திங்கள், அக்டோபர் 15, 2018

பிரிவுழலுதல்


இவ்வளவு காலமிலாது 
மகுடேசுவரனிடம் 
யாரோ இப்போது ஏன் கேட்கவேண்டும்
இவ்வளவு காலமிலாது
மனுஷ்யபுத்திரன் இப்போது
ஏன் இதை எழுதவேண்டும்
நழுவிச்செல்லும் காலக்கோட்டில் 
இவை ஏன் தவறாது என் மனதுக்கு வரவேண்டும்
பிரிவுழல்தல் என்பது
என்றாவது சந்தித்துவிடக்கூடிய
உறவின் தற்காலிகப் பிரிவு
தற்காலிகச் சோகம் என்று அறிவு 
ஏன் கோனார்உரை புரட்டவேண்டும்
நிகழ்தகவில் தப்பாத 
இவற்றையெல்லாம் 
மறதியின் இழுப்பறையில் பூட்டுவதா
புறக்கணிப்பின் புகைபோக்கிவழி வெளியேற்றுவதா
சுருணைத்துணியால் 
வெற்று மேசையைத் துடைக்கிறேன்
கவனமின்றி அதனாலேயே கண்ணீரையும்
பிறகு பார்த்தால் 
அது உன் பழைய வேட்டித்துணி

எதிர்பார்ப்புகளின் கண்ணாமூச்சி

கண்டிப்பாக மீசை வைத்திருப்பார்
 என நினைத்திருந்தவர் வந்து 
பெயர் சொன்னபோது 
இதற்குமேல் வேண்டாமெனத் தோன்றுகிறது..
பேசுகிறார்.
எத்தனை கற்பிதங்களை நொறுக்குவது?
யாராவது வந்து உட்காருங்கள்
நான் தேநீர் தயாரிக்கப்போகிறேன்

அருவியின் நினைவு

அருவியின் நினைவில்
நனைந்துகொண்டவள்
உதறிக்கொண்டாள்
உலர் தலையை
****************************************
முன்னறையின் இருக்கைகளில் 
ஜாக்கிரதையாகப் போட்டுவைத்த 
அலங்கார விரிப்பு 
நீங்கள் எழுந்தபின் 
தானே சோம்பல்முறித்து நீவிக்கொள்ளும்

*******************************************************
கால்வைக்கவும் அச்சமாயிருக்கிறது 
மழைத்தூய்மையில் முறுவலிக்கும் 
உன்முற்றத்தில்
*****************************************************
உங்களால் நம்பமுடியாது
உரு ஒன்றில் உள்ளம் 
திருவாகவும் மறுவாகவும் இருப்பதையும்
மருகி மருகி
வேறு உருவானதையும்.
ஒன்றையே நினைத்திருப்பீர்
எதிர்முகங்குறித்த மட்டில்*
*******************************************************
வருகிறாயா வருகிறாயா என்று  
எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் 
போதெல்லாம் நீர்வார்த்த செடி இது
நல்ல மணம்


மழையை நேசித்தல்

ஒரு குட்டிப்புயலை மடித்து 
முகம் துடைக்க ஏதுவாக வைத்தாயிற்று
உன் சாதனை என்ன 
என்று கேட்கும் வரலாற்றில் பொறிக்க
விசிறியடிக்கும் தருணமெல்லாம் 
திரைமறைவுக்காட்சி

*****************************************************************
ஒரு சுகந்தம் பரவும்போதெல்லாம்
மூக்கடைப்பில்
அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள் விலகும்போது
வழக்கமான துர்க்கந்தம்
சிறு தூறல் விழுங்கால்
தவித்தபடி துணிவாரும் கடமை
முதல் நந்தியாவட்டையை அணுகும்போது
காலில் ஏறிவிடும் கட்டெறும்பு
******************************************************************
இதை மட்டுமே என்று முடிவு செய்யாதவரை 
எதையும் நேசிக்கலாம்
வருவது போலிருந்து ஏமாற்றும் மழை உட்பட
********************************************************************
பாதை நீண்டிருக்கிறது
அங்கோர் சிறுமலர்
அதுதான் முடிவெனும் புள்ளியில் 
தலையசைக்கிறது
வண்ணச்சீறடிக்கு வலி தெரியவில்லை



துயரத்தின் படம்

ஒரு அழுகை எப்படியிருக்க வேண்டுமென 
உங்கள் மனதில் ஒரு சித்திரம் இருக்கிறது
கற்பனையாகவோ
கற்பிதமாகவோ
ஒரு துளி கண்ணீர் 
அக்கோட்டிற்கு 
சாய்கோணத்தில் இறங்குவதை 
உங்களால் சகிக்க இயலாது
என்றாலும்
துயரத்தின் படம் வரைந்து பாகம் குறித்த
 உங்கள் தாளை
எப்படித்தான் ஒவ்வொருவரிடமும் நீட்டுவது


கிளி அமர்ந்த கிளையின் துளிர்

பொய்தான் எனத்தெரிந்தும் 
பாவங்களோடு கவனித்தலும் 
பொய்யே என உணர்ந்தும் 
பாவமாய்ச் சொல்லி முடிப்பதுமாக
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து
மெய்யாகத் தளர்கிறது வாழ்க்கை

***********************************************
அவ்வளவு தளர்ந்த முதுகைத் தாங்குகிறது
யாரோ விட்டுப்போன கோல்
பெருமூச்சு விட்டுக்கொண்டன கால்கள்

**************************************************************

தெப்பக்குளத்தில் ஆடும் நிழல் 
கோபுரத்துடையதாகவும் 
பறந்தோடும் புறாவுடையதாகவும் 
இரண்டையும் சேர்த்த வானத்தினதாகவும்
உன் கண்களோ
படியேறியிறங்கும் பாதங்களின்மேல்
*************************************************************

கிளி அமர்ந்த கிளையிலிருந்து 
பறக்கிற துளிர் 
உதிர்வது 
மரத்திலிருந்துதானா

**********************************************************************
எப்படியும் இயலாது
அதுபோலொரு வெள்ளைப்பூவை மலர்விப்பது
மல்லிகைக்கொடிக்கு மட்டுமல்ல
 தெருவோரத்தும்பைக்கும்
கைகூப்பி விட்டு வருகிறேன்


சவுக்காரவாழ்வு

கரையிடிந்த குளங்களின் 
துவைகல்லில் படிந்த சவுக்கார வாழ்வு
நீர் பெருகும் நாள்வரை

***********************************************************

திடீரென வந்த மழை
திடீரென வந்துவிட்டதாகவே நம்புவோம்
இல்லையெனில்
பொட்டலத்துக்குள்ளிருந்து
வெளியே குதித்துவிடும்
மனசைக் கட்டிவைக்க 

கையாலாகா துக்கம் வேறு சேர்ந்துகொள்ளும்

******************************************************************

எப்படியும் கேட்டே தீருவதென 
செவிதீட்டிக் காத்திருக்கும்போதுதான் 
இசைக்கு மேலொலிக்கிறது 
இயந்திர இரைச்சல்

*************************************************************

மழைப்பாதையில் பாதமுரசாது 
பாதை வழுக்காது 
துணி சுருட்டி
நடக்கும் யத்தனத்தில் மறந்தே போகிறது 

பின்வரும் கால்களுக்காக 
கல்ஊன்ற நினைத்தது
இப்போது மழையில்லை என்பது
வருத்தமோ சமாதானமோ



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...