வியாழன், டிசம்பர் 09, 2021

அப்பா விளையாட்டு

 சிவப்புக்கட்டி லைப்பாயில்

பாதியை வெட்டி
ஆற்றுக்குப் போகிறவர்களும்
கிணற்றடியில் குளிக்கிறவர்களுமாக
ஒரு குடும்பம் ஒரு சோப்பு
அப்பாவுக்கு மட்டும் விதிவிலக்காக
ரௌண்டு சந்தன சோப்பு
அட்டை விளையாட்டுக்கு
மாசமொன்று வரும்போது
எழுத்துக்கூட்டிவிட்டு
முகர்ந்து பார்க்கலாம் வரிசையாக
நெளிநெளியாக என்ன எழுத்து
அழகா இருக்கணும்னா
வாசனையா இருக்கணும்
தனி வாசனை வேணும்னா
அப்பாவாகணும்
அக்குளுக்கும் கழுத்துக்கும்
அள்ளி அள்ளி பவுடர் போடலாம்
காலியாகப்போனாலும்
அஞ்சு ரூபாய்க்குழி டப்பாவின்
அடிப்பிடித்த பூதரமாவை
பஞ்சுக்குள்ளிருந்து வந்துவிடும்போல ஒற்றி ஒற்றி ஒப்பேத்துகிற அம்மாவிடமிருந்து விடுதலை பெற்று
உள்ளங்கையில் கொட்டி அப்பிக்கொள்ளும் நாள்
அப்பாவான பின்தான் வரும்
அப்பா விளையாட்டில் மறக்காமல்
ஆளுக்கொரு சந்தன சோப்பு
ஆளுக்கொரு
பவுடர் டப்பா
வாங்கித்தருவான்
பின்னொருநாள்
குழறியபடி
வரத்தொடங்கிய அப்பாவின் வாசனை
அடி உதை அழுகுரலாக வீடெங்கும் மிதக்க
அப்பாவாகி விடாமலிருக்க
வேண்டிக்கொண்டது பிள்ளை மனம்

அவர்களின் உலகம்

 பக்கத்து வீட்டின் சமையலறை

மேடைக்குக்கீழோ

பத்தாயத்தின் மேலோ
சுவாதீனமாக
ஒளிந்து பிடித்து விளையாடிய பிள்ளைகள்
பால்குடி மறக்கடிக்கவென்று
தூக்கிச்செல்லத் தொடங்கி
மூன்றாவது வீட்டுப்பிள்ளையை
இடுக்கிக்கொண்டே
வேலை முடிக்கும்
அத்தைகள்
மருமகளைக் குறை சொல்லியபடி
திண்ணையில் உட்கார்ந்த
எதிர்வீட்டுக் கிழவிக்கும் சேர்த்து சோறுவடிக்கும் அம்மாக்கள்
இல்லாமல் போகவில்லை
இதைப் படிப்பதில்லை
அவர்கள்
இதைப் படிக்கும்
நம் வாழ்வில்
இல்லாமல் போன
ஆயிரத்தொன்றில்
இவையும் உண்டுதானே

என்பதில்தான்

 வரிசையாக நிற்கும்

எண்களிட்ட கறுப்பு வெள்ளை வண்ணமடித்த
குத்தகை மரங்கள் வழி வாகனம் விரையும்
ஒரு பொழுது
எண்ணிக்கைத் தொடர்ச்சியை கவனிக்கவிடாது
வரிசைப்படுத்திய ராஜாங்கம்
பாடல்நிற்குமேயெனப் பாதையில் நிற்காத பயணவேளைகள்...
சின்ன சொர்க்கங்களும்
வேகத்தடையில்
நின்றுபோகுமெனத் தெரியா பயணம்
********************************************************
ஒட்டிக்கொண்டிருப்பதில்லை
வெட்டிக்கொள்ள முடியுமா என்றும் தெரியவில்லை
பாதி நிலவு தேய்ந்துவிட்டாலும்
பார்த்துக்கொண்டே கடந்துவிடத்தோதாக
இந்தப்பாதை
ஒரு நதிக்கரையோடுதான் போகிறது
எல்லாம் ஏதோ ஒரு சமாதானந்தான்
வேறெப்படி
வாழ்வதாம்
***********************************************
எப்படியாவது
முடிந்துவிடும்
எப்படி என்பதில்தான் எல்லாமே
எப்படியாவது தொடங்கிவிடும்
எப்படி என்பதில்தான்
எல்லாமே
எப்படியாவது அறிந்து கொள்வாய்
எப்போது என்பதில்தான்.

