திங்கள், அக்டோபர் 25, 2021

சற்றே மலர்

 நேற்றைய கொடியரும்புகளை

நீ
மறந்துபோனதை
நினைவில் வைக்காது
இன்றும் அரும்பு கட்டியபடி ஆடுகிறது கொடி
பச்சை இருக்கும்வரை அது அப்படித்தான்
****************************************
குறுகுறுவென்ற
யோசனையோடே
உன்னைப் பார்ப்பது
உன்னாலல்ல
முந்தைய தூசிக்கணங்கள் வாழ்வில் அதிகம்
கடுக்கென்று பல்லிடுக்கில் மாட்டிய நாள் வலியில்
விதையற்ற கனிகளையே நாடும் பிழைப்பானதே

*******************************************
அப்படியும் இப்படியுமாக ஓடிக்கொண்டிருக்கும்
என்னை உறுத்துப் பார்த்தபடி
சமர்த்தாய் என்றும்போலிருக்கிறது
குட்டிமேசை
உருண்டு
குடுகுடுவென்று குறுக்கே விழுந்து
வழிமறிக்கிறது
கல்யாணப்பை சாத்துக்குடி
மிதிக்காமல் அப்படியும் இப்படியும்
ஓடவும் பழகிக்கொண்டாச்சு
******************************************
எனக்குப் பிடிக்கிறதென்றுதான் செய்தேன்
அதற்காக
உன் மெய்ப்பாடு
கருத மாட்டேனா என்ன
சற்றே மலர்
**************************************

கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்

 என்னென்ன சேர்த்தாய் என்று நானே சொல்லவா

வலி,துரோகம்,
ஆற்றாமை,அழுகை,
துன்பம் எல்லாம் இடித்துப் பிசைந்த ஒற்றை உருண்டை
இலையில் வைத்தபின் எதற்கு யோசனை
அங்காளியின் தொண்டைக்குழி தாங்கும்
போடு திரியை
ஊற்று நெய்யை
******************************************


திருவிழா வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு சேர்த்த உண்டியல்
கனத்துக்கிடக்கிறது
இன்னொன்று வாங்கச்சொல்லும்
உன் நம்பிக்கையை
நான் விழுந்து கிடக்கும் புதைகுழிக்குள் சற்று வீசுகிறாயா
*************************************************
ஏறு பொழுதில் ஏறிய மலையின்
தெய்வமே
இறங்குபொழுதில்
யாரோடு இறங்கிப் போனாய்
இறங்குபொழுதில்
இறங்கித் தொழவந்த
வனத்தின் நீலியே
உறங்குபாவனையில்
என்னைத் தவிர்க்காதே
வெறியாட்டின் முழக்கமல்ல
உச்சாடனத்திலிருப்பதெல்லாம்
கையறு சொல் **************************************

தானமிட்டது நானல்லோ

 தீர்க்க சிந்தனை புத்தன் சிலையில்

மூக்கு தீர்க்கமாக இருக்கும்படி அமைத்துவிட்டால்

போதுமாயிருக்கிறது இவ்வுலகுக்கு
அச்சு அசல் புத்தனாம்

**************************************
ஒரு குண்டுமணியளவு குறைந்துவிட்ட துயரத்துக்காக
எத்தனைமுறை விழுந்து கும்பிட்டேன்
நினைத்துப் பார்க்கையில்
உச்சியில் மலை
**************************************************
எப்படியும் எதிர்பார்க்கதான் போகிறாய்
ஆனாலும் ஒரு வீம்பு
ஒன்றும் தெரியாதது போல
எதிர்பார்க்கிறது
தெரிந்த பக்கத்திலும் அதே வீம்பு
பரம்பரை வியாதிக்கு பண்டுவம் சொல்லவும் ஒரு ஆள்

*******************************************************************
கைப்பிடிக்குள் கிடந்த தானியங்களை விசிறிவிட்டதும்
படபடக்கும் இறகுகளோடு
கொத்தியும் பறந்தும் குருவிகளின் அலமலப்பு
யாரும் கவனிக்கவில்லையே
என்றொரு ஆவலாதி
பின்னே
தானமிட்டது நானல்லோ
***********************************************************

உன் மலர்ச்சாடியில் என் வானம்

 அது பிளம்சா திராட்சையா என்ற சந்தேகம்

தின்னும்வரை இருந்தது

இப்படி ஏதாவது ஒரு கட்டம் உன்னை உணர்ந்துகொள்ள வழியிருக்கா *********************************************
காரை பெயர்ந்த சிமிண்டுத் திண்ணையில்
ஈரத்தோடே வரைந்துவைத்த
தாயக்கட்டத்தின் மேல்
சாக்பீசால் கோடு போட்டுவிட்டுத்
தயாராக இருப்பாள் பொன்னு அத்தை
தோற்றுப்போகத் தயாராக இருந்தும்
கூடவர
ஆளற்றுப்போன
காலத்துக்குப்பின்
இருபக்கத்துக்காகவும்
தாயக்கட்டை உருட்டும் லாவகம்
கற்றாள்
சிமிண்டுத்திண்ணை தகர்த்து
அறையாக மூடிக்கொண்டபின்
அவள் அறைக்குள்
தாயக்கட்டை
பழைய பெட்டிக்குள்
***********************************************
விரிய விரியத் திறந்துகிடந்த என்வீட்டு வானம்
உன்வீட்டு வரவேற்பறை மலர்ச்சாடிக்குள் ஒடுங்கி அமர்ந்திருப்பதாக சத்தியம் செய்கிறாய்
அது எப்படி
என்னால் முடியும் என்று வேறு சிரிக்கிறாய்
பதிலுக்கு
சிரிப்பதா சண்டையிடுவதா தெரியவில்லை
*****************************************************************

எதுக்களிக்கும் நினைவுகள்

       உச்சிக்கேசத்தை இழுத்துப்பிடித்து ரப்பர்பாண்டுக்குள் சிறைப்படுத்தி

குட்டிப் பூச்சரத்தையும் செருகி
நெட்டிமுறிக்கும் அம்மைக்கு
அபிக்குட்டி
வைக்கிறாள் திருஷ்டிப்பொட்டு
அவள் அபிக்குட்டியாயிருந்த காலம்வரை
இழுத்துப்போகிறது அந்த மைத்தடம்

வேப்பங்குச்சி செருகிய காதுகளோடு
கயிறுகட்டிய சீசாவில் எண்ணெயும்
கடனில் பெற்ற அங்காடி அரிசியுமாக
ஓடிவந்த அம்மைக்காக
ஈரச் சுள்ளிகளோடு சுருண்டிருந்த தருணத்தின் பசி
நினைவில் எதுக்களிக்கிறது
பிரியாணி இறங்காமல்
கை கழுவி எழுபவனுக்கு
யார் வீட்டிலோ கிண்டியதைக்கூட
பொலவுசோறு என்று சொல்லத்தான் தெரியும் அம்மைக்கு
தனித்தனியாய் வாங்க ஏனமின்றி
பழங்குழம்பு ரசத்தோடு
ஒருக்களித்துக்கிடந்த பொலவுசோறும்
இவன் முகச்சுளிப்பும்தான்
அங்காடி அரிசிக் கஞ்சி
என்ற அத்தியாயத் துவக்கமென்பதை
நா
மறக்கவில்லை

அந்தர முடிச்சுகள்

 கைப்பிடிகளை

ரசிக்கிறாய்
பின் அதிசயம் போல
இன்னும் இதெல்லாம் இருக்கிறதா என்கிறாய்
உண்மையிலேயே
உருவி எடுத்த குறுவாளிலிருந்து சொட்டும் ரத்தம்
உன் கண்ணில் படாதபடி
எது மறைக்கிறது...
செய்வினை எடுக்கலாம் வா என்கிறாளே இவள்
நிசந்தானா *************************************
மரணக்கிணறு தாண்டும்
மோட்டார் சைக்கிளுக்கும்
கொல்லைக் கிணற்றடியில் துருத்தி நிற்கும்
சவலை வாழைக்குமான
முடிச்சுகளை
அந்தரத்தில்
வெகு வேகமாகப் போட்டுக்கொண்டே போகிறான்
அந்த வேலையற்றவன்
இந்தா ரெண்டு கிடுகு சொருகிவிடு
என்று சிபாரிசோடு
பின் ஓடுகிறீர்கள்
வள்ளல் பெருமக்களே
புண்ணியக் கவலை உங்களது


*******************************************
சிறுநாணச் சிரிப்போடு
அவன் தரும் கரும்புச்சாறு குவளையைப்
பெற்றுக் கொள்கிறாள்
நிறநிறமாய்க் கண்ணாடிவளை நிரம்பிய கைக்காரி
அடுத்த வாடிக்கையாளருக்கென
இஞ்சித்துண்டைத் தள்ளியபடி
இவள் நாணத்தை ருசித்துக் கொள்கிறாள் கடைக்காரி
குவளை நிரம்பும் அவகாசம்

ஞாயிறு, அக்டோபர் 10, 2021

பெருவாழ்வே

 நறநறவென

குழல்விளக்குகளைக் கடித்துத் தின்பவனைப் பார்த்து வியந்தபோது
ஒரு வளையத்தில்
காலும்
இன்னொரு வளையத்தில் கையுமாகத் தாவிய
பார் விளையாட்டுப் பெண்ணை அண்ணாந்து பார்த்தபோது
பெட்டிக்குள் பெண்ணையனுப்பி
முயலை வரவழைத்தவனுக்காகக் கை தட்டியபோது
அறியவில்லை
அத்தனையும்
செய்வேனென்று
கண்ணீர்த் துளியத்தனையும்
இருளில் முகவரிதவறி
நிலவு சொட்டிய
பனித்துளி
என நான் சொல்லவும்
நீங்கள் நம்பவும்...

என் பெருவாழ்வே....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...