செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

பெயர் மாறியது

    தேன்கூடு தோடு முத்தண்ணிக்கும்

பாகப்பிரிவினை தோடு

செல்வியக்காவுக்கும்
மாங்காய் தோடு
பாக்கியத்தத்தைக்கும்
ஏழுகல் தோடு
கமலத்தாச்சிக்கும் அடையாளம்.
தொங்கும் காதில் கனத்த சுரையோடு
கெம்புச்சிவப்பில் தன் வெற்றிலைச்சாறு போலவே வருவாள்
தெய்வானை ஆத்தா
ஆராதனா தோடும்
ஆடும் வளையமுமாக வந்த
மருமகள்கள் மாற்றிக்கொள்ளவென்று இன்னொரு செட்டும்
வைத்திருந்தது
நடுத்தெருவுக்கு
புதிய செய்தி
ஆராதனா தோட்டுக்காரி
எண்ணெய் இறங்கிய கல் தோட்டையும்
வாத்து மூக்குத்தியையும்
கழற்றாதே என்று
தாலி கழற்றிய தன் மாமியின் கையைப் பிடித்தது
அதைவிடப் புதிய செய்தி
ஆயுளுக்கும்
ஒற்றைத் தோட்டையே அடைகாத்த காலம் மாறி
பெயர்வைத்த,பெயர்வைக்காத
தோடுகள் சில வாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள்
நடுத்தெரு நாயகியர்
நடுத்தெருவின் வீடுகள்
ஆட்கள்
மாறினார்கள்
வளர்ந்த ஊரின் ஓரத்தில் கிடக்கும் நடுத்தெருவுக்கு
ஜெயிலும் ஊருமாக வாழ்ந்த
உள்ளூர்த்தலைவர் பெயர்கூட வைத்தாயிற்று
குடும்பத்துக்கு ஆகாது என்ற குரல்களும்
வளை உடைத்துக் காயமாக்காதே
என்ற ஒற்றைக் குரலுமாகக்
கருமாதி வீடு சலம்பும் நடுத்தெரு
இன்னுமிருக்கிறதுதானே
ஏதேதோ பெயர்களில்
எல்லா ஊரிலும்




ஏற்கப்படாத அழைப்பு

     உங்கள் அழைப்பை ஏற்காது கிடக்கும்

எவரொருவரின் அலைபேசியும்

உங்களை வேண்டுமென்றே
நிராகரிப்பதில்லை
கொதிக்கும் வார்த்தையாடல்களுக்குத்தப்பி
அந்த அலைபேசி
வெயில் மொடமொடப்போடு
மடிக்கக் காத்திருக்கும் துணிகளோரம்
ஒடுங்கிக் கிடக்கலாம்
வார்த்தைகளின்மேல் வெறுப்புற்று
கண்மூடி
இசையில் மூழ்கிக் கிடப்பவன் ஏதோ ஒரு படிக்கட்டில் கழற்றிவைத்த காலணி,சட்டை,சராய் வகைகளுக்குள் விச்ராந்தியாகக்
கிடக்கலாம்
எதிராளியை ஏதும்செய்ய இயலா வெடிப்பில்
விசிறியெறிந்து
உயிரிழந்தும் கிடக்கலாம்
ஆனாலும்
மீண்டும் மீண்டும்
அழைப்பவர்கள்
சிலசமயம்
வாழவைத்து விடுகிறார்கள்
அலைபேசியையும்
உடைமையாளரையும்
போனால் போகிறது
வைதாலும் வாங்கிக்கொள்ளுங்கள் சார்




கோழையைத் துப்புதல்

 கவிதை 1

என்னை அண்ணாந்து பார்க்காதீர்கள்
உங்கள் பாதையில் அன்றாடம் இரண்டு கண்ணிவெடி
வைக்க வேண்டியிருக்கிறது
உங்கள் ஊரில் அவ்வப்போது
ஒரு வன்புணர்வு நடத்த வேண்டியிருக்கிறது
உங்கள் சோற்றுத்தட்டில்
ஒரு பிடி மண்ணோ
சிறு துளி நரகலோ
இட வேண்டியிருக்கிறது
இல்லாவிடில்
எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்
எத்தனை அந்தரத்தில் அமர்ந்து கொண்டாலும்
பல் குத்தியபடி
ஒரு விமர்சனம்
என்னை அண்ணாந்து பார்க்காதீர்கள்
உங்களைக் குனிந்து பார்க்க நான் வருவேன்
அதுவரை
கவிதை 2
நல்ல மருந்து தெரிந்தால் சொல்லுங்கள்
வரி வரியாகப் பழுத்திருக்கிறது
உடலெங்கும்
தாங்கியதாலா
தாங்காததாலா எனத் தெளிவில்லை
கண் எரிச்சலிலிருந்து
கசிந்து கொண்டேயிருக்கும்
நிலைக்கு வந்தாயிற்று
சிவப்பைப் பார்த்து அஞ்சி
சீர்கெட்ட மருந்துச் சொட்டுகள்
இறங்கி இறங்கி
தொண்டைவரை கசப்பு
மூன்று நிமிட ரத்தக் கொதிப்புகளை
ஒவ்வொரு நாளும் கடந்து கடந்து
அழுத்தமானியின் பட்டை இறுகுவதேயில்லை
இப்போதெல்லாம்
காறித் துப்பி
வெளியேற்றவேண்டிய கோழை களை
மென்று விழுங்கும் இந்நோயின்
பெயர் நடுநிலை என்கிறார் நண்பர்

