ஞாயிறு, டிசம்பர் 05, 2021

அலைபாயுதே

    நண்பன் எழுதுகிறான்

பிரார்த்தனை செய்ய முடியாத நாளில்
இறந்துபோன ஒருவரின் கதையை
மரணத்தைக் குறித்தான
விசாரணைகளும் தத்துவங்களும்
உலகெங்கும்
நூற்றாண்டுகளின் வாசத்தோடு குந்தியிருக்கின்றன.
கண்ணியமான இறப்பை இறைஞ்சிய
கோடானுகோடி கைகூப்பல்கள்
அந்தரத்தில் அடுக்கப்பட்டிருக்கின்றன.
இம்மை மறுமை விவாதங்களின்
பேரொலியில்
கடல்கள் காதைப் பொத்திக் கொண்டதுண்டு
மரணத்துக்கு
தன்னைச்சுற்றி
என்ன நிகழ்கிறதென்று புரியாத காலத்தில்
மாலைகள் தங்களைத் தாங்களே பிய்த்து இறைக்கின்றன ***************************************************


எதற்கும் இருக்கட்டுமென்று
ஒரு கட்டு மெழுகுவத்தியை
செப்டம்பரிலேயே அவள்
வாங்கி விடுவதுண்டு
வருடத்துக்கு,நெல்புளி,மிளகாய்,உளுந்து பயறு
வற்றல் வடகம் எத்தனை திட்டமிடல்
அஞ்சலகமா
காப்பீடா
வங்கி இடுகையா என்று வட்டி விகிதம் பார்த்து திட்டமிடும் குருவி மூக்குகள்
ஒருநாளும் தெரிந்திருக்கவில்லை
யாரோ திட்டமிடாவிட்டாலும்
தட்டுப்பட்டு சாவோமென்று *****************************************************
தினம் கடக்கும் பாதையில்
ஐந்தாறு மயானங்கள் அல்லது
மயானப்பாதைகள் குறுக்கிடும்
மரியாதை சுமந்த துலுக்க சாமந்திகள் கோழிக்கொண்டைகள்
வாரம் பத்துநாளுக்கொருமுறை
சக்கரங்களில் ஒட்டிக்கொண்டு கிடக்கும்
மரண அறிவிப்பு தட்டிகள்
காரியம் முடியும்வரை
காய்ந்த மாலையோடு நிற்கும்
தினம்
ஏதோ ஒரு துண்டுப்பாதை
மலர் கனத்துக் கிடக்கத் தொடங்கியது
தட்டிகளைத் தெருமுனைகள்
சில நாட்களில் துரத்தத் தொடங்கின
தட்டிகளின் வாழ்வு
சில மணி நேரங்களாகிவிட்டது
உதிரிகளின் வழிகளை உதிரிப்பூக்கள் அடையாளமிட
தண்ணீர் தெளித்து தெளித்து
நடுநாரை சமாதானப்படுத்துகிறவன்
கை வீங்கிக்கிடக்கிறது
வாடகை நாற்காலிக்காரன்
இருபத்தைந்து
இருபத்தைந்தாக
இறக்கிக் கொண்டிருக்கிறான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...