புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 எதுவும் தெரியவில்லை எங்களுக்கு

யார் யாரைக் கொல்கிறார்கள்
யாருக்கு மன அழுத்தமாகவுள்ளது
யார் துன்புறுத்துகிறார்கள்
யார்நிவாரணம் சொல்கிறார்கள்
யாருக்குகோபம் வருகிறது
யார் பசியில் சாகிறார்கள்
எதுவுமில்லை இந்த உலகில்


தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக்கொண்டு 

கட்டமைக்கப்பட்ட உலகம் இது

காய்ச்சல்
தலைவலி
இருமல்
சளி
பாரசிடமால்
இவற்றைத்தான் சொல்கிறோம்
முனகுகிறோம்
முறையிடுகிறோம்


ஆறுதல் தருகிறார்கள்
நிறைய தண்ணீர்குடி 

எல்லாவற்றையும் விழுங்கு


இரவு பகல் காலை மாலை 

எதுவுமில்லா இவ்வுலகின் 

இரண்டே பொழுது
மருத்துவர் வரும்பொழுது
செவிலியர் வரும்பொழுது
அவ்வளவுதான்

கொரோனா கவிதைகள்

 முகக்கவசம்

நூறு ரூபாய்க்கு அஞ்ச வைக்கிறது

பதினைந்து தையல் போட்டு 

பத்து ரூபாய்த் தோரணங்களாக
சாலையெங்கும் தொங்குகிறது

விலையேற விலையேற
காப்பதில் அந்தஸ்து பேதத்தை 

அழகாய்ப்பேணி 

தனியுடைமைக் கோட்டை மேல் பறக்கிறது
கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடியசைந்ததா

காதற்ற ஊசியும் வாராக் 

கடைவழிப்பயணம் 

தள்ளிப்போடுவதற்கான முயற்சியில்

 நாடாக்கள் காதுகளை 

அறுத்துக் கொண்டிருக்கின்றன.

கழுதை காதுகள் 

ராஜாக்களைக் காட்டிக்கொடுக்க
அவிழ்த்தெறிந்த கவசங்கள் 

கட்டமைக்கின்றன கவிழ்ந்த வானத்தை

துடைப்பங்களில் 

முடிக்கொத்தாக சிக்கி ஆடும் 

முகக்கவச நாடாக்களை
மகள் கூந்தலின் சிடுக்காக எடுத்து சுருட்டி எறிகிறாள்
கைக்காப்பற்ற ஒப்பந்த சேவையாளி

திரையா கவசமா 

எது சரியெனத்

 திணறிக் கொண்டிருக்கிறேன் நான்

கொரோனா கவிதைகள்

 அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

ஒலித்துக்கொண்டே இருக்கிறது
காய்ச்சலில் கண்திறக்காது கிடப்பவனின் அலைபேசி

காய்ச்சல் விட்ட களைப்பில் துயில முற்படும் 

பக்கத்துப் படுக்கைக்காரனின்
திடுக்கிடலுக்கு ஒவ்வொரு முறையும் காரணமாகிறது
அண்ணாத்த ஆடுறார்

எங்கு வைத்திருக்கிறானெனத் தெரியாது
தொட்டுத் துழாவவும் முடியாது 

எல்லாக்கண்களும் விழித்திருக்கின்றன
அவன் விழிக்க
ஐந்து நிமிடங்களுக்கொருமுறை
அண்ணாத்த ஆடுறார்.

இந்தப்பக்கம் ஒருத்தி 

கொஞ்சிப்பேசிட வேண்டாம் வைத்திருக்கிறாள்

சரியாக ஒவ்வொரு பத்தாவது நிமிடமும் ஒலிக்கிறது 

கொஞ்சிப்பேசிட வேண்டாம்
முகக்கவசத்துக்கும் மேலாகக்கை வைத்து மறைத்து 

சுவர்ப்பக்கம் திரும்பி பேசிவிட்டு
சுருண்டு கொள்கிறாள்

நள்ளிரவு வரை பொறுத்து
அதைக்கொஞ்சம் மாற்றேம்மா என்று 

மற்ற படுக்கையெல்லாம் மண்டியிட்டன
எனக்குத்தெரியாது
அவரைத்தான் கேக்கணும்


சுருண்டுகொண்டாள்

கொரோனா கவிதைகள்

வலியைப்

பரிகாசம் பண்ண இரண்டு வழிகள்

பொட்டு கண்ணீர் உதிரும் வரை சிரிப்பது


மிரள மிரள விழித்துக் கொண்டிருக்கும்போது
பூனைக்குட்டிபோல் சாக்கில் கட்டி
தூர
விட்டுவருவது

