உலகம் தோன்றிய அல்லது 
இலைகள் தோன்றிய நாளிலிருந்து
ஆனாலும்
இதோ இக்கணத்திலும் 
துளிர்த்துக்கொண்டிருப்பதை
நீங்கள் நம்பிக்கை என்கிறீர்கள்
அவர்கள் அறியாமை என்கிறார்கள்
நான் இயற்கை என்கிறேன்
அந்த துளிர் எதுவுமே சொல்வதில்லை


******************************************************************
திரும்பத்திரும்ப சொல்லப்படும் 
விளக்கம் அலுப்பூட்டுகிறது
திரும்பத்திரும்ப கேட்கப்படும்
கேள்வி பதிலை இழக்கிறது
திரும்பத்திரும்ப நடக்கும்
நிகழ்வில் கவர்ச்சி தேய்கிறது
திரும்பத்திரும்ப பகிரும்
செய்தியின் நிறம் மாறுகிறது
அதனாலென்ன
திரும்பத்திரும்ப எல்லாம்
நடக்கத்தான் செய்கிறது


*************************************************************************
சொன்னால் போதும்என்ற 
அழுத்தம் நெருக்கும்போதெல்லாம் 
யாரிடமாவது சொல்லித்தீர்க்கிறீர்கள்
அந்த சொற்களுக்குப் புரிவதேயில்லை
அவற்றை நீங்கள் 

மாத்திரைகளின் அந்தஸ்தில் வைத்திருப்பது
சொல்லிக்கொள்ளவே 

வைக்கப்பட்ட தூண்களும் இல்லாத வீட்டில்
வசிக்கும் காலத்தில் என்னதான் செய்வீர்கள்.


**************************************************************************


ஞாயிறு, அக்டோபர் 16, 2016

இரட்டை வாத்து டாலர் சங்கிலி

இரட்டை வாத்து டாலர் சங்கிலிகள்
பெண்பிள்ளை
பள்ளி தாண்டுமுன் செய்துவைப்பது 
எழுபதுகளின் 
பொறுப்பான குடும்பத்தின் அடையாளமாம்
அத்தை சொன்னாள்
வெள்ளைக்கல் பதித்து ஓரிரு சிவப்புக்கல் 
அலங்காரம் கொண்ட வாத்துகள் 
வசதியுள்ளவர் வீட்டுப்பெண்களின் 
தாம்புக்கயிறு
சங்கிலிகளின் நுனியில் நீந்திக்கிடந்தன
கல்வைத்து நட்டப்பட கணக்கு பார்க்கும்
 நகைச்சீட்டு அம்மாக்கள்
 தங்கத்தில் தகடு போல 
வாத்துக்களை உருவாக்கி 
கண்ணுக்கு ஒரு சிவப்புக்கல் வைத்து 
மகள்களை திருப்திசெய்தனர்
வாத்துகள் நீந்துவது தண்ணீரிலல்ல 
கண்ணீரில் என்பதைக் 
கண்டுகொண்ட சிலபெண்கள் 
கண்டுபிடித்தனர் தாமரைப்பூ டாலர்களை
தவறாமல் இலை சேர்த்துச்செய்யுங்கள் என்று 
அத்தை சொன்னாள் 
தண்ணீரோ கண்ணீரோ ஒட்டாத 
மலர்ச்சிக்கான கனவில்.

எப்போதம்மா டாலர் சங்கிலிகள்
வழக்கொழிந்தன என்றபோது
அத்தைக்குக் கேட்காதபடி
அம்மா சொன்னாள்
பத்து பவுன் போட்டாலும்
புலிநக டாலரோடு மாப்பிள்ளைக்கு 
சங்கிலியென பங்கு கேட்ட 
உன் மாமன் காலத்துக்குப்பின்தான்
வாத்துகளையும் தாமரைப்பூக்களையும் 
கைவிட்டோம் என்று.

