செவ்வாய், நவம்பர் 21, 2017

நிறமிலியானவள்

திருத்தமான ஒரு சித்திரத்தை 
வரைந்தே தீர்வதென்றே நீ அமர்கையில் 
கையிருப்பில் வண்ணமேயில்லை 
அதனாலென்ன 
என் பசுமையெலாம் குழைத்தளிப்பேன் 
கசிந்துருகும் உளமஞ்சள்
இளமஞ்சளுக்கீடாகும்
கண்மணியில் நீலக்கீற்று 
கரைத்த சாந்தோ துளிப்பொட்டு
வரைந்து முடித்த ஆசுவாசத்தில் 

நிமிர்ந்தபோது 
ஒரு நிறமிலியாகி நின்று கொண்டிருக்கும் என்னை
இயல்பாக 

கடந்து செல்கிறாய்

********************************************************************

நீ அப்போது வெட்கப்பட்டிருக்க வேண்டும்
என்றார் நண்பர்
அப்படி ஒன்றும் நிகழவில்லை
அது வழக்கமும் இல்லை என்றேன்
வாழ்வின் நுண் கணங்களை இழந்தவள்
எனப் பரிதாபப் பட்டார் 
அப்படி ஒன்றும் தோன்றவில்லை
அதுவே வாழ்வும் இல்லை என்றேன்
ஒரு பெண்
பெண் போல இல்லாது போவதன்
அவலங்கள் குறித்து
அவர் இந்நேரம் 

ஒரு கட்டுரை வரைந்திருக்கக் கூடும்
நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
வெட்கம் கொள்ளாது போன
மனிதர்களைப் பற்றி
நுண் கணங்களின் வரையறை பற்றி
எங்களை எங்களைப் போலக்
காண முடியாத காரணம் பற்றி ....

"இருக்கட்டும் இருக்கட்டும்"


கடவுச் சொற்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
திரும்பத் திரும்ப
மின்னஞ்சல் ,முகநூல்,வானொலி,கட்செவி 
எங்கெங்கும் எச்சரிக்கை
துரத்திக்கொண்டே இருக்கிறது
பூட்டி வையுங்கள்
இறுக்கி வையுங்கள்
மாற்றுங்கள்
ஊகிக்கும்படி இருக்க வேண்டாம்
ரகசியங்களை உற்பத்தி செய்வோர்
ஒருபுறமும்
ரகசியங்களை உடைக்க விழைவோர்
ஒருபுறமுமான உலகில்
ரகசியங்களைப் பாதுகாக்க விழைவோர்
ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
உடைப்பவர்கள் பாதுகாப்பதும்
உற்பத்தியாளர்கள் உடைப்பதும்
என முரண் இணைகளும்
இருப்பதைப் பார்த்து
ரகசியங்கள் சிரித்துக் கொள்கின்றன
முதலில் சூட்டியவை
திருத்தியவை,மாற்றியவை,
ஒவ்வொரு தேவைக்குமான நடப்பு இருப்பு .....
தலைமுதல் கால்வரையிலான ஒவ்வொரு அணுவிலும்
கடவுச் சொற்களையே சுமந்திருக்கிறீர்கள்
அவற்றையே சுவாசிக்கவும்
அவற்றையே உண்ணவும் கூடிய வாழ்வில்
அவற்றை கழித்திடவே முடியாது
சுமந்திருக்கும் நீங்கள்
இந்த வரிகளுக்குள்ளும் அவற்றின் அங்கங்களைத்தான்
தேடுகிறீர்கள்
உங்களைத் தவிர
வேறெவராலும் அவற்றை அடையாளம்
காண முடிகிறதா என ரகசியமாக
நோட்டமிடுகிறீர்கள்
உங்கள் கடவுச் சொல்லின் ஒரு எழுத்து
ஒரு பகுதி
ஒரு பாணி
வேறெவரிடமும் இருக்கக் கூடும்
என்பதே உறக்கம் பிடுங்குகிறது.
உங்கள் உடைமை எல்லாம் உங்கள் உடைமை அல்ல
உங்கள் மூலம் உடைமையாக இருப்பவை
இருக்கட்டும்.


தயாவனம்

சொல்வதற்கென்று ஏதுமில்லாமல் போகவில்லை
கேட்கும் இடத்தில் காகம் கரைந்து கொண்டிருக்கிறது
நிசப்தத்துக்கும் இரைச்சலுக்கும் 
வேறுபாடு மறைந்த காலம் 
அரூபக் கதவுகளைத் தட்டித்தட்டி 
தட்டித்தட்டி
உங்கள் கரங்கள் காய்த்துக்கிடக்கின்றன
என்றாலும் 

வெளுக்கும் என்றே உறங்கப் போகவும்

*********************************************************
இருத்தல் என்பதற்கு
இருத்தலே பொருளல்ல
தொலைந்து போனதாகவும் இருக்கலாம்
தொலைந்து போனதையெல்லாம்

 கண்டடைந்துவிடும் அதீத நம்பிக்கையில்
வெளிச்சத்தின் மேலேயே
தேடிக்கொண்டு திரிகிறேன்
வெளிச்சத்தின் உள்ளடுக்கில் 

உறங்கும் இருள் சிரிக்குந்தோறும்
திடுக்கிட்டு விட்டு
தொடர்கிறேன்
வெங்காயத்தோல் எத்தனை அடுக்கென்று சொல்ல


******************************************************************

தயாவனம்

வாகனவரிசையில் 
ஒளிர்பச்சை தரிசனத்துக்குள்
எத்தனை முறை....
மெய்யும் பொய்யும் புனைவும் 
தவிப்பும் கொண்டு 
யாரிடமோ நீட்டப்படும் கரங்களுக்கு
சாந்தி செய்ய வாய்க்காத
குறுகுறுப்பு துளிர்த்து துளிர்த்து 
விர்ரெனத் தாண்டுகையில் பேயாட்ட விருட்சமாகி
இரு நிமிடத்தில் இலையுதிர்ந்து
பட்டென பட்டு
அரை நிமிடத்தில் அப்புறமாகி
அடுத்த தயாவனம் 
கடைத்தெருவிலோ
சிவப்புத்தடையிலோ படரும்


இல்லாதபோது பெய்த மழை

இல்லாதபோது மழை பெய்திருக்கிறது
எப்படித் தெறித்திருக்கும்
எப்படி வழிந்திருக்கும்
எப்படித் தேங்கியிருக்கும்
எந்த சுவடும் இல்லாது போன 
இந்த மாலை துக்கமாய் இருக்கிறது
இருக்கும்போது

நடப்பது எதையுமே உணரமுடியாது போகிறது
நீ ஏன் இல்லாதபோது நடந்த ஒன்றைப்பற்றி
இவ்வளவு வருந்துகிறாய்
நாளையும் மழை வரலாம்

என்று நீ ஆறுதல் கூறுகிறாய்
உணராத சொற்களோ புதிய துக்கம்
நேற்றைய மழையும்
நாளைய மழையும்
ஒன்றாகி விடுமா

நாடும் நாட்டு மக்களும் .......

சில சாலைகளின் படங்கள் 
நம்மை நடக்க அழைக்கின்றன
நடந்தவர்களுக்குத்தான் தெரியும் 
எப்போது 
தகிக்குமென

*******************************************

பூஞ்சையான ஒரு நாய்க்குட்டி
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
உங்கள் கவலையோ
அது வாலாட்டுவது 
யாரிடம் என்றுதான்

****************************************
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் 
கூச்சம் அடையுமளவு 
அவர்கள் நாகரிகம் பழகவில்லை
பார்த்துக்கொண்டே இருப்பது தீர்வல்ல 
என நீங்கள் உணரவில்லை
நாடும் நாட்டு மக்களும்....
...........,..........
அதிகம்போனால்
என்னவாம் என்பீர்கள் சந்தானம் போல
அவ்வளவுதான்


****************************************

அடித்துப்புரண்டோடும்
காட்டாற்றோரச் சிறு
பாறையாகக் கிடந்திருந்த நாளை நினைக்கிறது
கடலோரப் பெருமணல்
வாழ்வுதான்


