உங்கள் கண்கள்
வறண்டு வருகின்றன என்றார் மருத்துவர்
நீண்ட சோதனைகளுக்குப்பின்
சட்டென அழுதுவிடாது
தைரியமாக இருக்கிறேன் என்று
யார்யாரிடமோ சொல்லியது
நினைவுக்கு வருகிறது
திடீரென மரணிக்கும்
அன்புக்குரியவர்களின் சபையில்
விம்மாது நிற்க முடிந்த என்னைப் பார்த்து
எனக்கே கூட ஆச்சர்யமாக இருந்தது
சிவாஜியின் தொலைபேசித் தழுதழுப்பு தொடங்கி
மங்காவிடம் வீம்பு காட்டும் வள்ளிக்கு
தங்கச்சியிடம் பாடும் கொட்டாங்குச்சி ராக
டி ஆர் சிலுப்பலுக்கும்
ஆட்றா ராமா குட்டிக்கரணத்துக்கும்
புள்ளகுட்டியப் படிக்க வைக்கச் சொல்லியபடி
ரயிலேறிப் போகும்
மீசைக்காரனுக்கும்
சிந்திய கண்ணீரெல்லாம் போதாதென்று
விடுகதையா வாழ்க்கை என்று பின்னணி அலற
சால்வை புரளப்போகும் மூத்த முத்துக்களுக்கும்
கலங்கிய கண்தானே இது
என்ன மிச்சமிருக்கப்போகிறது
நிசத்துக்கு சிந்த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக