புதன், அக்டோபர் 07, 2020

கண்ணாடிகள்

 நீங்கள் பிறந்த மாதம் சொல்லுங்கள்

உங்களைப்பற்றிச்
சொல்கிறேன்
ஆடு பிடிக்குமா
கோழி பிடிக்குமா
உங்களைப் பற்றிச்
சொல்கிறேன்
உங்கள் கைகள்
உங்கள் கட்டங்கள்
எதை வைத்தாவது
உங்களைப் பற்றித்
தெரிந்து கொண்டுவிட முடியாதா என்றுதான்
உங்கள் தவிப்பும்
பாவம் நாம்
கண்ணாடி இல்லா உலகில் பிறந்தவர்கள்
***************************************

முழு முதுகும் தெரிய
முடிச்சோடு முடிந்த ரவிக்கையுடன் ஒசிந்து நிற்கும் ஒருத்தியின் கண்ணாடி முன்னான படம்
பூத்தைத்த சடையோடு புகைப்பட நிலையக் கண்ணாடிமுன் கைகால்களைப் பக்கப்பதிய வைத்தபடி உறைந்து நின்றவளின் 2.0 என் மனசுக்கு
*****************************************

தூரத்தில் வேர் நுனி

புதிய பசிய கறிவேப்பிலையை ஈர்க்கிலிருந்து சரசரவென உருவி கொழுந்துமல்லித் தழைகளையும் சேர்த்துக் கொதிக்கும் ரசத்தில் போடும் கையா

நீரூற்றிக் களையெடுத்தது *********************************************
மழுமழுவென மின்னும் பீங்கான்
தொட்டியிலிருந்து கிள்ளிவந்த மணிபிளாண்டுக்கு
பழைய பால் பாட்டிலோடும் பேதமில்லை
*********************************************

நட்சத்திரம் இறைந்த துப்பட்டா வாங்கியபோது நினைக்கவில்லை
வானத்தை இப்படிப் போர்த்திக் கொள்ளமுடியுமென்று ************************************** தினம் நடக்கிற வழிதான்
தினம் வருகிற வெயில்தான்
என்றாவதுதான்
நிமிர்ந்து பார்க்க வாய்க்கிறது
கை வைத்து மறைத்தபடியாயினும்
*************************************
விதைத்தது நீ என்று உலகு அறியும்
வேரின் நுனி
உன் கையில்
என்ற ரகசியம் எனக்கு மட்டும்

நாஸ்டால்ஜிக் உடைமை

 எப்படி இருக்கிறாய்

என்ற கேள்வியை
பதிலை எதிர்பாராது கேட்டு
நகர்ந்தும் விடுகிறீர்கள்
யாரிடம் போய்ச் சேர்வது என்று அலைகிறது
நல்...என்று தொடங்கிய மறுமொழி
அதன் முடிவு எனக்கும் தெரியவில்லை

****************************************************
புறங்கையால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டு
எழுந்துபோகிறாள்
துடைக்குமுன் வழிந்து காய்ந்து கிடக்கும் கண்ணீரின் பிசுபிசுப்பு
வியர்வையில் கரைந்துவிடும்
முடிந்தால்
பாத்திரம்
எதையாவது நங்கென்று வைக்கலாம்
நெஞ்சு பாரம் குறைய ***************************************************
கால்சட்டைப் பையிலிருந்த கோலிக்குண்டுகளை
கல்லூரிக்கால
கால்சட்டை சீப்பினை
நினைத்துக் கொள்வது போலத்தான் நினைத்துக் கொள்கிறாய்
இருப்பு தெரியாது அவளையும்
நாஸ்டால்ஜிக் உடைமை

அவியும் நினைவு

      யாரைப்போல இருக்கிறோம் பச்சைப் பிள்ளையாக இருந்தபோதாவது யாருக்கேனும் தெரிந்தது

****************************************

யாரைப்போலவும் இருக்க வேண்டாம் உதறி உதறி உதறிய வேகத்தில் யாருக்காவது தோன்றி விடுகிறது எங்கோ விழுந்த உதறல் ***************************************

புழுக்கிய நெல்லாக
திராவிக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளை
அவித்த வாசம் போச்சு
கொஞ்சம் ஈரம் மிச்சம்
*****************************************
எதற்காகவோ
யாருக்காகவோ
சொற்களை
விழுங்கி
சொற்களைத் துப்பி
விழுங்கி
துப்பி
இலையுதிர் காலமே....

********************************
எனக்கு புல்வெளி
உனக்கு
மேய்ச்சல் நிலம்
அவனுக்கோ சதுரமீட்டர்
கிண்டியபடி
நகரும் கோழி
இங்கே
வருவதேயில்லை
*******************************
ரகரகமாய்க்கட்டத்
தெரிந்து கொண்டேன்
ஒருமுறை கூடப்
பூக்கும் தருணம் தெரியவில்லை
அரும்பாகத்தான்
கிடக்கிறது
கடை மேடையில்



உடையும் எழுத்தாணி

     வீட்டை விற்று

மனையை விற்று
வயலை விற்று
மொத்தமும் பணமாக கட்ட வேண்டுமெனச்சொல்லும்
எந்த சன்னலுக்கு முன்னாலும் நிற்கத் திராணியற்ற
தாய் தகப்பனுக்குப் பிறந்த
கல்லூரி விடுப்பில்
நடவுக்குப்போன
செங்கல் சுமந்த
பொட்டலம் கட்டிய
மருத்துவர்களையும்
பொறியாளர்களையும்
அறியப்போவதில்லையா
அடுத்த தலைமுறை
பிள்ளை படித்த எழுத்து
அப்பனுக்கு சட்டை போட
செருப்பு போட
உரிமையளித்ததெல்லாம்
பழங்கதையா
அரசின் காலணி
அரசின் சீருடை
அரசின் சோறு
தந்து ஆளான பிள்ளைகளை
பச்சை மசிப்பேனாவோடு
பார்க்கப் பொறுக்கலையா
என்னோடு தெருவில் நிற்கும்
உனக்கும் தெரியாமல்
உன் துணியை இழுத்துவிட்டு
அதுதான் சிறப்பென்று உன்னையே கைதட்டவைக்கும்
அழும்புதான்
தாங்கவில்லை

 

ஒரு சமாதானத்துக்காகவாவது
சொல்லலாம்
என் கோபம் உன்மேல் இல்லையென்று
தன்பாட்டுக்கு
வாகனம் முடுக்கிப் போகிற எசமான்
திரும்பும் வரை
தொய்ந்த முகத்தோடு கிடந்து
நுழைந்ததும் வாலாட்டித்திரிய வேண்டுமோ

******************************************************

 

தனியாக இருக்கிறாயா

 அவசரமாக மூக்கை உறிஞ்சிக் கொள்வதைக் கவனித்து கைக்குட்டையை நீட்டும்

பித்தவெடிப்பின் வலிக்கு விளக்கெண்ணெயும் மஞ்சளும் பூசிப்புரண்ட படுக்கை விரிப்பைத் தனியாகத் துவைக்கும்
மூன்றுநாள் மூர்க்கத்துக்கு எதிர்ச்சண்டை போட்டுவிட்டு
முடியலன்னா சொல்ல வேண்டியதுதானே
ஏன் விழுந்து பிடுங்கணும் என முணுமுணுத்தபடி
உணவுப்பொட்டலத்தோடு திரும்பும்
பிள்ளைகளோடு
போகும் பொழுதுக்கு
பங்காளிச்சண்டை வளர்த்து
அந்தக்கையோடே மகவைத்
தலைக்குமேல் தூக்கிப்போட்டுப்பிடித்து
தன் உரிமையை நிலைநாட்டும்
வாழ்வை
வாழாத எவனோதான்
கண்டுபிடித்திருப்பான்
ஏழு இலக்க எண்ணை அனுப்பி
உறவு பற்றிப் பேச வா
என்றழைக்கும்
பரிதாபத்தை

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...