வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சிப்பத்தில் கட்டிய பகல்

கொஞ்சதூரம் நடக்கவும்
என்று சொல்ல ஆரம்பித்தார்
நல்லதுதானே எனக்கேட்டோம்
கொஞ்சநேரம் பேசாமலிருக்கவும்
கொஞ்சகாலம் எதையும் கேட்காமலிருக்கவும்
கொஞ்சவருடம் எதையும்
வெளிப்படுத்தாமலிருக்கவும்
வரிசையாகச் சொல்லப்பட்டபோது
நம்மையறியாமலே நாம்
பழகிவிட்டிருந்தோம்
பின்பற்ற
வாங்க நடக்கலாம்
என்ன நடந்தாலும்
******************************************************
இரைச்சலூடே வெயில் வருகிறது
இரைச்சலூடே இருளும்
வருகிறது
வெயிலும் இருளும் மாறிமாறி
இரைச்சல் மட்டும் நித்தியமாக
****************************************************
கடல் மஞ்சள் நிறமாகவும்
சூரியன் வெள்ளை நிறமாகவும்
தருக்கள் நீலநிறமாகவும்
உள்ள உலகம் உன் லட்சியம்
வர்ணக்குழம்பொழுகும்
தூரிகை தூக்கியாயிற்று
*****************************************
மின்சாரம் வந்துவிட்டது
இருளே வராதபோதும்
வெளிச்சக்குறைவைப்பற்றிய
பதற்றம்
வெளிச்சம் இருப்பதை
மறக்கடித்துவிடுகிறது
இனி
உத்தரவாதம் இல்லாவிடிலும்
வெளிச்சம் இருக்கும் என்று பரவும் நம்பிக்கை
எங்கோ உறுமிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் 
,அமைதிக்காக
இங்கிருந்தே ஃபூ என ஒரு புன்னகை
சிப்பத்தில் பகலைக் கட்டியாயிற்று


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...