தாவணிக்கவலைகள்

 வெள்ளையில் சிவப்பு புள்ளிகளும் சிவப்பு ஓரமுமாக சுங்கடிப்பாவாடை சொல்லிவைத்து வாங்கியபோதும்

'வி வைத்துக்கட்ட ஒருத்திக்கும் வரவில்லை

பழகப்பழக வருமென்றாள்
கே விஜி
சிவப்புத்தாவணி
மூன்றாம் முறை நனைத்தபின்
சுருண்ட ஓரங்களுடன் எப்போதும் இழுவை
கழுத்து ஒட்டிய வி
ரவிக்கைளை
எங்களுக்குமுன்
முந்திக்கொண்டு வரவேற்றார்கள் அம்மாக்கள்
ஆழ்கழுத்துகளை மூடிக் கரையேற்றும்
அற்புத வாய்ப்பென்று
சீயென்று ஆகிவிட்ட
சீருடைப் பச்சையை
வண்ணங்களின் பட்டியலைவிட்டு வழித்தெறிந்த ஆங்காரத்தில்
ஏழெட்டு ஆண்டுகளாவது
இருக்காது ஓருடையும்
மெல்லிய ஆர்கண்டிகளையும்
ஜார்ஜெட்டுகளையும்
புறக்கணித்தல் நல்லது
உடல்தெரியும்
ஓரம்பிய்ந்த உள்பாவாடையும் தெரியுமென்பதால்
தாவணிக்கும் மேலாக
இன்னொரு மாராப்பு
ரெக்கார்டு நோட்டுகள்
அவசியம் நினைவூட்டுவாள் அம்மா
எடுத்துப்போ
எடுத்துப்போ என்று
மானம் காத்த வகையில்
அப்பனையும் அண்ணன்தம்பிகளையும்விட
அதிகம் கடன்பட்டது ஊக்குகளிடம்தான்

நனைதலும் காய்தலும்

     சன்னலுக்கு வெளியே விரியும் தெரு

டைனோசரின் எலும்புக்கூடுபோல
அசைவின்றி கிடக்கிறது
நிசப்தமும் அசைவிலா நிலையும்
என்னை மட்டும் தொந்தரவு செய்யவில்லை
என உணர்ந்தபோது
நானும்
....கொண்டேன்
வௌவ். ...வௌவ்.
************************************************

உன்னைத் தெரியாதா
எனச்சிரிப்பவரை
உன்னைத்தான்
தெரியுமே
எனக்கெக்கலிப்பவரை
உன்னால் என்ன முடியும்
என ஏகடியம் செய்பவரை
உன் இடம் இதுதான்
என கோடு கிழிப்பவரை
திரும்பிய திசையெலாம் பார்க்கிறேன்
நனைதலும் காய்தலும் அவரவர் தேர்வு
மழைவெளிக்கு
உழக்குப்படியோடு வந்துநிற்காதீர்





புள்ளியின்மேல் ஏறிய நாள்

 யாருக்குத் தேவையாக இருக்கிறது

நீ கடந்து வந்தது

ஆனாலும்
தூணைப்பிடித்துக்கொண்டு
சாய்ந்தாடிய பாவத்திலேயே
பற்றிக்கொண்டிருக்கிறேன்
இன்னொருகை
ஏதாவது பிடிமானம் கிடைக்காதா
என்று அலைகிறது.
போகிறபோக்கில் என்றோ ஒருமுறை
யாரோ சொல்லிவிட்ட
ஒற்றைக்கையால் சமாளிப்பதைப்பார்
என்ற விதந்தோதலை மெய்ப்பிக்கவே
ஆயுள் கழிகிறது
ஒரு கணத்தின்மேல்
இருபத்துநான்குமணி
நேரத்தையும் ஏற்றி வைப்பதேன்

தொடக்கம் எளிது

 ஏ ஃபார்ஆப்பிளை

வரைந்துகொண்டிருக்கும்போதே

மாம்பழ நினைவு வந்து
மஞ்சள் நிறம் தீட்டிய பாப்புக்குட்டி
மஞ்சளின் நினைவில்
சரிபாதியாக சோளத்தைப்போல
மணிகள் வரைந்தாள்
பிறகு பக்கம் முழுக்க நீலம் பூசினாள்
சோளம் வாங்க
கடலுக்குப் போன கதை இப்படியாகத்தான் படமானது
உருக்கிய மெழுகை பத்திரப்படுத்தினேன்
*******************************************************
சரக்கொன்றையென வருத்தங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
நிமிருமுன் பூத்தும்
தன்னுடையது
உதிர்ந்துவிட்டதென
ஆசுவாசம் கொள்ளுமுன்
என்ன மஞ்சள்
என்ன மஞ்சள்
**************************************************
தனியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது
நிலா
சிரிப்பிலும் அழுகையிலும்
நீ சேர்த்துக்கொள்ளும்போதும்
மறந்துவிடும்போதும்




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...