கார்களைப் பார்த்தவுடன் பெயர் சொல்லக் கற்றிருக்கிறான் ஒரு சிறுவன்
உலக உருண்டையைச் சுற்றிவிட்டு
ஒவ்வொரு நாட்டின் இடமும் சொல்கிறாள் ஒரு பாப்பா
நூறு கொடிகளின் தேசத்தையும்
படபடவெனச் சொல்வான் இன்னொருவன்
குறளைத் தலைகீழாக ஒப்பிப்பாள் ஒரு சிறுமி
புதிதாக வரும் புயல்களுக்குப் பெயரிட்ட பின்
வலுவிழந்த புயலோ
கரையேறிய புயலோ
என்ன ஆனதென்று தெரிவதில்லை
*************************************
விளிம்பு உடைந்த கண்ணாடிக்குவளையைப்
பூச்சாடியாக்கலாம்
கறைபடிந்துவிட்ட கோப்பைகளுக்குள்
உட்காரப் போட்டியிடுகின்றன
ஸ்பூன்கள்
மரை குறைந்த பாட்டில்களை
மூடிதொலைந்த டப்பாக்களைக் குட்டித்தோட்டமாக்கி
கொத்துமல்லி,புதினா வளர்க்கலாம்
அள்ள அள்ளக் குறையாத ஐடியாக்களால்
ஒன்றும் செய்ய முடியாதது
உன்னை மட்டுந்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக