பார்வைக்கு உதவும்
பார்வையாகவும் காட்டும் கண்ணாடியிலேயே
கடைக்காரன் இணைத்துவிடுகிறான்
குளிர்ச்சியை
கந்தக நாக்குக்கு எவன் உதவுவானோ
*********************************************************
பளீர் நிறத்தில்
வளைந்து நெளிந்ந இதழ்களோடு
மலர்ந்திருந்த
பூக்களடர்ந்த காடு என்று
நான் நினைத்துக்கொண்டேன்
கொடியில் கிடந்த சேலையை
உனக்கு
இப்போது அது பழந்துணி
***************************************
மிக்கப்பிடித்த பாடலின் முதல்வரி
சட்டெனத் தொண்டைக்குள் உருண்டுகொண்டு
குரலேறாது
அடம் பிடிப்பது போலத்தான் இருக்கிறது
கண்ணில் மின்னும் அன்பை
சர்ரென உறிஞ்சிக்கொள்ளும் உன் பாவனை
******************************************************
தலைக்குமேல்
விரிசடையாய் நிற்கும் கிளைகளில்
எங்கோ
சாய்ந்திருக்கிறது
நீள் அரவம்
அலைபொங்காத நீர்வெளி
கீழிருந்து
ஆழங்காட்டாது அழைக்கிறது
ஒரு பெயரை ஒற்றை விழுதாகப் பிடித்து
தொங்குகிறது ஜீவன்
இருந்திருக்கிறது
அப்பெயரும்
அரவமாக
ஆழ்வெளியாக
இப்போது
அது விழுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக