செவ்வாய், ஜூலை 13, 2021

கனமனம்

 சில்லிட்டுக்கிடக்கிறது

தரையெல்லாம்

உரச்சாக்கின்மேல்
கிடக்கும் மிச்ச மரவள்ளியையும் எடுத்துக்கொள்கிறாயா
என்று வெற்றிலை வழியச் சிரிக்கிறாள் அந்த ஆயா
"ரெண்டுகிலோவை வெச்சி நா என்ன செய்ய"
சங்கடமாக முனகினேன்
"காசு வோணாம்
எடுத்துட்டுப்போயி
அவிச்சி
என்னாட்டங் கிழங்கட்டைக்கு குடு"
பைக்குள் போட்டுவிட்டு
சாக்கைச் சுருட்டிக்கொண்டு
டெம்போவில்
நுழைந்துவிட்டாள்
பிறகுதான் என் தோள்பை வேதாளமாய்க் கனக்கிறது

பத்தாயத்துக்குப்பின்

 அரிசி,பருப்பு அத்தனைக்கும்

அளந்து போடக்
குவளைகள் வைத்திருக்கிறாள்
ஒன்றுக்கு இரண்டு கணக்குக்கென்றே
குக்கர் தம்ளர் உண்டு
இட்டிலி அரிசியில் கிடக்கிறது
நிறைநாழி நெல் கொண்டுவந்த பித்தளைப்படி
ஆகப்பெரிய அளவு அதுதான்
ஐந்நூறு சதுர
அடுக்கக வாழ்வில்
எத்தனை படி ஒரு மரக்கால் என்பதே
மறந்து
போனவளிடம்
எத்தனை குழி ஒரு மா'வுக்கு
எத்தனை மா ஒரு வேலியென்று
கேட்டுவிடாதீர்கள்
ஒளிந்து விளையாடிய பத்தாயம் நினைத்து
ஆத்துஆத்துப் போவாள் அம்மா

கண்ணாடிரவிக்கை

 கண்ணாடிவைத்து

தைத்த ரவிக்கையும்
மஞ்சள் சேலையுமாக
தலைவி பாடிக்கொண்டிருக்கிறாள்
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது
என்று
அந்தக் கண்ணாடிவைத்த
ரவிக்கை தைத்த
நினைவுகளை சொல்லியபடிப்
பார்த்துக் கொண்டிருந்த
பானு அக்கா,
சட்டென என்னிடம்
பானுப்ரியாவும் இப்ப
இந்த பாட்டைப் பாப்பாங்கள்ள என்றாள்
உண்மையில் அதைத்தான் கேட்க விரும்பினாளா

அரூபவல்லி

 எல்லோரும்

அலையில் கால்நனைத்து
ஆடைகளைப்
பற்றிக்கொள்ளும்
மணலை அலசி
மீண்டும் அலையாடி
மணல் உதறிக்
கொண்டாடிக்கொண்டிருந்த
புகைப்படங்கள் எதிலும் அம்மா இல்லை

எல்லோர் கைப்பை,காலணி இத்யாதிகளைக் காத்தபடி
அவள் இருந்த இடம் புகைப்படத்துக்குள் அடங்கா தூரம் ********************************************
அவர்களும் ஒருநாள்
ஒளிர்கண்களால்
நேரடியாக நம்மைப் பார்த்தார்கள்
கருகருவெனத் தலைநிறைந்த முடி முன்நெற்றியில் வழிய
மொழுமொழுவென்ற
விரல்களால் நம் முகம் வருடினார்கள்
இடுக்கு விழுந்த ,தெத்திய இயற்கையான பல்மினுங்க சிரித்தார்கள்
நினைவில் தங்கிய சித்திரத்தில்
வயது அவர்களின்
எல்லாவற்றையும் பறித்துக்
கொண்டுவிட
இளையவர்கள் யாரோவாகக்

கிழவர்களே உறவாயினர்

சமன் செய்வாய்ப்பு

 ஊடுபுள்ளிகளில்

எங்கோ ஒரு குழப்படி
இருந்தாலும் மாற்றி மாற்றி இழுத்துக் கோத்து
முடித்துவிடத் தெரிந்த அளவுக்கு
வாழ்க்கையை கோலமாகப் போடமுடியவில்லை
வண்ணங்கொள்ளா சிக்கு ************************************
குனிந்து குழைந்து
மறுமொழி சொல்லிய கணத்தைச்
சமன் செய் வாய்ப்பாக உன்முகம் பார்க்கும்
குப்பை மேட்டுக் குருவி பார்த்து ஒரு பாய்ச்சல்
வாலாட்டாமல்
வாழ முடியாதா என்பது
அதன் பொருளுரை *******************************************
உன்முன் இரண்டு கதவுகள் இருக்கின்றன
உன்முன் இரண்டு கேள்விகள் இருக்கின்றன
உன்முன் இரண்டு கோப்பைகள் இருக்கின்றன
இரண்டில் ஒன்றுக்காகவே இவ்வளவு நடையும்

என்னவாக இருக்கிறாய்


கிருஷ்ணபாதம் வரைந்த வீட்டில் ஊசியிலை மரமும் ஆடுகிறது
பெருநாளுக்குப் பிரியாணி தின்று கொடை கொடுக்கிறீர்கள்
ஆம்
எங்கள் கண்ணன் அச்சுப்
பாதங்களில் குழந்தை யேசுவும் தளிர்நடையிடுவார்
வேலுக்கும் சிலுவைக்கும் வரப்புத்தகராறில்லை
பிறையிருக்குமிடத்தில்
நட்சத்திரமும் ஜொலிக்கும்
ஆண்டாளைப்போலவே
அனீஃபாவும் பிடிக்கும்
தேவாப்பிரசன்னம்
தேடியும் தொழுவதுண்டு
கூம்பு ஒலிபெருக்கியாக இந்தமனம் எல்லா மணியோசையையும் எதிரொலிக்கும்
என்னவாகத்தான் வாழ்கிறாய்
மனுஷியாகத்தான்
போதாதா

வருகை

 தேவகுமாரன் வருகையை அறிவிக்கும் நட்சத்திரங்களை

தெருவில் ஒவ்வொரு வீடாக
ஒன்று இரண்டு
என எண்ணிக்கொண்டே வந்த பாப்புக்குட்டி
நம்ம வீட்டுலயும் ஒண்ணு கட்டுவோம்
என்றாள் மினுங்கும் கண்களோடு
அப்போது எண்ணிக்கையில் மூன்று சேர்ந்துவிடும் *******************************************************
நம்பிக்கைகள்
துளிர்க்க
காய்ந்த வைக்கோல் மேல் பொழியும் பனியோடு பிறந்திடுவான் ஒரு தேவகுமாரன் என்ற வாசகம்
உங்கள் கைகளில் வழங்குகிறது அப்பத்தை
நீங்கள் பெருக்கி வழங்குவீர்கள் யாவர்க்கும் திராட்சை ரசத்தை
முற்றங்கள்தோறும்
இறங்கிப் புன்னகைக்கும் நட்சத்திரத்தில் எல்லாம் தெரியவில்லையா அந்தக்
குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...