வியாழன், ஜூலை 08, 2021

இப்போதும் இப்போதும்

 பொடித்துப்போடாத வெல்லக்கட்டியாக

அன்பு கிடக்கிறது
வாழ்க்கை இத்தனை சப்பென்று
இருப்பதேனோ கலக்காது கலங்குகிறாய்
இருக்கிறது
ஆனால்
இல்லை

************************************************
இலந்தைவடை,கடலைஉருண்டை
கமர்கட்,தேன்மிட்டாய்,பால்பன்,ஓமரொட்டியென
இருகைவிரலுக்குள்
அடங்கியவற்றை
கண்ணாடிப்பெட்டிகளில் மட்டும் காண வாய்த்திருந்தது
ஒருசேர இருசுவை அறிய அனுமதிக்காது
அவ்வப்போது கிடைக்கும்
அஞ்சு பைசாக்கள்
நிறநிறநிறமாய்த்தொங்கும்
உப்பிய நெகிழிக்குள் உறங்கும் சுவையறியா அரும்புகள் உண்டுதானே இப்போதும் ***************************************************
இப்போதும் இருக்கிறதுதானே அந்த வானம்
ஒரு கூரை அதை மறைத்தாலும்
இப்போதும் இருக்கிறதுதானே அந்த வெளி
ஒரு கதவு அதைப் பிரித்தாலும்
இப்போதும் இருக்கிறதுதானே
அந்தப்பாடல்
சுழற்சி நின்றாலும்
இப்போதும் இருக்கிறாய்தானே நீ ***********************************************

இங்கே
இந்த நெஞ்சுக்குள்
உறைகிற கீதம்தான்
வார்த்தைகள்தான்
ஒளிந்து கொள்கின்றன
ஆரஞ்சுத்தோலாக
நினைவை உரித்து உரித்து
எடுத்துக் கொண்டிருக்கிறேன்
நெருங்கிவிட்டேன்
****************************************************************************************************


கைகளைக் கழுவ விடுங்கள்


நீங்கள் உணவளிக்கப் பிறந்தவர்கள்
நாங்கள் கைகழுவப் பிறந்தவர்கள்
அவுரி கண்ட மண்ணுக்கு
ஆண்டுக்கணக்கில் விதையெதற்கு
உரமும் நீரும் ஊக்கத்தொகையும் உங்கள் கவலையாகாது
நகரும் கால்களில்
உங்களுடையது
நான்காமிடமோ
நாற்பதாமிடமோ
உடைமை என்பதே பெருஞ்சுமை
அதை இறக்கத்தானே
இத்தனை பாடு
*********"*
நைச்சிய சொற்களின்
அடையாளம்
நாளும் களைபறித்த
கண்களறியாதா
கொழுமுனை கீறிய நிலத்துக்குள்
புதையட்டும்
பொய்ம்மையின் பசப்பல்
வரலாறு
எல்லாவற்றையும் பிடுங்கிப்பிடுங்கி
உருட்டி உருட்டி
நாலாய் எட்டாய் மடித்து விழுங்க
எங்கள் வாழ்வென்ன
உங்கள் அம்மைசுட்ட ரொட்டியா
விழுங்கும்வேகத்தில்
ஒரு விக்கல் வந்தாவது
நினைவூட்டாதா
தொண்டைக்குக்கீழே
எல்லாம் ஒன்று
எல்லார்க்கும் ஒன்று என்று
பக்கத்திலிருக்கும்
முதலாளிமார்க்கும்
தங்கத்தில் வேகவில்லை
தானியத்தில்தான் வேகிறது
எங்களுடையது
கஞ்சி
உங்களது
பாரிட்ஜ்
உண்டு கழுவ விரும்பும் கைகளையுடைய நாங்கள்
உதறிக்
கைகழுவும் உங்களிடம்
இரத்தல் தகுமோ

ஆண்டவன் கதைகள்

 கழுத்துச்சங்கிலியைக்

கண்களால் துழாவுகிறவர்களைக் குழப்புகிறது அவள் குங்குமம்
கூடுதலாய் ஒரு கிள்ளு மல்லி வேறு
இருக்கிறானா இல்லையா என
ஆண்டவனாக மாற்றி அவனை யோசிக்கிறவர்கள்
இருக்கிறார்கள் இன்னும்
உலகம் எங்கேயோ போயிடுச்சு
என இழுக்காதீர்கள்
அது எப்போதும்போல் இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது

******************************************
ஒதியமரக்கிளையில்
குடியிருந்த வீரனைத் தனித்து விட்டு
அக்கரையும் இக்கரையுமாய்த்
திசைதடுமாறி ஓடிய சனத்துக்கு
ஆசி அளிக்கவென்றே
குளம் மூழ்கி
நரைத்த நாலு முடியைத் தட்டிக்காயவிட்டுக்கொண்டு
வெறும்பாக்கை உடைத்து மென்றுகொண்டிருக்கிறான் அவன்
வெற்றிலை கிடைக்கும் எவனாவது
மண்மேடாய்க்கிடக்கும் நிலத்தைப்
பார்க்க வரும் ஆடிக்கொரு நாளில்
வந்து போகிறவன்
உருகும்போது
எதிரிலொருவன்
கிண்டலாய்ச் சொல்வான்
காத்து..மரம் இயற்கெ.
என்று
ஊரிலிருக்கும் புங்கமரம் அதுகேட்டு ஆவேசமாய் ஆடும்

