சிவப்புக்கட்டி லைப்பாயில்
பாதியை வெட்டி
ஆற்றுக்குப் போகிறவர்களும்
கிணற்றடியில் குளிக்கிறவர்களுமாக
ஒரு குடும்பம் ஒரு சோப்பு
அப்பாவுக்கு மட்டும் விதிவிலக்காக
ரௌண்டு சந்தன சோப்பு
அட்டை விளையாட்டுக்கு
மாசமொன்று வரும்போது
எழுத்துக்கூட்டிவிட்டு
முகர்ந்து பார்க்கலாம் வரிசையாக
நெளிநெளியாக என்ன எழுத்து
அழகா இருக்கணும்னா
வாசனையா இருக்கணும்
தனி வாசனை வேணும்னா
அப்பாவாகணும்
அக்குளுக்கும் கழுத்துக்கும்
அள்ளி அள்ளி பவுடர் போடலாம்
காலியாகப்போனாலும்
அஞ்சு ரூபாய்க்குழி டப்பாவின்
அடிப்பிடித்த பூதரமாவை
பஞ்சுக்குள்ளிருந்து வந்துவிடும்போல
ஒற்றி ஒற்றி ஒப்பேத்துகிற அம்மாவிடமிருந்து
விடுதலை பெற்று
உள்ளங்கையில் கொட்டி அப்பிக்கொள்ளும் நாள்
அப்பாவான பின்தான் வரும்
அப்பா விளையாட்டில் மறக்காமல்
ஆளுக்கொரு சந்தன சோப்பு
ஆளுக்கொரு
பவுடர் டப்பா
வாங்கித்தருவான்
பின்னொருநாள்
குழறியபடி
வரத்தொடங்கிய அப்பாவின் வாசனை
அடி உதை அழுகுரலாக வீடெங்கும் மிதக்க
அப்பாவாகி விடாமலிருக்க
வேண்டிக்கொண்டது பிள்ளை மனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக