சனி, பிப்ரவரி 05, 2022

வளர்ந்த கலை(தை)

    "பொண்ணு வளர்த்த அழகைத்தான் மெச்சுவாங்க" என்ற வசனத்தைக் கரைத்துப் புகட்டி நான் வளர்கிறேனே மம்மி என்றால் நறுக்கெனக் குட்டி

"புளியைக் கரைக்காதே சனியனே"
என்று ஆசைமொழி பேசும் அம்மாக்களும் அத்தைகளும்
சித்திகளும் ஆத்தாக்களும்
கவலை கொண்ட வளர்ச்சி
கார்மேகக்கூந்தல் அடர்த்திதான்
கட்டியாய்த்தின்பதைக்
கரைத்துக் குடித்தாலும்
எண்ணெயும் அரப்பும் தப்பாது
கரிசலாங்கண்ணி மருதாணி
தேடித்தேடி அரைத்து வில்லைதட்டி
ஊறவைத்த எண்ணெய் வாடையோடு
சாட்டையாய்த் தொங்கும் சங்கரியின் பின்னல்
கூழையாய்ச்சுருளும் நாய்க்காது சடையை
ரிப்பனின் பட்டர்ஃபிளை முடிச்சாவது
அழகாக்கிடாதா என்ற ஆசை
விஜயாவின் அவ்வாவுக்கு
பள்ளிவிடுப்பென்றால்
அம்மாவின் முழங்காலுக்குள்
சாமியாடியபடியே
பேன்களுக்கு சாவுபயம்
காட்டிக்கொண்டிருப்பாள் தைலா
ஈருளியும் வெள்ளியில் வைக்கணும்
என்ற வள்ளியம்மை வீட்டுச் சீர்ப்பட்டியலை நினைத்தபடியே
இரவல் ஈருளியைக் கழுவிக் கொடுப்பாள் செல்வி
ஃப்ரீ ஹேர்விட்டு
பூர்ணிமாவும் நதியாவும் செருகிக்கொண்ட
பின்னூசிகளை
சரிதாவாக வழித்துச்சீவிதான் செருகிக்கொண்டோம்
கேசவர்த்தினியும்
சடங்குச் சீரில் அடக்கம்
பள்ளிக்கால ரிப்பன்களை
மீண்டும் மகள்களுக்காக அளந்து வாங்கி
மறக்காமல் ஓரம் தைத்த அம்மாக்கள்
பாட்டியானபின்னும்
தொலைக்காட்சித் தாய்மார் மகளின் பின்னலை இழுத்து
"நீ எங்கே குட்டியா இருக்கே"
என அடர்த்தியை நீளத்தை அளந்துகொண்டே இருக்கிறார்கள்
தோள்வரை கத்தரித்த கூந்தலை
குட்டிக் கிளிப்பில் அடக்கிவிட்டு
"பாய்கட்தான் ஆனா கேர்ளுக்கு"
என்று சிகைதிருத்துநரிடம் நேரம் கேட்கும் அம்மாக்கள்
ஓரக்கண்ணால் சிரித்துக் கொள்கிறார்கள்
கூந்தலால் வளரும் விளம்பரம் பார்த்து




வியாழன், ஜனவரி 13, 2022

உடன் நடக்கும் வயது

 முக்கியம் முக்கியம் எனச் சேர்த்தவற்றுக்குள்

எங்கோ இருக்கிறது
நண்பனின் வாழ்த்து அட்டை
ஆத்தாவின் புடவைத்துண்டு
எனாமல் பதித்த ஒற்றைக் கொலுசு
பழைய நகைக்கடை டப்பாவிற்குள்
தாலிபிரித்துக்கோர்த்த கயிறு
சிங்கப்பூர் மாமா கொடுத்த நாணயம்
அஞ்சல்வில்லைகளை ஒட்டி ஒட்டிப் புடைத்த பழைய நோட்டு....
இப்படியே வைத்துக்கொள்ள
எத்தனை நாள் வாய்க்குமோ
அதுவரை உடன் நடக்கும் வயது
உங்கள் வயது உங்களுடன் நடக்கிறதா *************************************************
ஏறுமாறான அளவுகளில்
வந்துவிட்ட ரவிக்கைக்கென
ஊக்குகள் தொங்கும் கறுத்த மஞ்சள்கயிற்றில்
முடிச்சிட்ட விரலி மஞ்சளும்
எப்போது வேண்டுமானாலும் உதிரலாம்
புடவை புதிதுதான்
பார்த்துப்பார்த்து வாங்கிய எவளோ
நனைத்தவுடன் நிறம் குழம்பிப்போகும்படி
சாயம் தோய்த்தவனை வாழ்த்தியபடி கொசுவத்தை நீவி நீவிக்
கட்டிக்கொள்கிறாள்
மனசைச் செல்லமாகக் கண்டித்தும் வைக்கிறாள்
இதுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக்காதே என்று

