திங்கள், நவம்பர் 01, 2021

எல்லாம் எமக்குத் தெரியும்

 ஒன்றுவிட்ட சித்தப்பா

பெரியப்பாக்களைக் கண்ட உலகில்
இனி
புதிய உறவு
ஒன்றுவிட்ட சக பயணி என்று அமையலாம்
கொரோனா
சிதம்பரம் மாமாவாட்டம்
ஒவ்வொரு வார்த்தைக்கும் தாவித்தாவி
முதுகு தட்டாது போல.
ஒன்று விடுவதால்
உங்களை விடுவேனா
என்றொரு சிரிப்பு
அரங்குகளின் திரை விலகுமுன்
டால்பி டிஜிட்டலில் கேட்கலாம்
எட்டுமணிக்குமேல்
கோயிலுக்கும்
பதினொரு மணிக்குமேல்
கடைத்தெருவுக்கும்
வரவிருக்கிறதாமே
கொரோனா பல்லக்கு
முகத்திரையோடுதான்
ஆராதிக்க சென்றேன்
அபிஷேகப் பாலருந்த
அரை தொன்னை
பொங்கலுண்ண
இறக்கிவிட்டு இறக்கிவிட்டு
கிளம்பும்போதுதான்
தோன்றியது
வேண்டுதலை வைத்தபோது
இறக்கிவிட்டு முகம் காட்டவில்லையேயென
குழம்பிவிட மாட்டாரா சுவாமி

ஏப்ரலில்

 எண்ணிக்கைகளின்

முரணைக்கண்டு
அஞ்சுவதற்கு
யோசித்துக் கொண்டிருக்கிறது ஊர்
குனிந்து நிமிர்ந்தால்
முதுகு வலிக்கலாம்
என்பதால்
வீடு பெருக்குவதைத் தவிர்த்து
என்ன செய்யலாம் என்கிறாள் தோழி
எந்த கவசத்தால் கிருமியைத் தடுக்க முடியும்
என்ற விவாதத்தலைப்புகளை
ஊடகங்கள் பரிசீலிக்கின்றன
கடையடைப்புக்காக
வாங்குவதா
தன்னை அடைத்துக்கொள்வதற்காக
வாங்குவதா என்ற
யோசனைகளோடு
குடும்பத் தலைவர்களும் தலைவியரும்
எதையெதையோ
வாங்குகிறார்கள்
தேர்வு உண்டா இல்லையா
தள்ளி வைக்க வேண்டுமா
பதில்களை உடனே சொல்ல வேண்டாம்
தீர்ப்பு வரட்டும் என்று கண்ணயர்கிறார்கள் அமைச்சர்கள்
புதிய இயல்புக்குப் பழகிவிட்டீர்களோ
மிகப் புதிய இயல்பைக் காட்டவா
கொக்கரிக்கிறது கொரோனா

இரண்டாம் ஆட்டம்

 வெளிர்நீலக்கவசங்களோடு

கொஞ்சம் கொஞ்சமாக
அன்றாடத்தின் வண்ணங்களை
அடையாளம் காண
முற்படுகையில்
நுண்மியின் பொறாமைக்கு
மீண்டும் சிறகு விரிகிறது
எண்ணிக்கைகள்
மீண்டும்
மர்மதேசத்திலிருந்து
ஊர்வலமாக நகர்கின்றன
கண்டதையும் வாங்கி சேமிக்க
கையிருப்பு இடிக்கிறது
மீண்டும் அலைபேசி அழைப்புகளில்
பொழச்சிக்கிடந்தா பாப்போம்
என்ற அங்கலாய்ப்பு வசனங்கள்

****************************************************
உங்கள் சிரமம் தீர
இந்த விரதம் இருங்கள்
உங்கள் துயர் மாற
இந்த மோதிரம் போடுங்கள்
உங்கள் நேரம் சரியாக
இந்த நிறம் அணியுங்கள்
உங்கள் சிக்கல் குறைய
இந்த பாடல் பாடுங்கள்
உங்கள் பிரச்சினை விலக
இந்த....
இருங்க
இதற்காக இதைச் செய் என்று
என்னிடம் சொல்லுவதுபோல
இதற்காகதான் இதைச் செய்கிறேன் என்று
அந்த சிரமம்,சிக்கல் ,கவலை,
பிரச்சினைக்கெல்லாம் ஒருமுறையாவது
சொல்லுங்களேன்
ஐஜிக்கும்
என்னைத் தெரியட்டுமே

கடன்வாங்கிக் கூட்டல்

 உமட்டுது

உமட்டுது
இதுதான் அவள் அதிகம் பயன்படுத்திய
சொல்லாயிருக்கும்
இந்த பத்துமாத ஆட்டத்தில்
ஒரே சொல்லை திரும்பத்திரும்பச்
சொல்லியமைக்காக
விலக்கி விடுவீர்களா என்ன
பை ரன்னராகவும் முடியாமல்
வேடிக்கை பார்க்கிறவரே
ஒரு முதுகு தடவலோ
வாந்தி சுத்திகரிக்க
ஒரு குவளை நீரூற்றலோ செய்கிறவனிடம்
கொஞ்சம் கரிசனம்
கடன் வாங்க முயன்றாலென்ன
அப்புறம் ஒரு விஷயம்
இது கடன் வாங்கிக் கழித்தல் அல்ல
கடன்வாங்கிக் கூட்டல்

