வியாழன், ஜூலை 08, 2021

மலர்ச்சியின் பங்காளி

 மிக நீண்ட பாதை....

இற்றுப்போகும் காலுக்கு ரகசியமாகச் சொல்கிறீர்கள்
அதோ ஒரு இருக்கை
நெருங்குமுன் ஒரு அடி கூடுதல்வேகம் வைத்து
எவரோ இடம்பிடிக்கிறார்
வாட்டம் புலப்பட்டது
அதற்கென்ன அடுத்து ஒன்று...
நெருங்குகையில்
அதைக் காணவேயில்லை
கால்
சிணுங்குவது புரிந்தாலும்
நடந்தே தீரணும் வழி
**************************************************
வழக்கத்தைவிடச்
சற்று சாய்கோணத்தில்இறங்கிய சூரியன்
விரட்டி விரட்டி விளையாடி தெருவில் வெயில்காயும் நாய்க்குட்டிகள்
தொட்டிச்செடிகளைத் துளைத்துவிடுவதாக அதகளம் செய்துகொண்டிருக்கும் அணில்
யாருமில்லையென உறுதிசெய்துகொண்டு தாழவந்தமரும் குருவி
மலர்ச்சியின் பங்காளிகள் ****************************************************
சின்ன கிண்ணங்களில் கொடுத்துவிடும் மாவிளக்கையோ சர்க்கரைப் பொங்கலையோ
சரிபங்காக
எல்லோரும் எடுத்துக்கொண்டோமா எனக்கேட்கும் ஆச்சியின் முகம் எப்படியாவது நினைவுக்கு வர வேண்டும்
சராசரித் திறனோடாவது வரைந்து வைத்துக்கொள்ள வேண்டும்





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...