சனி, அக்டோபர் 12, 2019

ஊறியநெல்

புழுங்கும் நெல்லின்
வாசமும் ஆவியும் வீச வீச
வியர்வை வழித்தெறிந்து
அன்னக்கூடைக்கு மாற்றுவாள் தங்கம்
ஓலைப்பாயில் ஆறும் அவிந்த நெல்லிலிருந்து
நாலுஅரிசியைத் தேற்றி மெல்லும் ருசியில்
உமியை எறிகிறான்
அரியணைத் திண்டிலிருந்து 
பூச்செண்டு எறியும் அரசபாவனை
சேர்ந்து தெறிக்கிறது
மிச்சமிருந்த முன்கைச்சேறு
சிரித்துக்கொள்கிறது
அவியல்காணக் காத்திருக்கும்
ஊறியநெல்


ஐந்திலிருந்து ஐந்துக்கு

முற்றிய வெற்றிலையின் காம்பைக்கூடக் 
கிள்ளி மென்றுகொள்வாள்
துளியும் வீணாக்காத
ஆத்தா
இந்த வாழ்க்கையும் அவளைப்போல
அட சனியன் 
அதேபோல சக்கையும் விழுங்குது
***************************************************
படிகள்
பார்த்து பார்த்து
அபிக்குட்டியை எச்சரிக்கிறாள் அம்மா
தாவுவதுதான் பிடிக்கிறது அவளுக்கு
ஒன்றிலிருந்து மூன்றுக்கு
மூன்றிலிருந்து ஐந்துக்கு
அச்சோ பாத்து பாத்து
அம்மா பாவம்
போனால் போகிறதென்று
ஐந்திலிருந்து ஐந்துக்கே 

ஒருமுறை ஏறிக்கொண்டாள்
****************************************************
நடந்து நடந்து அடையாத நிழலைத் 
தாவிஓடிப் பிடித்துவிடுகிறாயே
மனப்பூனையே
மீசைமுறுக்காது
சற்றே காத்திரு
எப்படியும் அடையத்தானே வேண்டும்
நிழலையோ உன்னையோ



வியாழன், அக்டோபர் 10, 2019

கைநிறைய அன்பு

"எப்படியும் உதிரத்தானே போகிறது"
உன் சுழற்றலில் 
உதிர்ந்து கிடக்கும் ரோஜா இதழ்களை 
அதிர்ச்சியுடன் நோக்குபவளுக்கு
 உன் பதில் இதுவாகத்தான் இருக்கும்
பிய்த்துத் தின்றதைப் 
பாராதவரைப் பிழைத்தாள்
********************************************************
ஒரு கைநிறைய அள்ளிய நீரைத் 
துளித்துளியாய்க் கசியவிட்டபடியே 
மணல்வீடு நோக்கிப்போகிறாள் சிறுமி
இப்படித்தான் 
அன்பை இறைத்துவிடவேண்டுமென 
உன்னிடம் கற்றாளோ
**************************************************
வலியும் வேதனையும்
ஒட்டத்துடைத்து உறங்கப்போ
எப்படியும் காலையில்
விழுந்திருக்கும்
ஒரு பல்லிமுட்டையோ
எலிப்புழுக்கையோ

***********************************************
கடகடவென வளர்ந்து
வானத்துக்கு ஒட்டடை தட்டுவதுபோல்

 நிற்கும் மரத்துக்கு 

நீரூற்றிய உரிமை
நிழலுக்கும் ஆகவில்லை

***************************************************

வார்த்தைகளின் வாடை

கொஞ்சமாக கஞ்சி
கொஞ்சமாக மோர்சாதம்
வெந்நீர்,தண்ணீர்
மாற்று உடை
பிளாஸ்க் நிறைய தேநீர்
வாசிக்கவென்று இதழ்கள்
நேற்று யாரோ வாங்கிவந்த ஆப்பிளில் ஒன்று
நறுக்கத்தோதாக கத்தி
எதற்கும் இருக்கட்டுமென சிறுதட்டு,

குட்டி டப்பியில் ஒரு துண்டு 
உப்பு நார்த்தை
அவசரகும்பிடு போட்டு வாங்கிய
அம்மன்கோயில் குங்குமம் 

மடித்த காலண்டர்தாள்
சகிதம் உள்நுழைந்தவளிடம் 

அவன் முறைத்து எறிந்த வசைச்சொல்லைக் 
கட்டிலுக்கடியில் தள்ளிவிட்டு 
முதுகு துடைக்கிறாள்
பெருக்கித்தள்ள வந்த ஆயாவால் 

தாங்க முடியவில்லை
கட்டிலுக்கடியில் சேர்ந்துவிடும் 

வசைச்சொற்களின் வாடை
  

தலைக்குள் சுற்றும் ரயில்

எதிர்பார்ப்பின் மொழி இரைச்சல்
எழுத்தேயில்லை என்பதை அமுக்கிவிடுகிறது
என்ன பதிலைக் காணோம் என 
அன்றாட அதட்டல் வேறு
*******************************************************
எல்லோரும் அண்ணாந்து பார்க்கிறார்கள்
ஒருவர் கையை ஒருவர் தட்டிக்கொள்கிறார்கள்
எல்லோரும் சிரித்துக்கொள்கிறார்கள்
ரயிலோ என் தலைக்குள் சுற்றுகிறது
சர்க்கஸ் சாகசக்காரனே
இரக்கம்கொள்
நிறுத்து
வெளியேறு
நானும் கைதட்டிக்கொள்வேன்

*************************************************
தென்னை இளங்கீற்றுகளை 
வருடியபடி நின்ற நாட்கள் போயின

இருக்கவே இருக்கின்றன 
வளர்ந்த அடையாளமாக வளையங்கள்
மற்றபடி உங்கள் தலையேயானாலும்
வீழும் காய்

கசப்பின் உறைகள்

தொட்டியில் வைத்துக் கொஞ்சினாலும்
மணமில்லை
போகன்வில்லாவில்
***************************************************
எழுந்து நடக்கப்போவதான
பாவனை
 சலித்துவிடுகிறது பாதங்களுக்கு
*********************************************
ஒவ்வொரு நாளுக்குமான கசப்பு 
சிறு உறையிலிட்டு கிடக்கிறது
எடுத்துப்போடப்படாத
ஏராளமான உறைகளில் 
ஏதாவதொன்று 
திடீரெனக் கொட்டிவிடுகிறது
**************************************************
பழுப்பைப்பொறுக்கி
பூச்சிநீக்கி
ஆய்ந்து முடித்தால்
அம்பாரம் அம்பாரம்
முருங்கைக்குச்சி
*******************************************
முடிந்த வயதுகளின்
மடிப்பினை மெல்ல நீவுகிறாய்
உள்ளிருந்து உதிர்கிறது ஓர் உலர்பூ
எத்தனைகாலம்
 நீ எடுக்கவில்லையெனச் சொல்லியபடி
***********************************************



எப்போதோ வீசிய சொல்

எப்போதோ ருசித்த கனி
எப்போதோ நனைந்த அலை
எப்போதோ ஏறிய உயரம்
எப்போதோ வீசிய சொல்
*****************************************
நீ எங்கேயோ போகிறாய்
சொல்லிக்கொண்டுதான் போனாய்
ஆனால் நான் பயிலாத மொழி அது
பின்வரச்சொன்னாயா
காத்திருக்கச்சொன்னாயா என்றுகூடப் 
புரியவில்லை
****************************************
நீண்டகாலமாக சொல்லப்பட்டதையே 
நான் நம்பினேன்
நீலவானம் என்று
கழுவி விட்டாயிற்றா நீலத்தை
எங்கே தவறு நடந்தது
நிறமற்றது வானம்
என்பதை எப்படி எல்லோருக்கும் சொல்வது
எப்படி நம்ப வைப்பது
ஆனால்
அது அப்படித்தானே இருக்கிறது
ஒற்றைக் குரலாய்ச் சொன்னால் 

கேட்க மாட்டார்கள்
ஒரே ஒருவர் வந்தால் போதும் 

என் பக்கம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...