அதற்கு வழி தெரிந்து வரும்வரை
எண் ஒன்றைச் செய்யலாம்


கொரோனா கவிதைகள்

 ஒரு சிக்கலுக்கு

ஓராயிரம் தீர்ப்புகள்

காய்ச்சலா
உடனே ஓடு சோதனைக்கு

இரு இரு முன்பின் காய்ச்சல் வந்ததில்லையா
நாலுநாள் பாரசிடமால் போடு

க்கும் எல்லாம் மாத்திரையா
இஞ்சி,மஞ்சள்,மிளகு,பூண்டு,சீரகம்,துளசி எடு எடு

என்ன அலட்சியம்
எத்தனை நாளாய்ப் பரப்புகிறாய்
ஓடு சோதனைக்கு

சோதனை கொடுத்துவிட்டாயா ஒழுங்காய் வீடுசேர்

சோதனைதந்துவிட்டு வெளியிலா
மூச்
இங்கேயே கிட
திறந்துவிட்டால் போகலாம்

வாவாவா...
தாசில்தார், போலீஸ் கார் எல்லாம் வாங்க 

கூண்டைப்போட்டு அமுக்குங்க

தெருவை மூடுனியா
சுத்திமுத்தி வளைச்சு தட்டி கட்டு
கொரோனா அந்த வீட்டை விட்டு
எகிறி குதிச்சு ஓடிராம 

இருபத்துநாலு மணிநேரத்துக்கும் ஆள் போடு

என்னசார் பதினாலுநாளா
அது அப்போ
அப்ப இப்ப
பத்துநாள் போதும்

அவனுக்கு ஒண்ணுமில்ல வீட்டுக்குத்துரத்து
ஏழுநாள்தானே ஆகுது
அதான் ஒண்ணுமில்லன்னு சொல்றேன்ல
சார் பதினாலுன்னீங்க
பத்துன்னீங்க
இப்ப..
யோவ் வர்ரவனுக்கு இடம் வேணும்யா
எனக்கு சோறு வேணும் சார்

கொரோனா கவிதைகள்

 அப்படியாம் இப்படியாம் என்றபோது 

வரக்கூடாது என்று வேண்டினேன்

தொண்டை கமறியபோது 

இருக்கக் கூடாது என்று வேண்டினேன்

சோதனைக்குக் கொடுத்துவிட்டு 

எண்ணிக்கையில் 

சேர்ந்துவிடக்கூடாது என வேண்டினேன்


மருத்துவமனையில் காத்திருக்கும்போது
நல்ல கழிப்பறை இருக்கவேண்டுமே 

என வேண்டினேன்


வேண்டாமலே கிடைத்திருக்கிறது 

சன்னலோரப் படுக்கையும்
ஒரு துண்டு வானமும்
பிழைத்துவிடுவேன்

கொரோனா கவிதைகள்

 PPE தேவதைகள்

தேவதைகளுக்கு எப்போதும் சிறகுகள் இருப்பதில்லை

இதோ ஒரு தேவதை
பாதுகாப்பு கவச உடைக்குள் பொதிந்துகொண்டு
ஆக்சிஜன் கொடுத்துக்கொண்டிருக்கிறது

இன்னொன்று பிளாஸ்டிக் உறை நெடுக உள்ளே
ஒழுகும் வியர்வையைத் துடைக்கவும் வழியின்றி சர்க்கரை அளவு பார்த்துக்கொண்டிருக்கிறது

பூக்களைப் பெற்று
என்ன செய்வது எனத் தெரியாத தேவதைகள்
புன்னகைக்கிறதா என்றும் தெரியவில்லை

மறக்காமல் இந்த தேவதைக் கதைகளையும் குழந்தைகளுக்குச்
சொல்லுங்கள்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...