அரூபப் பெருக்கு

 எங்கள் தெருவோர வாய்க்காலின் குட்டி மீன்

கோரைகளுக்குள் புகுந்து புகுந்து துள்ளி ஓடும்
நெடுங்காலத்துக்குப்
பின்
குளியலறைக் குவளைக்குள்ளும்
அதே துள்ளல்
பாசிவாடை வர
வாளியின் பச்சை நிறம் போதுமாயிருந்தது
வாட்சப் வழி
பார்த்த பெரியப்பாவின்
பொக்கை வாய் வழிதான்
அந்த வாய்க்கால் பெருகி வந்திருக்க வேண்டும்
தலைமுறைக் காலம் கடந்தும்
உயிர்வாழும் மீன்
ஒரே தாவு தாவியிருக்கும்
கால இயந்திரத்தில்
************************************************
எப்பொழுதாவது
ஒருமுறை
அழைப்பாள் அவள்
அவளுக்குப் பொழுது போகாத பொழுது
என்று நினைத்துக் கொள்வேன்
பிடித்தவற்றை அறிவிக்கவும்
பிடிக்காதவற்றைப்
பகடி செய்யவும்
தீர்மானங்களைப் பட்டியலிடவும்
இப்படி ஒரு பொழுது இருக்கிறதே உனக்கு என்பதை
மனதுக்குள்ளும்
ம் களை உரக்கவும் சொல்லும்போது
ஒரு தட்டு கத்தி
மாதுளை எடுத்து நீட்டிவிடு
உதிர்த்துவிடலாம்
ஒன்றாக

சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி

 ஏதோ சொல்ல வந்தாய்

சொன்னாய்
ஆனால் முழுமையாக சொல்லப்பட்டதா
முழுமையாக கவனிக்கப்பட்டதா
இருவருக்குமே தெரியவில்லை
பின் எப்போதோ ஒருகணத்தில்
சொன்னேனே என்பாய்
சொல்லப்படாத சொற்கள் என்னவாயின
பால்யத்தில்
இதழ்க்கடையிலோ
உதடுகளிலோ
ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சூண்டு தித்திப்பை
நா நீட்டி இழுத்து
சப்புக்கொட்டியதுபோல மென்றுவிட்டாயா

******************************************
மொத்த வீட்டின் இருளுக்கும்
சவால் விடுக்கிறது ஒற்றை நீலப்புள்ளி
சுழியத்தைப்பருகி
சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி
இந்த வேம்பு இங்குதான் இருக்கிறது
அட குயிலே
நீ ஏன் இந்த கிடுகிடு நிசப்த இரவில்
எசப்பாட்டு பாடி எனக்குத் துணையிருக்கக்கூடாது
காலையில்தான்
வெளிச்சத்தின் பின்னணியில்
சேர்ந்திசை பாடுவாயா
நீ குக்கூ என்றால்
குக்கர் உஷ் என்கிறது

துண்டு துண்டான பக்கம்

 நீ கேட்டாய் என்று

வழியில்
அடையாளமாகப்
போட்டுவைக்க
என்
வாழ்வின் ஒரு பக்கத்தைத்
துண்டு துண்டாகக்
கிழித்து
ஒன்றும் பறந்துவிடாமல் அமுக்கிஅமுக்கி
உன்கையில் கொடுத்து அனுப்பினேன்
அடைந்ததும்
அழைத்துவிட மாட்டாயா என்று காத்திருக்கிறேன்
உன் பாதை என்ன
அத்தனை நீளமாகவா போகிறது
*****************************************************
பிரயாசை என்ன புதிதா
யார்தான் படவில்லை
என்னைப்போல் இல்லை
என்பது மட்டுமல்ல
எனக்கல்ல
என்பதும்தானே
உங்கள் மற்றும் என் சிக்கல்
************************************************