************************************************
தூக்கிச்செருகிய குதிரைவால் கொண்டையுடன்
மேசையடியில் உட்கார்ந்திருக்கும் சிறுமி
அச்சு அசல்
மகள் போலவே முறைக்கிறாள்
அவள் அண்ணனோ
மகன் போலவே அவளிடம் வம்பிழுக்கிறான்
புதிதாக வந்திருக்கும் விளம்பரம்
சில மாதங்களாவது
கடந்துபோன பிள்ளைகளின் பால்யத்தை
தினம் சில விள்ளல்களாகத் தரக்கூடும்.
அடுத்தடுத்த தடவைகளில்
அவள் கண்டுபிடித்து நினைவு கூரக்கூடும்
இதே வட்டக்கழுத்து சட்டை அவனிடம்
வேறு நிறத்தில் இருந்ததையும்
மகளின் சீருடை கட்டங்களுக்குப் பதிலாக
கோடுகள்
ஆனால் அதே நிறமென்பதையும்
இன்னும் சிலபல
ஒற்றுமை வேற்றுமைகளையும் கூட
******************************************

வேரைக் கிள்ளுதல்

 கண்ணாடி முன் நின்று கொண்டிருக்கிறான்

நேரங்கெட்ட நேரத்துல என்ன அழகு பாத்தாவுது
வேலை ஓட்டத்தில்
ஒரு கேள்வியை வீசுகிறாள் வீட்டரசி
கேலியா எரிச்சலா ஆய்வுக்குள் போகாது நிற்கிறான்
கண்ணாடிக்குள் கடைத்தெரு
திடுமெனப் பார்த்த
ஊர்க்காரன்
கொப்புளித்து எழும்பிய நினைவுகளோடு
கைகுலுக்கத் தொடங்கி
எண் பகிர்ந்து
தோள்தழுவி நகர்ந்த பின்னா
முன்னா
எப்போதோ ஓடியது
எந்த தெருக்காரன் என்ற ஒருஇழை...
அழித்தேன்
அழித்தேன் என்றதை
அழித்தேனா இல்லையா
அந்த கணம் தன்முகம் எப்படி இருந்திருக்கும்
கண்ணாடிக்கு அவ்வளவு திறமை போதவில்லை

நிலைத்த சித்திரம்

 இங்கே ஒரு கடையில் தயிர்வடை பிரமாதமா இருக்குமே

நீளும் பாதையில்
நினைவின் சுவையரும்பு விழிக்கிறது...
ஜாங்கிரி சூடா போட்டுத்தந்தாரே அந்த கடையா
சக சுவையரும்பு சப்புக்கொட்டியது..
ஊரே மாறிக்கிடக்கு
இருக்கோ என்னவோ...
இருந்தது

கண்ணாடிப்பெட்டிக்குப் பின்னால்
வடையும்
பக்கவாட்டில்
திருநீறு குங்குமத்தோடு வெங்கடாசலபதியும்
நுனிமழுங்கிய பொத்தல் விழுந்த மர மேசையுமாக
வந்து சென்ற நாளின் சித்திரத்திலிருந்து
உயிர்பெற்றவன் போல
ஒருவன் வருகிறான்
கொழுந்துமாறா
வாழை இலைத்துண்டுகளோடு

*****************************************************
யாரோ யாருக்கோ
இரங்கல் எழுதியிருக்கிறார்கள்
யாரென்றே தெரியாத அவர் என்னவாக இருந்தார்
பார்க்க
அவர் பக்கம் போகிறேன்
தன் பக்கத்தைப் பூட்டி வைத்திருக்கிறார் அவர்
கடமையே கண்ணாக அடுத்த பிறந்தநாளிலும்
யாராவது வாழ்த்து சொல்லக்கூடும்
பூட்டிய வீட்டுக்கு வெளியே
வளர்ப்புப்பூனை போல்
அண்ணாந்து பார்த்தபடி அதுவும் நிற்கக்கூடும்
**********************************************************


சனி, அக்டோபர் 30, 2021

சொத்து பத்திரம்

 அலைபேசி ஒலித்ததே

எடுத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறவர்கள்

இங்கு நிறுத்துவார்கள்
நாலு கட்டிடம் தள்ளியிருக்கும்
நிறுவனத்துக்கு வருகிறவர்கள்
இங்கேயே இறங்கிக்கொள்வார்கள்
எவர்சில்வன் கேனும்
மூன்று நான்கு சர்க்கரையில்லா தேநீருக்கான
பிளாஸ்குகளுமாக
தனது படுபழைய சைக்கிளை நிறுத்திவிட்டு முகம் துடைப்பவரின் நேரம்
பதினொன்று
எப்படி வளர்ந்ததென்று
தெரியாமல்
வெட்டவும் மனம் வராமல்
மனைக்காரர்
அவ்வப்போது மௌனமாய் நின்று போவார்
யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளாத
அந்த வேப்பமரத்துக்கு
கரிந்து கொட்டும்
தன் இலைகளைப்பற்றி
யாரிடமாவது இரண்டு சொட்டுக் கண்ணீர்
விட மாட்டோமா என்ற தவிப்புதான்
காற்றே இல்லாதபோதும்
அப்படியும் இப்படியுமா ஆடிக்கொண்டிருக்கிறது
யாரோ உடுக்கு அடிப்பது போல

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...