புதன், டிசம்பர் 30, 2015

இயல்புநிலை


எல்லாம் சரியாகிவருகிறது
என்ன 
அடுப்பு ஏற்ற வாய்க்கவில்லை
இன்னும் பொட்டலங்கள் வேண்டியிருக்கிறது
கும்பி அடங்க
இன்னும் யாரோ தரும் ஆடைகளில்
மானம் காத்துக் கொள்கிறோம்
கூரை எங்களுடையது போல இல்லை
பள்ளிகளில்
அலறித்தவித்து
வெளியேறிய நேரத்தின் பாதைகள்
சூழ்ந்திருந்த நீர்
எங்கள்
கைரேகைகளையும் அழித்திருப்பதைத் தவிர
எல்லாம் சரியாகி வருகிறது
மழை ,ஆறு,ஏரி,குளம்,தண்ணீர்
இதெல்லாம் கேட்ட மாத்திரம்
நடுங்க வைத்த கெட்ட வார்த்தைகளாக
இருந்தது மாறி
பாரம்பரிய கெட்ட வார்த்தைகளைக்
கண்டுகொள்ள முடிவதால்
இயல்புநிலை
திரும்பித்தான் விட்டது போலும்
வாசலில் குழையும் சொறிநாய்க்கு
ஒருவாய் போட்டால் மட்டுமே
சோறுண்ணும் பழக்கமுள்ள
கைப்பிள்ளைக்குத்தான்
எப்படிப் புரிய வைப்பது
வாசலுமில்லை
நாயுமில்லை
சோறுமில்லை என்ற
இந்த இயல்பு நிலையை

கீற்று இணைய இதழில் 

டிசம்பர் பூக்கள் 2015

எப்போதும்போல்
அழுத்திஅழுத்தி..மீண்டும் மீண்டும்
ஈரத்தைத் துப்புரவாக மிதியடியில்
துடைக்கிறேன்
இதுவும் குற்ற உணர்ச்சி
தருவதாக
இந்நாட்கள் நெருக்குகின்றன    
(மழை வெள்ளத்தில்  சென்னையும் கடலூரும் தத்தளித்த நாட்கள் )
************************************************

ஏகப்பட்ட விளக்கு
இருள் இருக்கிறது இருளாகவே


*****************************

துண்டு போடு
உடை
நொறுக்கு
துளியாவது கிடைத்தால் சரி
******************************************

நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்
கை கழுவிக்கொண்டான்
சாக்கடைத்துளி
உதறினான்
சாக்கடைத்துளி
வாருங்கள்
சுத்தமாகிவிட்டது அவ்விடம்
அவனுக்கு
என்ன வேண்டுமென
நாம்
அமர்ந்து பேசலாம்
****************************************
ஒன்றையே பேச
உலகம் அனுமதிப்பதில்லை
ஒன்றே நிலையான
வாழ்வு
இதில் அடக்கமில்லை
**************************************
புரியாது எனத்தெரியும்
இவ்வளவு....
இப்போதுதான் தெரியும்
*************************************
உயரம் உன் பார்வை
துயரம்
அது வெறும் வானம்
**************************************

வெள்ளி, நவம்பர் 20, 2015

முகநூல் துளிகள் -3



வனத்துக்குள் துரத்து 
இல்லை சுட்டுவிடு 
சில்லறைக்கு மண்டியிடுமுன்
********************************************
தருவதற்கு ஏதுமிலா வெறும்
அகப்பை 
எரியட்டும்
*********************************
ஒரு நிமிடம்தான் 
நீ நீயாக 
பிறகு 
மற்றும் சிலராகிவிடுகிறாய்
***********************************************
உன் நம்பிக்கையைவிடப் 
பெரிய சிலுவையில் 
யார் அறைந்துவிடப்போகிறார்கள்
*******************************************
ஒரு அழிரப்பர் 
எல்லாவற்றுக்கும் கிடைத்தால்
எவ்வளவோ தெளிவாயிருக்கும்
***********************************************
தெளிவாகவோ உக்கிரமாகவோ 
இருக்கவேண்டியிருக்கிறது...
ஆகப்பெரிய சந்தர்ப்பங்களைப் 
புறந்தள்ள வேண்டியிருக்கிறது..
ஆகமோசமான நிமிடங்களைப் பொறுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது
பார்க்கவும் பாராததுபோல் இருக்கவும்
கேளாததுபோல் இருக்கவும் கேட்கவும்
மறந்து தொலையவும்
சுமந்து திரியவும்
கல்மிஷம்தான்
ஒத்துக்கொள்ளவும் பசப்பவும்கூட
சீ
நடுங்காதிரு

முகநூல் துளிகள் -3




பசி ருசியை
ருசி பசியை
பசி பசியை
ருசி ருசியை
எதையாவது எதுவாவது
வென்றுதான் ஆகவேண்டுமா சனியன்
*******************************************************
வேர் வைத்தியமாகும் 
வேருக்கு ?
*****************************************
எல்லாவற்றையும் எப்போதோ 
சொல்லிவிட 
வாய்க்கிறது உனக்கு 
எப்போதும் இல்லை எனக்கு
*********************************************
கொஞ்சம் உப்பு போடு 
பரிச்சயமான பொய்
எப்போதும் சகிக்காது
******************************************
99.9 சதவீத வாய்ப்புகளில் 
நம் சுத்தம்
நம் வாழ்க்கை 
நம் சிறுமை 
0.1எவ்வவ்வ்வளவு பெரிதாயிருக்கிறது