கையுறையணிந்த கடவுள்கள்

      மாணவப்பருவத்திலிருந்தே அவர்களுக்கு வேறு கடிகாரம்

அது 48
72 மணிநேரங்களைக் கொண்டது
அவர்கள் உணவு
அவர்கள் உறக்கம்
உங்கள் கையில்தான்
அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு வெளியே
நாம் கையைப்பிசைந்து கொண்டு
காத்திருக்கையில்
கையுறையோடு பரபரத்து இயங்கும் அந்தக் கைகள்
கடவுளின் கைகள்
அளவாய் இருக்கிறீர்களா என்று எண்களால்
கண்களால் அறிந்துகொள்ளும்
வித்தைக்காரர்கள்
காதலால் பேசாத இதயங்களின்
லப் டப் உரையாடல் அவர்கள் காதுகளுக்கு மட்டும் கேட்கும் சரியான மொழியில்
இப்போதெல்லாம்
ஏற்ற இறக்கங்களை
மாற்றி அமைத்து
பழுது நீக்கும் பொறியாளனாக உங்கள் உடலைத் தட்டிக்கொடுக்கிறார்கள்
உலகையே ஆட்டிப்படைக்கும்
பெருந்தொற்றுகளிலும்
ஒளிந்துகொள்ளாத
தொண்டர்குலம் அது
கவசங்களைப் பழகிக்கொண்டு
காத்திருப்பைப் பழகிக்கொண்டு
கண்ணீர்,வியர்வை காட்டிக்கொள்ளாது
நேரத்துக்கு உண்
அடக்காது கழிப்பறை செல்
என்று ஊருக்குச்சொல்வதை
தன் உடம்புக்குச் செய்யாது
ஓடும் யோகிகளால்
வாழும் வரம் நமக்கு
அலைகளை வெல்லும் இந்த ஆயுதங்களை
உங்கள் முறை என்னவோ அப்படி வணங்குங்கள்
கை தொழலாம்
நெடுஞ்சாண்கிடையாக நெற்றி
நிலத்தில் படலாம்
பரிசு தர விரும்பி
என்ன வேண்டும் எனக்கேட்டால்
சொன்ன பேச்சைக் கேளுங்க அது போதும்
என்பார்கள் அம்மாவாகி
எம் தேசத்தீரே
நன்றிசொல்ல
நல்லவழி உண்டு
லட்சியங்களை மட்டுமே பற்றி உயர்ந்து
வெள்ளைக் கோட்டுக்குள் புகுந்த
எம் தலைமுறை வழி
லட்சங்களை அறியாத பாதங்களும்
நடக்க வழிவிடுங்கள்
நீட்' ஆன நெடுஞ்சுவர் இடித்து.


 




ஞாயிறு, ஜனவரி 09, 2022

துன்பக்கேணி

 சுரந்துகொண்டேயிருக்கும் துன்பக்கேணி

தாம்புக்கயிற்றை
சரசரவென்று விட்டு இழுத்து இறைத்துக்கொண்டால்
வலிக்கவில்லை என்று பாவனையா

***************************************************
நீ சுட்டுவிரலில் மாட்டிச் சுழற்றிக்கொண்டேயிருக்கும்
ஒற்றைச்சாவி
வாகனம் ஓடும்போது
எத்தனை பெருமூச்சு விடும்
எனக்கும் தெரியும்
***********************************************
பதியன் போட உடைத்தாலும்
பக்குவம் பார்க்கச் சொல்லும் உனக்கு
விதையோ பூவோ பிஞ்சோ
எது கருகுமென்றே கவனிக்காமல்
சட்டென மருந்தடிப்பதில் தயக்கமேயில்லை
ஒற்றை அருகம்புல் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறது
பச்சைப்பைகளையே நகர்த்திக்கொண்டிருக்கும்
உன் கண்ணில் படுவதில்லை அவ்வளவே
************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...