வியாழன், ஜூலை 08, 2021

சரியில்லாத சரி

 ஒரு குவளைத் தேநீரை நீட்டுவாள்

தோள்மீது படியும்
அந்தக் கரத்திலேயே
வாழ்வை ஒப்படைத்துவிட்டதுபோல்
சிலர் அழுவர்
சிலர் நிறுத்தாது பேசுவர்
இதயங்களை லேசாக்கி அனுப்புவதற்கே
வாழ்ந்தவளுக்கு
கனம் இருக்குமென
யாரும் நினைக்கவில்லை
அவள் தோள் தொடாவிடினும்
ஒரு தேநீர்
கொடுத்திருக்கலாம் **************************************
மழைநீரைக் கிழித்தபடி விரைகின்றன வாகனங்கள்
மழையைப் பார்த்துக்கொண்டிருக்க அனுமதியா
வாழ்வின் கடிகாரம்
நொடிமுட்களின் நுனியில் சொட்டும்
துளிநீர்தான் மழை எனச்சொல்லிக் கடக்கிறது *****************************************************
தெருமுனையின்
குப்பைமேடு
காணவில்லை
கொதிநுரை
விளிம்பை நெருங்கும்போது
பாலை நிறுத்தியாயிற்று
மிகச்சரியாக
தூதஞ்சல்காரருக்கு
வீடு தெரிந்துவிட்டது
சரி
இந்த சரிகளுக்கெல்லாம்
ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...