வாத்துகளாவது கரையேறினவே
எனப்பெருமூச்சு விட்டபடி
மாப்பிள்ளையின் கைச்சங்கிலிக்கு 
பணம்கட்டி முடித்தாள் அக்கா


இருந்த காலம்

நாய்திங்குமா அந்த வரிக்கியை 
என்று வாய்சொன்னாலும் 
ஒரு காய்ச்சலுக்கு 
ஏங்கிய காலங்கள் இருந்தன
நடந்தே கடத்தல் இயல்பானபோதும் 
பாட்டு பாடியபடி தினமும் கடக்கும்
டவுன் பஸ்ஸுல 
ஒருநா ஏறிட மாட்டமா 
என்று ஏங்கிய காலங்கள்
இருந்தன
பிளஷர் கார் வாசலுக்கு வரவென்றே் 
சாவோ வாழ்வோ 
நெருங்கிவிட வேண்டும் 
என ஏங்கிய காலங்கள் இருந்தன.
வருவார்க்கொன்று ஈதலின்

புகழ்பாடியபடி
பழையது பிழிந்து உறிஞ்சிய 

காலங்கள் இருந்தன
இதையெல்லாம் கூட 

சொல்லிக்கிடக்கப்போகிறோம் 
என்று அறியாத காலங்கள் இருந்தன.

மணிப்பயலின் வண்டி

ஈருளி ,பால்,மோர்,சர்க்கரை,
இடியாப்பக்குழல்
முறுக்கு உரல்
சமுக்காளம்,ஈச்சம்பாய், பாதாளக்கரண்டி
இரவல் வாங்கவென்றே 
யார் வீடு செல்வதென்று தெரியும்
உடைக்காதே,பிய்க்காதே,சிந்தாதே
அறிவுரைகளை கவனித்தது மாதிரியும்
உள்ளிருக்கும் குத்தலைக் 

கவனிக்காத மாதிரியும்
வரத் தெரிந்த மணிப்பயலுக்கு
டுர்..டுர் டுர்ரென ஒலியெழுப்பாமல் 

வண்டியோட்டதான் பழகவில்லை

அம்மாவின்நெளிமோதிரம்

நெளிமோதிரம் 
ஒன்றிருந்தது அம்மாவிடம்.
மாங்காய் நெக்லஸும்
குழுப்படத்திற்கு 
நெளியைப்போட்டுக்கொண்டு போனபோது 
தெரியாது
முகமே புள்ளியளவு தெரியும் படத்தில் 
நெளியெல்லாம் பதியாதென்று
மாங்காய் நெக்லஸ் எப்படியிருக்குமென்பதை 
எங்கள் யாரையும்விட 
எங்கள் ஊர் கூட்டுறவு வங்கி தராசும் 
கடன்பிரிவு ஊழியரும் நன்கறிவார்
விரலில் 
போட்டுக்கொள்ள முடியாமல் 
இற்றுப்போன நெளி 
இப்போதும் என் பெட்டியில் கிடக்கிறது
மாங்காய் நெக்லஸ் பழைய மாடல்
என்ற ஊகத்தில் அழித்தபோது 
அதிலும் 
மோதிரம்தான் செய்யலாம் என்றார் பத்தர்.
வருசாவருசம் வெக்கப் போனப்பயெல்லாம் 
தேச்சு பாத்ததிலயே 
தேஞ்சு போயிருக்கும் என்று 
சமாதானம் செய்த அம்மாவுக்குத் 
தெரியவில்லை 
எங்களுக்காக எப்போதும் தேயும் 
அவளுக்கு என்ன மிச்சமென்று

தவிப்பின் தொடர்ச்சி

பேசாதிருப்பது ஒரு தவிப்பு 
இல்லை 
தவிர்ப்பு என்று யாருக்கு சொல்ல 
விதை அடுத்த செடிக்கான 
தொடக்கம் என்றே பார்த்திருக்கிறேன்
இந்த செடியின் 
தப்பித்தல் என்கிறாய்

ஊர் வரைந்த மயில்

தன்மேல் எழுதப்படும் லிபி குறித்த 
விசனங்களோ கொந்தளிப்போ 
அடையாத தாளாகும் 
ஜென் நாளொன்றுக்கு காத்திருந்தேன்
இடையில்தான் எத்தனை யோசனைகள்
******************************************************************
ஆடு நகர்ந்துகொண்டேயிருக்கிறது
பச்சை படும்இடமெல்லாம்
கழுத்தில் கிட்டி மாட்டிவைக்காது 
என்ன வளர்ப்பு

********************************************************************
நீலம் ஒருவர்
பச்சை ஒருவர்
வட்டம் ஒருவர்
கோடு ஒருவர்
வரைந்து வரைந்து வந்திருக்கிறது 
நீங்கள் பார்க்கும் கோலமயில்
யார் அது என்பீர்கள்
யார்தானில்லை

*****************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...