மருதநிலத்துக் கொற்றவை

 அப்போதெல்லாம் பார்த்திராத

வெடிப்புரேகைகள் இன்று கண்டேன்.

சேற்றையோ நாற்றையோ சுற்றிக்கிடக்கும் அவள் பாதங்கள்
புடைத்த நரம்புகளோடு
வெளிறிக் கிடக்கின்றன
நகரத்தின் முற்றத்தில்
ஈரமிலா
நரகம் என்று திருத்துகிறாள்
என் பிள்ளைகளின் சேடியான
மருதநிலத்துக் கொற்றவை
வரப்புக்குள் கூட அணியாத செருப்பை
கூடத்துக்குள் அணிந்து சுற்றும்
இந்த ஊரை அப்படித்தான் பார்க்கிறாள்
பேரப்பிள்ளைகளின் கடைவாய் எச்சிலால்
தொண்டை நனைத்துப் பிழைக்கும்
மூதாய்

அவள்களின் உலகம்

 கால்படி புளியோதரை கிண்டி

வழிச்சோறு தயாரானாலும்
ஒரு கிண்ணம் எதிர்வீடு
ஒரு கிண்ணம் அடுத்த வீடெனத் தூக்கிப் போகிறவள்
திணறித்தான் போனாள்
அத்துவானப் புது வீட்டில்
இப்போது பழகிவிட்டது
எதிர்ப்படும் முகத்தை
சலனமின்றிப் பார்க்க
**************************************
பொன்னாங்கண்ணியை ஆய்ந்து ஆய்ந்து
நகக்கண் நோகும் வேளையிலும்
சமரசமின்றி
தாளிக்க சின்ன வெங்காயம் இருக்கும்
அம்மா
எழவெடுத்த சனியனே
ஏன் என் உயிரை வாங்குற
என்றபடியே
பின்னுமிரண்டு வெங்காயம் உரிக்கிறாள்
ரவோண்டு போட்டா
அந்த சனியனுக்குப் பிடிக்காதென ************************************************
என்ன செய்தால் எனக்கு வலிக்கும்
என்ன சொன்னால் எரியும்
எதைக்கண்டால் மிதப்பேன்
எதன் நுகர்வில் பறப்பேன்
எதுவும் தெரியாதுனக்கு

வியர்வைக் கசகசப்புக்காகக்கூட
நெகிழாத கைத்தலந்தான்
பிரமாதம் பிரமாதம்





தூர்ந்த கனவு

 நம்பிக்கொண்டிருந்தோம்

சாய்கிளையிலிருந்து
பன்னீர்ப்பூக்கள்
உதிரும்
எதிர் வீட்டுக் கிணற்றின் உள்ளே தெரிந்த ஓரிரு படிகள் வழிதான்
எங்கள் கதைகளில் உலாவும் தேவதைகள் ஏறி வருவார்கள் என
தெருவுக்கே தேவதையாக உலவிய
அமுதாக்காவை
ஆளும் பேருமாய் கிணற்றில் இறங்கித் தூக்கி வந்தபிறகு
தூர்ந்துபோனது
எங்கள் கனவுகளோடு
கிணறும்

வாழ்க்கை

    அந்த தோல் ரத்தத்தின் கவிச்சி வெளியே கசிந்துவிடாமல் போர்த்தி வைத்தது

குறுக்குமறுக்காக ஓடும்
சிறுநரம்புகள்
வெளிப்படும் நிழல்தான் உங்கள் பார்வைக்குத் தெரியும்
நவீன படிமச்சித்திரம் ********************************************
யோசனைகளுக்கென நகங்கள் இருந்திருந்தால்
சுரண்டி ,கிள்ளி,
உதறி உதறி
இந்நேரம் முழுசாய்
உதிர்ந்திருக்கலாம் ****************************************

மொடமொடக்கும்
ஆர்கன்சாவை
மதுரை சுங்கடியை
லுக்கிங் கிரேட் வாங்குமுன்
அடக்கி மடக்கி...
அடக்கி மடக்கி...
அவரவர் வாதை ********************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...