***************************************

எவ்வளவோ நினைத்திருந்த ஒன்று 
ஏதுமற்றுப்போவதுவும்
ஏதுமறியா ஒன்றுக்காய்
எவ்வளவோ ஆனபின்னும்
ஏதேதோ தோணுவதும்
இவ்வளவுதானோ என்ற
கனத்துடன் அலைவதுமான
வாழ்வை
வட்டிலில் வைத்து நீட்டியிருக்கும் உலகை
கண்ணீரை விழுங்கும் கணத்தில் கூட 

காறித்துப்ப விட மாட்டேன் என்கிறீர்கள்
அடக்கிய கண்ணீருக்கு 

ஆயுள் முப்பது நாளா


மறைக்கும் குழல்

வெற்று நெற்றியில் 
ஒற்றைவிரலால் தள்ளிக்கொண்டேயிருக்கும்
முதியவளின் கண்ணை 
இன்னும் மறைக்கிறது
சுருண்டு ஆடும்
குழற்கற்றை
***********************************************

விழுதுகள் படர்ந்த தூரம் விட்டுப் 
பாதை போடச்சொல்லி கெஞ்சிப்பிழைக்கும்
பிழைப்பில் ஆலென்ன
அரசென்ன
சிறுமை சிறுமை எனக்கரைந்த காகம் 
அமர மின்வடமும் தோதுதான்


**********************************************

பிடித்திருப்பது எதுவெல்லாம் 
எனப்பிட்டு வைக்கத் 
தெரியாத பிரியங் கொள்ள 
நாடினேன் பிதாவே
பிட்டுப்பிட்டு வைப்பதென்ற வரியை மட்டும்
கோடிட்ட இடத்தில் நிரப்பியது நீயா
நானேதானா


*********************************************************


கைகளுக்குள் நிறைந்த நீரும்
கையிடுக்கில் உறுத்திய மணலும்
இப்போதும் இருக்கிறது
ஆற்றில் இல்லாத ஈரத்தை
அங்கேதான் கண்டடைந்தேன்



******************************************************

யாராவது ஒருவர் அரங்கிலிருந்து வாருங்கள்எ
ன மந்திர வித்தைக்காரர் அழைக்கும்போது 
நீ போவாயென நானும்
நானோ என நீயும்
ஆசனத்தை இறுகப்பற்றியவாறு பார்த்துக்கொண்டோம்.
தற்காலிகமாக தொலைவதில் 

என்ன சுவாரசியம் என 
நிச்சயம் சொல்லிக்கொள்வோம்
அடுத்த சண்டையில்


*****************************************************


பெருக்கெடுக்கும் கண்ணீர்நதியை விட
அதிகம் நனைத்து விடுகின்றன
வீழாது சுரந்து நிற்கும்
சில துளிகள்




***************************************
















வியாழன், ஆகஸ்ட் 31, 2017

சாலையோர அங்காளம்மை

பூச்சொரிதல் ஏற்பாடுகளின் 
தடபுடலைப் பார்த்தபடி சிரித்திருக்கிறாள் 
ஆற்றோர வெள்ளந்தாங்கி அம்மை
மணல் லாரிகளைக் காத்திருக்கும் இப்போதும்
அதே பெயர்
அசௌகரியமா இல்லையா 
எனத்தெரியவில்லை

*******************************************
வீசிப்போகும் காணிக்கைகளின் டங்டிங் ஒலியோடு
தனித்திருக்கும்
சாலையோரக்
கொட்டகையின் அங்காளம்மைக்கு
இளநீர்க்குலைகளோடு வாசலில் கடைவிரிக்க 
செல்லம்மை வந்தால்தான்
மனுஷவாசம்
செல்லம்மை 

அரிவாள் வீசும் அழகைப் பார்த்து
ரசிக்கும்போது சிந்திய புன்னகைதான் 

உறைந்து கிடக்கிறது அங்காளி சூலி முகத்தில்


********************************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...