ஞாயிறு, டிசம்பர் 05, 2021

விரிசடை ஜீவன்

 பார்வைக்கு உதவும்

பார்வையாகவும் காட்டும் கண்ணாடியிலேயே கடைக்காரன் இணைத்துவிடுகிறான்
குளிர்ச்சியை
கந்தக நாக்குக்கு எவன் உதவுவானோ

*********************************************************
பளீர் நிறத்தில்
வளைந்து நெளிந்ந இதழ்களோடு
மலர்ந்திருந்த
பூக்களடர்ந்த காடு என்று
நான் நினைத்துக்கொண்டேன்
கொடியில் கிடந்த சேலையை
உனக்கு
இப்போது அது பழந்துணி ***************************************
மிக்கப்பிடித்த பாடலின் முதல்வரி சட்டெனத் தொண்டைக்குள் உருண்டுகொண்டு
குரலேறாது
அடம் பிடிப்பது போலத்தான் இருக்கிறது
கண்ணில் மின்னும் அன்பை
சர்ரென உறிஞ்சிக்கொள்ளும் உன் பாவனை
******************************************************
தலைக்குமேல்
விரிசடையாய் நிற்கும் கிளைகளில்
எங்கோ
சாய்ந்திருக்கிறது
நீள் அரவம்
அலைபொங்காத நீர்வெளி
கீழிருந்து
ஆழங்காட்டாது அழைக்கிறது
ஒரு பெயரை ஒற்றை விழுதாகப் பிடித்து
தொங்குகிறது ஜீவன்
இருந்திருக்கிறது
அப்பெயரும்
அரவமாக
ஆழ்வெளியாக
இப்போது
அது விழுது

பாப்பு பாப்புவாக இல்லாது ஆனாள்

 புதுசா கொஞ்சம்

சண்டை வளர்க்க
புதுசா புடவை வாங்க
புதுசா கொஞ்சம் பெருமை பேச
புதுசா கடன் வாங்க
ஏதாச்சும் ஒண்ணு வேணும்
இப்போ இது
பாப்புதான்
புதுசா என்ன தொல்லை இதுங்குறா
அம்மா ஆயிரம் ஏற்பாடுகளுக்கு நடுவே
நாப்கினை
நீட்டியபடி சொல்கிறாள்
இப்படிதான்
நான் குழந்தையா இருக்கும்போது....
சற்று மௌனமாகித் திருத்திக் கொண்டாள்
சாரி பாப்பு
உன்னை இனி குழந்தைன்னு சொல்ல விட மாட்டாங்க
பத்துவயசுதான் உனக்கு
ஆனாலும்...

முட்டக்கண்ணி கதை

 அவளிடமும் இருந்தது

ஒரு மஞ்சள்சேலை

முட்டகண்ணி பானுப்பிரியா போல
ஒற்றையில் வழியவிட்டு கூந்தலை உலர்த்தியபடி
கொல்லை தென்னை மரத்தைக் கட்டிச்சுழல ஆசையும் இருந்தது
ஈற்று நின்ற கிழப்பசுவை அந்த தென்னையிலும்
அவளை
அடுத்த ஊரிலும்
கட்டிவைத்தார்கள்
அந்த மஞ்சள் நைலக்ஸ் சுருங்கி மேலேறியும் மறக்காமல் முந்தானையை இழுத்துச் செருகியபடி
அங்கு ஒரு தென்னம்பிள்ளைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்

கொரோனா அதிகாரம்

 எண்களால் பேசும்

காலம்
ஒன்று இரண்டு மூன்று என்கின்றன குடும்பங்கள்
பத்து இருபது என்கிறது நட்பும் உறவும்

மரணக்குறிப்புகள்
நூறுகளின் பின்னால்
ஆயிரங்களின் ஒற்றை இலக்கத்தைத்
தள்ளிவிட்டு ஓடுகிறது நுண்மி
லட்சங்களின் போராட்டத்தையெண்ணிப்
பரிதவிப்பில்
கோடிகளைக் கொட்டியவர்கள்
இன்றைய எண்களை
நாளைய எண்கள்
ஆழ்ந்த மௌனத்துடன் கவனித்துக்கொண்டிருக்கின்றன *****************************************************
உப்பு சவுக்காரத்தை
ஒரு இழுப்பு இடுப்புத் துணிக்கும்
ஒரு இழுப்பு
கை காலுக்கும் போட்டுக் கரையேறிய பின்
ஒற்றை சிவப்புக்கட்டியோ
ஒற்றை சந்தனக்கட்டியோ
ஒற்றை
கல்லுப்பச்சையோதான்
ஒரே வீடு ஒரே சோப்பு
என்று வாழ்ந்திருந்தோம்
மாமன்சீர் மச்சான் சீரில்
ஒரு சில்வர் சோப்பு டப்பா வைத்து
பெருமையை நிலைநாட்டியபின்
ஆளுக்கு ஒரு திசை
ஆளுக்கு ஒரு சோப்பு
பக்கெட்டும் சோப்புமாய் இருந்த வீடுகளுக்கு
பாக்கெட்டிலும்
பாட்டிலிலும் சோப்பு வருகிறது
போட்டு
மஞ்சள் குங்குமம்
சீனி சர்க்கரை
எனத்தொடங்கிய பட்டியல் காலமும்
போய்
மறக்காமல்
எழுது
லிக்விட்சோப்
சானிடைசர்