அதே கண்கள்

 உங்கள் கண்கள்

வறண்டு வருகின்றன என்றார் மருத்துவர்

நீண்ட சோதனைகளுக்குப்பின்
சட்டென அழுதுவிடாது
தைரியமாக இருக்கிறேன் என்று யார்யாரிடமோ சொல்லியது
நினைவுக்கு வருகிறது
திடீரென மரணிக்கும்
அன்புக்குரியவர்களின் சபையில்
விம்மாது நிற்க முடிந்த என்னைப் பார்த்து
எனக்கே கூட ஆச்சர்யமாக இருந்தது
சிவாஜியின் தொலைபேசித் தழுதழுப்பு தொடங்கி
மங்காவிடம் வீம்பு காட்டும் வள்ளிக்கு
தங்கச்சியிடம் பாடும் கொட்டாங்குச்சி ராக
டி ஆர் சிலுப்பலுக்கும்
ஆட்றா ராமா குட்டிக்கரணத்துக்கும்
புள்ளகுட்டியப் படிக்க வைக்கச் சொல்லியபடி
ரயிலேறிப் போகும்
மீசைக்காரனுக்கும்
சிந்திய கண்ணீரெல்லாம் போதாதென்று
விடுகதையா வாழ்க்கை என்று பின்னணி அலற
சால்வை புரளப்போகும் மூத்த முத்துக்களுக்கும்
கலங்கிய கண்தானே இது

என்ன மிச்சமிருக்கப்போகிறது
நிசத்துக்கு சிந்த

அவிர்ப்பாகம்

 சன்னதி வீதியைப்

படம்பிடித்துப் போட்டிருக்கிறார்கள் யாரோ

கோபுரத்திலிருந்து உலகைப் பார்ப்பதாக
பொதபொதவென்று இறங்கும் சேற்றுக்குழி
முன்னொரு காலத்தில் தண்ணீர்ப்பந்தல் இருந்த இடத்தில்
டோக்கன் கொட்டகை
நேர்ந்துவிட்ட பிராணிகளின் ஒலியில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது
வீதி உலாவின் ஆனந்தபைரவி
வரப்பிரசாதியாக மாறிவிடுமாறு
வலியுறுத்துவதை எதிர்த்து
புலித்தோலும் சூலமுமாக வேகநடை போடுகிறான் சடையன்
அவிர்ப்பாகம் வாங்கித் தருகிறேன் வா என்று இறந்தகால ஞாபகங்களோடு

பின்தொடர்கிறாள்
தாட்சாயணி
வேடப்பொருத்தம்
அழகு என்றபடி
இரண்டுரூபாய்
நாணயத்தை நீட்டுகிறான் எவனோ

மலர்ச்சியின் பங்காளி

 மிக நீண்ட பாதை....

இற்றுப்போகும் காலுக்கு ரகசியமாகச் சொல்கிறீர்கள்
அதோ ஒரு இருக்கை
நெருங்குமுன் ஒரு அடி கூடுதல்வேகம் வைத்து
எவரோ இடம்பிடிக்கிறார்
வாட்டம் புலப்பட்டது
அதற்கென்ன அடுத்து ஒன்று...
நெருங்குகையில்
அதைக் காணவேயில்லை
கால்
சிணுங்குவது புரிந்தாலும்
நடந்தே தீரணும் வழி
**************************************************
வழக்கத்தைவிடச்
சற்று சாய்கோணத்தில்இறங்கிய சூரியன்
விரட்டி விரட்டி விளையாடி தெருவில் வெயில்காயும் நாய்க்குட்டிகள்
தொட்டிச்செடிகளைத் துளைத்துவிடுவதாக அதகளம் செய்துகொண்டிருக்கும் அணில்
யாருமில்லையென உறுதிசெய்துகொண்டு தாழவந்தமரும் குருவி
மலர்ச்சியின் பங்காளிகள் ****************************************************
சின்ன கிண்ணங்களில் கொடுத்துவிடும் மாவிளக்கையோ சர்க்கரைப் பொங்கலையோ
சரிபங்காக
எல்லோரும் எடுத்துக்கொண்டோமா எனக்கேட்கும் ஆச்சியின் முகம் எப்படியாவது நினைவுக்கு வர வேண்டும்
சராசரித் திறனோடாவது வரைந்து வைத்துக்கொள்ள வேண்டும்





சரியில்லாத சரி

 ஒரு குவளைத் தேநீரை நீட்டுவாள்

தோள்மீது படியும்
அந்தக் கரத்திலேயே
வாழ்வை ஒப்படைத்துவிட்டதுபோல்
சிலர் அழுவர்
சிலர் நிறுத்தாது பேசுவர்
இதயங்களை லேசாக்கி அனுப்புவதற்கே
வாழ்ந்தவளுக்கு
கனம் இருக்குமென
யாரும் நினைக்கவில்லை
அவள் தோள் தொடாவிடினும்
ஒரு தேநீர்
கொடுத்திருக்கலாம் **************************************
மழைநீரைக் கிழித்தபடி விரைகின்றன வாகனங்கள்
மழையைப் பார்த்துக்கொண்டிருக்க அனுமதியா
வாழ்வின் கடிகாரம்
நொடிமுட்களின் நுனியில் சொட்டும்
துளிநீர்தான் மழை எனச்சொல்லிக் கடக்கிறது *****************************************************
தெருமுனையின்
குப்பைமேடு
காணவில்லை
கொதிநுரை
விளிம்பை நெருங்கும்போது
பாலை நிறுத்தியாயிற்று
மிகச்சரியாக
தூதஞ்சல்காரருக்கு
வீடு தெரிந்துவிட்டது
சரி
இந்த சரிகளுக்கெல்லாம்
ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகிறது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...