முகநூல் துளிகள் 2

ஆகப்பெரும் சித்ரவதை
அதை
சொல்லாதிருக்கக் கடவது
அதனினும் பெரிது

*********************************************

பொய்மையின் துளிரும்
அதே
செம்மையோடுதான் அசைகிறது
வேண்டுமென்றால் நினைத்துக்கொள்
நாணம் என
********************************************

நிலாவையும்
இடுங்கிய கண்ணோடுதான் பார்க்கிறாய்
பாவம் வெளிச்சத்துக்கு ஒடுங்கியபிழைப்பு

*************************************************

உரசியபடியே 
வீழ்கிறது சருகு 
தளிர் தடவி ஆடுகிறது காற்று
**********************************************

பேசாதிரு
பாற்பற்களைப்போல்
ஆசையாய்ப் புதைக்கமுடியவில்லை
விழும்சொற்களை

முகநூல் துளிகள்

கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டுபோல்
கிடக்கிறது வாழ்க்கை
அடுக்கிவிடலாம் எனநம்பித்தான்
உட்கார்ந்திருக்கிறோம்
கள்ளத்தனம் கடவுளும் பண்ணுவானோ

********************************************
தோற்றுத்தான் போகிறேன்
இத்தனைமுயற்சிக்குப்பின்
நான்சிந்தும் புன்னகையை
பிரயத்தனமும் பிரக்ஞையும்இன்றி
அன்றாடம் சிந்தி உதிரும் காட்டுப்பூவிடம்
*******************************

நீருக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த மீன்
சிரித்துக்கொண்டது
தூண்டில்காரன்
நிலவைத் தின்றுகொண்டிருந்தான்
**************************************

வயது எண்
வார்த்தை சொல்
பிரியம் பித்து
வாதை
உன்போல் பொருள் கொள்வது
**************************************

புரிந்துகொள்ள வேண்டியவற்றின் பட்டியல்
நீள்கிறது எனக்கு
கிழித்தெறிந்த அவன் புன்னகை
உட்பட


திங்கள், நவம்பர் 16, 2015

பொறுப்புத்துறப்பு


நிற்காதா மழைஎன்ற கேள்விக்குப்பின்
வேறொன்றும் இல்லை
எங்கள் குடியிருப்புகளின் உள்ளேயும்நீர்
என்பதற்குப்பின் ஏரிகளை,குளங்களைத் தூர்த்த
யாரையும் குறிக்கவில்லை
நான்குநாட்களாக உணவுஇல்லை
என்பதற்கு மழையை அனுபவிக்கும்
அடுப்புப் பற்றவைக்காத எங்கள் சோம்பலே காரணம்
சாலைகள் அரிக்கப்பட்டுவிட்டது
என்ற விஷயம் விழுந்து மூழ்கி
உங்கள் வருமானத்துக்காகவே
கண்டுபிடித்தோம்
தண்ணீர்பாம்புகளையும்
நிறைந்த ஆறுகளையும்
எங்கள் பிள்ளைகள் பார்க்க
இதுபோல் வாய்ப்பு அரிது
அதனால்தான் உயிரையும்கொடுத்துவிடுகிறார்கள்
பிழைத்தவர்கள் நீச்சல் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்
ஒருவேளைமழைபெய்து
ஒருவேளைவெள்ளம்வந்தால்
வீடுமூழ்குமே எனயோசியாமல்
சாக்கடைகளின் கரைகளில்
கட்டிக்கொண்டது எங்கள் பிழைதான்
கரைதாண்டிக்கட்டிய எஜமானர்களும்
மிதக்கிறார்கள்
நாளை படகுபிடித்து
நாங்கள் அவர்கள் வீடுகளுக்கும்
அவர்கள் தங்கள் வேலைத்தலங்களுக்கும்
செல்ல
மழைத்தண்ணீர் சூழ்ந்த ரோஸ்வுட்
கட்டில்களின்மேல் அமர்ந்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
குளிர்தாங்காத கிழம்கட்டைகளை
நாங்கள் கணப்புகளின் பக்கம்
அமர்த்தியிருக்கவேண்டும்
ஆனால் அந்தஓரத்துச்சுவரும் கூரையும்
தகர்ந்ததால் அது தடைப்பட்டது
பரவாயில்லை
நனைந்த காணாமற்போன
புத்தகங்களைத் தேடும் சிரமம்தராமல்
எம் பிள்ளைகள்
வெள்ளம்கொண்டுசேர்த்த
குப்பை பொறுக்கிப் பிழைத்துக்கொள்வார்கள்
மதியஉணவுக்கென
நீங்கள் ஒதுக்கும்தொகை குறைத்துவிடலாம்
இலவசமாய்க்கொடுக்க
அடுத்தபட்டியல் தயார்தானே

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...