உதறிப்போட்டவை

 நினைவுகளுக்கும்

நிகழ்வுகளுக்கும்
இடையேதான் தொங்குகிறதா
மாமர ஊஞ்சல்
ஒரு நேரம்
உந்தித்தள்ள யாராவது நிற்கிறார்களா என்று ஏக்கம்
ஒரு நேரம்
கயிற்றை அண்ணாந்து பார்த்தபடி ஒரு தயக்கம்
காற்று ஏளனமாகப் பார்க்கிறதா என்ன
*****************************************************
நீ இல்லை
ஆனாலென்ன உன்னைப்பற்றிச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நீ
எப்படி இல்லாமற் போவாய்
பார்க்கிறேன் *********************************************
உடம்பு உதறி உதறிப்போட்ட
தருணங்களையெல்லாம்
சர்வசாதாரணமாகக்
கதை மாதிரி சொல்வது
எதில் சேர்த்தி
************************************************

நீலக்கோடு நீங்கிய புலனம்

 அழகருக்கென்ன

செயற்கை ஆறு வெட்டவாவது ஆளிருக்கிறது
சித்திரை நிலா
அண்ணாந்து பார்க்க கண்ணில்லாத கொடுமையில் ஒளிந்து கொள்ள இல்லாத மேகத்தைத் தேடுகிறது
காய்ச்சல் சளி இருமல் மூச்சு
ஆக்சிஜன்
ஊசி கஷாயம் என்றே பேசுகிறோமே
ஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா
என்றாள் அவள்
ஒரு மனுஷியாட்டம் பேசறே
சொல்லிவிட்டு
அடுத்தவீட்டு மாடிக்குப் போகிறது நிலா
******************************************************
ரெண்டு கீத்து மாங்காய்
உப்பும் காரமுமாக
அது அது அவ்வளவுதான்
அன்புன்னா
கூடத்தான் ***********************************************
அழுத்தம் அழுத்தம்
அம்முகுளி என்றிருப்பாள் ஆத்தா
உன்னைப் பார்த்திருந்தால்
நீ பார்த்து விட்டாய்
என்பதை
நான் பார்த்துக்கொள்ள
உதவிய நீலத்தைக்கூடவா
அழித்துவிட வேண்டும்
நீலத்தை அழித்துவிட்டால்
வானத்திலாவது வெள்ளை இருக்கும்
வாட்சப்பில் என்ன இருக்கிறது

அலைபாயுதே

    நண்பன் எழுதுகிறான்

பிரார்த்தனை செய்ய முடியாத நாளில்
இறந்துபோன ஒருவரின் கதையை
மரணத்தைக் குறித்தான
விசாரணைகளும் தத்துவங்களும்
உலகெங்கும்
நூற்றாண்டுகளின் வாசத்தோடு குந்தியிருக்கின்றன.
கண்ணியமான இறப்பை இறைஞ்சிய
கோடானுகோடி கைகூப்பல்கள்
அந்தரத்தில் அடுக்கப்பட்டிருக்கின்றன.
இம்மை மறுமை விவாதங்களின்
பேரொலியில்
கடல்கள் காதைப் பொத்திக் கொண்டதுண்டு
மரணத்துக்கு
தன்னைச்சுற்றி
என்ன நிகழ்கிறதென்று புரியாத காலத்தில்
மாலைகள் தங்களைத் தாங்களே பிய்த்து இறைக்கின்றன ***************************************************


எதற்கும் இருக்கட்டுமென்று
ஒரு கட்டு மெழுகுவத்தியை
செப்டம்பரிலேயே அவள்
வாங்கி விடுவதுண்டு
வருடத்துக்கு,நெல்புளி,மிளகாய்,உளுந்து பயறு
வற்றல் வடகம் எத்தனை திட்டமிடல்
அஞ்சலகமா
காப்பீடா
வங்கி இடுகையா என்று வட்டி விகிதம் பார்த்து திட்டமிடும் குருவி மூக்குகள்
ஒருநாளும் தெரிந்திருக்கவில்லை
யாரோ திட்டமிடாவிட்டாலும்
தட்டுப்பட்டு சாவோமென்று *****************************************************
தினம் கடக்கும் பாதையில்
ஐந்தாறு மயானங்கள் அல்லது
மயானப்பாதைகள் குறுக்கிடும்
மரியாதை சுமந்த துலுக்க சாமந்திகள் கோழிக்கொண்டைகள்
வாரம் பத்துநாளுக்கொருமுறை
சக்கரங்களில் ஒட்டிக்கொண்டு கிடக்கும்
மரண அறிவிப்பு தட்டிகள்
காரியம் முடியும்வரை
காய்ந்த மாலையோடு நிற்கும்
தினம்
ஏதோ ஒரு துண்டுப்பாதை
மலர் கனத்துக் கிடக்கத் தொடங்கியது
தட்டிகளைத் தெருமுனைகள்
சில நாட்களில் துரத்தத் தொடங்கின
தட்டிகளின் வாழ்வு
சில மணி நேரங்களாகிவிட்டது
உதிரிகளின் வழிகளை உதிரிப்பூக்கள் அடையாளமிட
தண்ணீர் தெளித்து தெளித்து
நடுநாரை சமாதானப்படுத்துகிறவன்
கை வீங்கிக்கிடக்கிறது
வாடகை நாற்காலிக்காரன்
இருபத்தைந்து
இருபத்தைந்தாக
இறக்கிக் கொண்டிருக்கிறான்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...