வெள்ளி, செப்டம்பர் 27, 2019

பயணிகள் காத்திருக்கிறார்கள்



இது எனது இடமல்ல என்ற தீர்மானத்தோடு 
எவரோ துப்பிவிட்டுப்போன
வெற்றிலைச்சாற்றின் கறையைப் 

பாராததுபோல் நின்றுகொள்ள
வெயில் வற்புறுத்துகிறது

உங்களைத்தவிர மற்றவர்களிடமெல்லாம்

 கொய்யாப்பழம் வாங்கிக்கொள்ளக் 
கெஞ்சிக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி

வேறுதிசைப் பேருந்துஒன்று
ஆட்கள் ஏறும் இடைவெளியில்
மணிக்குயில் இசைக்குதடி...
என்று ஆரம்பித்துவிட்டுக் 

கிளம்பிவிட்டது

எதிர்ச்சாரியில் 

சைக்கிளைச் சாய்த்துப்பிடித்தபடி
கண்ணும் முகமும் கனியக் கதைக்கும் ஜோடி
தலைசாய்த்து சிரித்துக்கொள்கிறது

இருபக்கமும் எட்டி எட்டிப் பார்ப்பதால் 

வந்துவிடப் போவதில்லையென்றாலும்
வந்துவிட மாட்டானா 

என்றுதான் பார்க்கிறீர்கள்

வருவான் கடங்காரன்
'நா ஆளான தாமரை'யை அலறவிட்டுக்கொண்டு
என்றொரு முணுமுணுப்பு

விசுக்கெனப் புறப்பட்டுவிடுமுன்
எத்தனைக்காக எரிச்சல்படுவது




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...